கோப்தா வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்நாக்ஸ். கோப்தா என்பது வடை, பஜ்ஜி போன்று, எண்ணெயில் பொரித்து எடுக்கும் ஒரு வகையான ஸ்நாக்ஸ் தான். இந்த கோப்தாவில் நிறைய வகைகள் உள்ளன. அவை பன்னீர் கோப்தா, வெஜிடேபிள் கோப்தா, கீரை கோப்தா, சோயா கோப்தா என்பன. இப்போது அந்த வகையான கோப்தாவில் ஒன்று தான் சுரைக்காயை வைத்து செய்யப்படும் கோப்தா. கோப்தாவை குழம்பு போன்றும் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் இப்போது அவற்றை ஸ்நாக்ஸாகவும் செய்து சாப்பிடலாம்.
அதிலும் சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், அதனை வைத்து வித்தியாசமாக கோப்தா செய்து சாப்பிடலாம். இப்போது அந்த சுரைக்காயை வைத்து செய்யப்படும் கோப்தாவை படிப்படியாக எப்படி செய்வதென்று படங்களுடன் தெளிவாக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, மாலை வேளையில் ஸ்நாக்ஸாக செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - 500 கிராம்
கடலை மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - 1 கொத்து
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1 முதலில் சுரைக்காயை நன்கு கழுவி, அதன் தோலை சீவி, துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
3 கொத்தமல்லியையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
4 பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
5 பின்பு ஒரு பாத்திரத்தில் துருவிய சுரைக்காய், கடலை மாவு கலவை, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6 பிறகு அதனை வடை பதத்திற்கு தண்ணீர் ஊற்றி பிசைந்து, எலுமிச்சை அளவில் உருட்டி ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
7 அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருட்டி வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
8 இதேப் போன்று அனைத்து கலவையையும் பொன்னிறமாக பொரித்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
9 இதோ சுவையான கோப்தா ரெடி!!! இதனை புதினா சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.