மாலை வேளையில் சிலருக்கு அசைவ உணவுகளான மட்டன், சிக்கன், மீன் போன்றவற்றை வைத்து ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அவ்வாறு தோன்றும் போது அனைவரும் உடனே கடைக்கு சென்று சிக்கன் 65, கபாப், ஃபிஷ் ப்ரை, ஃபிங்கர் ஃபிஷ் என்று வாங்கி வந்து சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறு வாங்கி வந்து, சாப்பிடுவதை விட, உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் மட்டனை வைத்து ஒரு எளிமையான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம்.
அதிலும் இதனை குழந்தைகளுக்கு பிடித்த வகையில் மட்டன் கீமாவை வைத்து ஃபிங்கர் ஃபிஷ் போன்று செய்து கொடுத்தால், குழந்தைகள் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த மட்டன் கீமாவை வைத்து செய்யும் ஸ்நாக்ஸிற்கு பிரெஞ்ச் ஸ்டிக்ஸ் (French Sticks) என்று பெயர். சரி, அதனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மட்டன் கீமா - 1 கிலோ
இஞ்சி பூண்டூ பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
முட்டை - 3
பிரட் - 1
பவுண்ட் பால் - 1 கப்
பிஸ்கட் - 500 கிராம் (பொடி செய்தது)
எண்ணெய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒர வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, மட்டன் கீமாவைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.
மட்டனானது மென்மையானதும், அதனை இறக்கி, தண்ணீரை வடித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காய பேஸ்ட், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, தனியாக வைத்துள்ள கீமாவை சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி, இறக்கி வைக்க வேண்டும்.
பின்பு ஒரு சிறிய பௌலில் பிரட், பிஸ்கட் பொடி மற்றும் பால் சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து, மற்றொரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு மென்மையாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய வைக்க வேண்டும்.
எண்ணெய் காய்ந்ததும், கீமாவை நீளமாகவும், சற்று தடிமனாகவும் உருட்டி, முதலில் முட்டையில் நனைத்து, பின் பிரட் கலவையில் நனைத்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து கீமாவையும் பொரிக்க வேண்டும்.
இதோ சுவையான ருசியில் பிரெஞ்ச் ஸ்டிக்ஸ் ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.