ஆலு பாலக் என்றதும் கஷ்டமான ரெசிபி என்று நினைக்க வேண்டாம். இது வேறு எதுவும் இல்லை, உருளைக்கிழங்கு மற்றும் பசலைக் கீரையை வைத்து செய்யப்படும் ஒருவித கிரேவி தான். அந்த கிரேவி செய்வது என்பது மிகவும் எளிது. அதிலும் இதனை ஆரோக்கியமான முறையில் மதிய வேளையில் சாதத்திற்கு செய்து சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
சரி, இப்போது அந்த ஆலு பாலக் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3 (ஓரளவு நறுக்கியது)
பசலைக் கீரை - 250 கிராம் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பூண்டு - 4-5 பற்கள் (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1/3 கப்
செய்முறை:
முதலில் பசலைக் கீரையை தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் நறுக்கி கழுவி வைத்துள்ள பசலைக் கீரையை போட்டு கிளற வேண்டும்.
பின்பு பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, நன்கு பிரட்ட வேண்டும். பிறகு உப்பு, மஞ்சள் தூள் போட்டு, 2 நிமிடம் கிளற வேண்டும்.
இப்போது நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, மிளகாய் தூள், மல்லி தூள் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
அனைத்து பொருட்களும் நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் கிரேவிக்கு தேவையான தண்ணீர் ஊற்ற வேண்டும். பின் குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து விசில் போனதும், திறந்து அதன் மேல் மாங்காய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
இப்போது சுவையான ஆலு பாலக் ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.