Author Topic: இருமலுடன், காய்ச்சல் இருக்கா? அப்ப இந்த டயட் சரியா இருக்கும்!!!  (Read 757 times)

Offline kanmani

பொதுவாக காய்ச்சல், இருமல் போன்றவை குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் மட்டும் தான் அதிகம் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் இவை அவ்வாறு குளிர்ச்சியான காலங்களில் மட்டும் வருவதில்லை. சிலருக்கு இந்த காலங்களை தவிர, காலநிலை மாறுபாட்டினாலும் ஏற்படும். சொல்லப்போனால், இது ஒவ்வொருவரும் தினமும் அனுபவிக்கும் ஒருவித பிரச்சனை தான். இதனை சரியான முறையில் கவனித்தால், இதிலிருந்து எளிதில் விடுபடலாம்.

சிலர் இந்த பிரச்சனை வந்தால், அதிகம் சாப்பிடாமல், வெறும் வெள்ளை சாதம் மட்டும் சாப்பிட்டு, பழங்களில் சிலவற்றை தவிர்த்து இருப்பார்கள். ஆனால் உண்மையில் அவ்வாறெல்லாம் தவிர்த்தால், இந்த நேரத்தில் உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல், நோய் எதிர்ப்பு சக்தியானது குறைந்து, பின் இந்த பிரச்சனை நீண்ட நாட்கள் தொடரும்.

எனவே இத்தகைய பிரச்சனையை விரைவில் குணமாக்குவதற்கு, கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிடாமல், மருத்துவரை அணுகி சரியான மருந்துகளை உட்கொண்டு, அதனை போக்கும் ஒருசில செயல்களையும் பின்பற்றி வந்தால், நிச்சயம் காய்ச்சல் மற்றும் இருமலை தவிர்க்கலாம். அத்தகைய செயல்களில், குறிப்பாக சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில், இந்த நேரத்தில் டயட் தான் மிகவும் முக்கியம். அவ்வாறு சரியான டயட்டை மேற்கொண்டால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, விரைவில் சரிசெய்துவிட முடியும்.

ஆகவே அத்தகைய டயட்டில் எந்த உணவுகளையெல்லாம் சேர்க்க வேண்டும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, காய்ச்சல் மற்றும் இருமலில் இருந்து விடுபடுங்கள்.

மூலிகை டீ

 மூலிகை டீயை குடித்தால், காய்ச்சலில் இருந்து விடுபடலாம். அதிலும் அந்த டீயில் சிறிது துளசி இலைகள் மற்றும் இஞ்சியை தட்டிப் போட்டு, சிறிது மிளகு தூள் சேர்த்து கலந்து குடித்தால், காய்ச்சல் மற்றும் இருமலில் இருந்து விடுபடலாம்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, சிகரெட் பிடிப்பதனால் ஏற்படும் இருமலில் இருந்தும் விடுபடலாம். மேலும் வைட்டமின் சி சிட்ரஸ் பழங்களில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கு, குடை மிளகாய், ஸ்ட்ராபெர்ரி மற்றும் அன்னாசி போன்றவற்றிலும் இருப்பதால், இவற்றையும் அதிகம் சாப்பிட்டால், இருமல் மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமாக முடியும்.

பூண்டு

பூண்டுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால், இதனை அதிகம் சாப்பிட இதய நோயை குணப்படுத்த முடியும். ஆனால் அதற்காக அளவுக்கு அதிகமாக சேர்க்காமல், அளவாக உணவில் சேர்த்து வருவது நல்லது.

சிக்கன் சூப்

நிறைய மக்கள் சளி, இருமல் போன்றவை பிடித்தால், உடனே சிக்கன் சூப் குடிப்பார்கள். ஏனெனில் இதனை குடித்தால், உடனே உடலில் எனர்ஜி அதிகரிப்பதோடு, சளி மற்றும் இருமலால் ஏற்படும் மூக்கடைப்பு போன்றவை விடுபட்டு, நிம்மதியாக மூச்சுவிட முடியும். மேலும் இதில் அளவுக்கு அதிகமான சக்திகள் நிறைந்திருப்பதால், இதனை காய்ச்சல் இருக்கும் போது சாப்பிட்டால் குணப்படுத்திவிடலாம். அதிலும் அவ்வாறு தயாரிக்கும் சூப்பில், அதன் சுவையை இன்னும் அதிகரிப்பதற்கு, ஒருசில விருப்பமான காய்கறிகள், பூண்டு போன்றவற்றையும் சேர்த்தால், இதன் சக்தி இன்னும் அதிகரித்து, உடனே அதற்கான தீர்வானது கிடைத்துவிடும்.

சூடான மற்றும் காரமான உணவுகள்

கார உணவுகளை சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு, காய்ச்சல் இருக்கும் போது சிறிது சாப்பிட்டால், விரைவில் சரிசெய்துவிட முடியும். அதற்காக தான் சில மக்கள், இந்த நேரத்தில் காரமான உணவுகளை சாப்பிடுகின்றனர். மேலும் அத்தகைய உணவுகள் காய்ச்சலால் உடலில் ஏற்படும் ஒருவித நெரிசலைத் தடுக்கும். எனவே காய்ச்சல் இருந்தால், பூண்டு மற்றும் மிளகாய் அதிகம் சேர்த்து சமைத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.

இஞ்சி

மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும். அதிலும் இந்த இஞ்சியை வைத்து, டீ செய்து குடித்தால், விரைவில் இருமல் மற்றும் காய்ச்சலை குணப்படுத்திவிடலாம்.

பானங்கள்

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகம் நீர் குடிக்க வேண்டும். இல்லையெனில் ஏதேனும் பழச்சாற்றை குடிப்பது நல்லது. ஏனெனில் இந்த நேரம் அதிக அளவில் நீர்ம பானங்களை குடிக்க முடியாது. எனவே உடலில் வறட்சி ஏற்படும். எனவே இத்தகைய வறட்சி உடலில் ஏற்படாமல் இருப்பதற்கு, அடிக்கடி தண்ணீர் அல்லது ஜூஸ் குடிப்பது அவசியம்

வைட்டமின் பி6 மற்றும் பி12

வைட்டமின் பி6 மற்றும் பி12 உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட்டால், அந்த வைட்டமின்கள் உடலில் பாதிக்கப்பட்டுள்ள செல்களை சீராக வைக்கும். அதேசமயம் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளும் சிறந்தது. எனவே மீன், பால், சோயா பால், செரில், பசலைக் கீரை மற்றும் வான்கோழி போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

தூக்கம்

ஆம், தூக்கம் உடலை புத்துணர்ச்சியுடன் மட்டும் வைக்காமல், இருமலில் இருந்தும் குணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. எனவே தினமும் நல்ல 8 மணிநேரம் தூக்கம் கொள்வது அவசியம்.

ஜிங்க் உணவுகள்

 ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த ஜிங்க் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே ஜிங்க் அதிகம் உள்ள அசைவ உணவுகளில் கடல் சிப்பி, மாட்டிறைச்சி மற்றும் கோழியும், சைவ உணவுகளில் நட்ஸ், பருப்புகள் மற்றும் தானியங்கள் போன்றவற்றையும் சாப்பிட வேண்டும்.