Author Topic: கத்திரிக்காய் குழம்பு -- new method  (Read 674 times)

Offline kanmani

சாதத்திற்கு தொட்டுக் கொள்ள நிறைய சைடு டிஷ்கள் உள்ளன. பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது புளிக் குழம்பு தான். அத்தகைய குழம்புகளில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் அதில் கத்திரிக்காயை வைத்து செய்யக்கூடிய குழம்பானது மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் இதனை சாதத்துடன் பிசைந்து, மதிய வேளையில் சாப்பிட்டால், வயிறு நிறைந்துவிடும். மேலும் கத்திரிக்காய் குழம்பு செய்வதில் நிறைய முறைகள் உள்ளன.

இப்போது அவற்றில் ஒன்றான கத்திரிக்காயை வதக்கி செய்யும் முறையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:


கத்திரிக்காய் - 400 கிராம் (நறுக்கியது)
வெங்காயம் - 3 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
வர மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
புளி சாறு - 1 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய கத்திரிக்காயை போட்டு, 10 நிமிடம் வதக்கி, அதனை ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும்.

பின்னர் அதே எண்ணெயில் சீரகம், சோம்பு, வெந்தயம் மற்றும் வர மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும். அடுத்து, வெங்காயத்தை சேர்த்து நன்கு 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு பூண்டு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, இறக்கி குளிர வைத்து, அதனை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, தக்காளியை போட்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

தக்காளியானது நன்கு மென்மையானதும், அதில் புளி சாறு மற்றும் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான கத்திரிக்காய் குழம்பு தயார்! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.