ஃபலாஃபெல் செய்ய:
வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பூண்டு - ஒரு பல்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பார்சிலி / கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு
எண்ணெய்
ஷவர்மா செய்ய:
ரொட்டி - 4
ஃபலாஃபெல் - தேவைக்கு
மயோனைஸ் / தயிர் - தேவைக்கு
பிக்கில்டு வெஜிடபிள்ஸ் - சிறிது
தஹினி - சிறிது
கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊற வைத்து நீரை வடித்து விட்டு தோல் நீக்கிய பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து வடை மாவு பதத்தில் அரைக்கவும்.
அரைத்த கொண்டைக்கடலையுடன் உப்பு, கொத்தமல்லித் தழை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும்.
மாவு தயார். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு சிறு வடைகளாகத் தட்டி போட்டு இரண்டு பக்கமும் சிவக்க விட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான ஃபலாஃபெல் (Falafel) தயார். இதை அப்படியே ஹும்மூஸுடன் சாப்பிடலாம்.
பிக்கில்டு வெஜிடபிள்ஸ் இல்லையெனில் வெள்ளரி, கேரட் போன்றவற்றை விரல் அளவு துண்டுகளாக்கி எலுமிச்சை / வினிகரில் உப்பு கலந்து இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் ஊற வைக்கவும்.
ஷவர்மா செய்ய ரொட்டியின் நடுவே மயோனைஸ் / மிளகும், உப்பும் கலந்த தயிர் வைக்கவும். அத்துடன் பிக்கில்டு வெஜிடபிள்ஸ் வைக்கவும்.
அதன் மேல் தஹினி வைத்து மேலே ஃபலாஃபெல் வைத்து அதன் மேல் மீண்டும் சிறிது மயோனைஸ் வைத்து சுருட்டி விடவும்.
சுவையான வெஜ் ஃபலாஃபெல் ஷவர்மா (Veg Falafel Shawarma) தயார். ஒரு ஷவர்மா சாப்பிட்டாலே போதுமானதாக இருக்கும்.
ஃபலாஃபெல்லிலும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சீரகத்துக்கு பதில் சீரகத் தூள் சேர்ப்பார்கள் அல்லது சீரகத் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்ப்பார்கள். சிலர் மிளகாய் தூள் சேர்ப்பார்கள். சிலர் மிளகு பொடித்து சேர்ப்பார்கள். சிலர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்காமல் மாவுடன் சேர்த்து அரைத்து விடுவார்கள். ஒவ்வொன்றும் சுவையில் மாறுபடும். எனக்கு பிடித்த விதத்தை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.