Author Topic: ~ அதிகம் சாப்பிட்டால் ஞாபகம் குறையும் எச்சரிக்கை தகவல்!! ~  (Read 628 times)

Offline MysteRy

அதிகம் சாப்பிட்டால் ஞாபகம் குறையும் எச்சரிக்கை தகவல்!!




சாப்பாட்டை ஒரு கட்டு கட்டுபவர்களுக்கு இது கசப்பான தகவல் தான். அதிகம் சாப்பிடுவது பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக சக்தி குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மந்த புத்தி என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மை தான் என்கிறது, இந்த ஆய்வு.

இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டார்கள். 600 முதல் 1526 கலோரிகள், 1526 முதல் 2143 கலோரிகள், 2143 முதல் 6000 கலோரிகள் உணவு உட்கொள்பவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 3 பிரிவினரிடமும் ஒரு வினா- விடை கொடுக்கப்பட்டது. இதில் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் ஓரளவுக்கு விடையை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். 2வது வகையினர் அதை விட சற்று குறைவான பதிலையே கொடுத்துள்ளனர். 3வது வகையினர் மிக மிகக்குறைவான கேள்விகளுக்கே பதில் கூறியுள்ளனர். அதனால் அவர்களுக்கு ஞாபக சக்தி குறைவு ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் நீரிழிவு நோய், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படலாம். இந்த வரிசையில் ஞாபக சக்தி குறைவு, மனச்சிதைவு போன்ற நோய்களும் ஏற்படும் என்று புதிய ஆய்வு சொல்கிறது. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பது கணக்கல்ல. அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது என்பது தான் முக்கியம்.

நாற்பது வயதுக்கு மேல் ஆகி விட்டால் அதிகமான உணவு உட்கொள்வதை தவிர்த்து உணவு சாப்பிடும் வேளைகளை வேண்டுமானால் கூட்டிக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டாலும் ஆபத்து. சாப்பிடாமல் இருந்தாலும் ஆபத்து. எனவே மிதமான உணவை தினசரி 5 முறைகள் சாப்பிட்டால் நல்லது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அளவான சாப்பாடே ஆரோக்கியமான வாழ்வு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது உடலுக்கும் தீங்கு ஏற்படாது. ஞாபக சக்தியும் குறையாது.