Author Topic: கூந்தல் பராமரிப்பிற்கு உதவும் சிறந்த பொருட்கள்!!!  (Read 728 times)

Offline kanmani

அனைவருமே கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, நீளமாக, பட்டுப்போன்று, பொலிவோடு இருப்பதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஏனெனில் அழகில் கூந்தலும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே அத்தகைய கூந்தலுக்காக நிறைய அழகுப் பொருட்கள், தற்போதைய மார்க்கெட்டில் அதிகம் வந்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் கெமிக்கல் கலந்துள்ள பொருட்களாக இருப்பதால், அவை கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, இயற்கையான பொலிவை இழக்க வைக்கிறது.

ஆனால் எத்தனை அழகு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இயற்கைப் பொருட்களைப் போன்று எதுவும் இருக்காது. அதிலும் வீட்டில் இருக்கும் பொருட்களாக இருந்தால், அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை. உதாரணமாக, தயிர், எலுமிச்சை போன்றவற்றில் இருக்கும் நன்மைகளை விட சிறந்தது இருக்க முடியுமா என்ன? ஏனெனில் இத்தகைய பொருட்களில் எந்த ஒரு கெமிக்கலும் இல்லாததால், அவை கூந்தலை ஆரோக்கியமாக, பொலிவோடு வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் கூந்தலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக, பொடுகுத் தொல்லை, பொலிவிழந்த கூந்தல், வறட்சியான கூந்தல் போன்றவை. ஆகவே இத்தகைய பிரச்சனைகளைப் போக்கி, கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் கூந்தல் பராமரிப்பு பொருட்கள் சிலவற்றைப் பார்ப்போமா!!!

முட்டை

முட்டை நிறைய ஹேர் பேக்குகளில் பயன்படுகிறது. இத்தகைய முட்டை அனைத்து வகையான கூந்தலுக்கும் சிறந்தது. அதிலும் முட்டையுடன், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் பட்டுப் போன்றும், மென்மையாகவும் இருக்கும்.

வினிகர்

வறட்சியான கூந்தலை போக்குவதற்கு ஆப்பிள் சீடர் வினிகர் மிகவும் சிறந்த பொருள். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சிறிது ஊற்றி, அலச வேண்டும். இதனால் கூந்தல் வறட்சியின்றி, பொலிவோடு காணப்படும்.

தயிர்

பொடுகுத் தொல்லை, கூந்தல் வெடிப்பு, வறட்சியான ஸ்கால்ப் போன்ற பிரச்சனைகளைப் போக்குவதில் தயிர் சிறந்தது. எனவே இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள், தயிரை பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீர், ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போன்றவற்றுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளிக்கும் போது, ஸ்கால்ப் நன்கு சுத்தமாக இருப்பதோடு, அதிகமான வறட்சி இல்லாமலும் இருக்கும்.

எலுமிச்சை

ஸ்கால்ப் தொடர்பான பிரச்சனைகளைப் போக்குவதற்கு எலுமிச்சை பெரிதும் உதவும். அதற்கு எலுமிச்சையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

தேன்

தேன் கூந்தலை நரையாக்கும் என்று அனைவரும் பயப்படுகின்றனர். ஆனால் தேன் கூந்தலை பட்டுப் போன்று வைப்பதில் சிறந்த ஒன்று. மேலும் இது ஒரு சிறந்த நேச்சுரல் மாய்ச்சுரைசர் என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த தேன் கூந்தல் மற்றும் சருமத்தை வறட்சியின்றி, மென்மையோடு வைத்துக் கொள்ள உதவும்.

சோள மாவு

சமையலறையில் கிடைக்கும் அழகுப் பொருட்களில் சோள மாவும் ஒன்று. இத்தகைய சோள மாவை கூந்தலுக்குப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று மின்னும்.

அவகேடோ

 பொலிவிழந்து, வறட்சியோடு காணப்படும் கூந்தலுக்கு அவகேடோ மிகவும் சிறந்தது. ஆகவே அவகேடோவை வைத்து ஹேர் மாஸ்க்குகள் போட்டால், இத்தகைய பிரச்சனையை போக்கிவிடலாம்.