Author Topic: 10 வகையான சிக்கன் மசாலா ரெசிபிக்கள்!!!  (Read 2833 times)

Offline kanmani

அசைவ உணவுகளின் ருசியைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவு அதன் ருசியானது மறக்க முடியாத வகையில் மக்களை கவர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக அசைவ உணவுகளில் அனைவராலும் அதிகம் விரும்பி சாப்பிடுவது என்னவென்று பார்த்தால், அது சிக்கன் தான். ஏனெனில் பெரும்பாலான கடைகளில் சிக்கன் தான் அதிக வெரைட்டியில் இருக்கும். எனவே தான் பலரது மனதில் பிடித்த அசைவ உணவு என்று கேட்டால், அது சிக்கனாக உள்ளது.

சிலருக்கு சிக்கனில் 65 தான் பிடிக்கும். அதிலும் குழந்தைகளுக்கு தான். ஆனால் அவ்வாறு சிக்கனை எண்ணெயில் போட்டு பொரித்தால், அதனால் உடலுக்கு கேடு தான் விளையும். ஆனால் அந்த சிக்கனை எண்ணெயில் பொரிக்காமல், வேக வைத்து சாப்பிட்டால், சிக்கனில் உள்ள அனைத்து நன்மைகளையும் பெறலாம். எனவே சிக்கனை பொரிக்காமல், பல வகைகளில் மசாலா, குழம்பு என்று சுவையான முறையில் சமைத்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். அதிலும் வெரைட்டி வெரைட்டியாக செய்து சாப்பிட வேண்டும். எனவே தான், அத்தகைய சிக்கனை வைத்து எப்படியெல்லாம் மசாலா மற்றும் குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் என்று 10 வகையான சிக்கன் மசாலாக்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, உங்களுக்கு பிடித்ததை சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள்.



Offline kanmani

சிக்கன் மசாலா

எளிதான முறையில் சிக்கனை குழம்பு அல்லது மசாலா செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், இந்த சிக்கன் மசாலா சரியானதாக இருக்கும். இந்த மசாலாவை செய்வதற்கு கஷ்டப்பட தேவையில்லை. எளிதில் செய்துவிடலாம்.

இது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 தேவையான அளவு

சிக்கன் - 1/2 கிலோ
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

 பேஸ்ட் செய்வதற்கு...

முந்திரி - 6-7
பால் - 4-5 டேபிள் ஸ்பூன்

பவுடர் செய்வதற்கு...

பட்டை - 1
கறிவேப்பிலை - 10
கிராம்பு - 3

மசாலாவிற்கு...

பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 3/4 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு கழுவி, அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து, 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் முந்திரியை பாலுடன் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி, அதில் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, குளிரை வைத்து, பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

பிறகு மல்லித் தூள், சீரகத்தூள், மிளகுத் தூள் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி விட வேண்டும். பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

இவை அனைத்து ஒன்றாக சேர்ந்து, எண்ணெய் தனியாக வரும் போது, அதனை இறக்கி, குளிர வைத்து, பின் பேஸ்ட் போல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

 பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, ஊற வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு, தீயை அதிகரித்து, 4-5 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

 சிக்கனானது ஓரளவு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலா, முந்திரி பேஸ்ட் மற்றும் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு இறக்கிவிட வேண்டும்.

இப்போது காரசாரமான சிக்கன் மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.


Offline kanmani

சிக்கன் குருமா

சிக்கன் குருமா என்பது காரசாரமான இந்திய உணவுகளில் ஒன்று. இதனுடைய ஸ்பெஷல் என்னவென்றால், இந்த டிஷ்ஷில் தயிரை பயன்படுத்துவது தான். மேலும் இந்த டிஸ் மிகவும் காரசாரமாக இருக்கும். சிக்கன் பிடிக்காதவர்கள் கூட இந்த ரெசிபியை விரும்பு சாப்பிடும் வகையில், இது ஆளை இழுக்கும்.

 செய்முறை :

சிக்கன் குருமா என்பது காரசாரமான இந்திய உணவுகளில் ஒன்று. இதனுடைய ஸ்பெஷல் என்னவென்றால், இந்த டிஷ்ஷில் தயிரை பயன்படுத்துவது தான். மேலும் இந்த டிஸ் மிகவும் காரசாரமாக இருக்கும். இதை காரம் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மட்டுமல்லாமல், அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில், அதன் சுவை இருக்கும். இப்போது அந்த சிக்கன் குருமா எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 தேவையான பொருட்கள்:

 சிக்கன் - 1/2 கிலோ
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 8
 கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
 கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் கரம் மசாலா தூளைப் போட்டு பிரட்டி, சற்று நேரம் ஊற வைக்கவும். பச்சை மிளகாயை நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, அரைத்த பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி, பிசைந்து கொண்டு, அதனை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரை மணிநேரமோ அல்லது 10 நிமிடமோ ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காய் போட்டு வதக்கவும். பின் அந்த தேங்காயை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 மீதமுள்ள எண்ணெயில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும். பின்னர் அதில் பிசைந்து வைத்துள்ள சிக்கன் கலவையை போட்டு நன்கு கலக்கி, தீயை குறைவில் வைத்து, மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.

 பிறகு அதில் மல்லித்தூள், மிளகு மற்றும் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் சேர்த்து கிளறி, ஒரு கப் தண்ணீரை ஊற்றி, மறுபடியும் 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்கவும். இறுதியாக தயிரை ஊற்றி, வாணலியை மூடி 5-7 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

 இப்போது அருமையான சிக்கன் குருமா தயார்!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.





Offline kanmani

மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி

கோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர்களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது. குழந்தைகளும் வயதானவர்களும் கூட இதனை சாப்பிடலாம். சுவையானதும் சத்தானதும் கூட. எனவே இதை ட்ரை செய்து பாருங்களேன்.

கோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர்களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது. குழந்தைகளும் வயதானவர்களும் கூட இதனை சாப்பிடலாம். சுவையானதும் சத்தானதும் கூட. தேவையான பொருட்கள் சிக்கன் – அரைக்கிலோ சின்னவெங்காயம் - 100 கிராம் தக்காளி- 2 மிளகுதூள் – 4 டீஸ்பூன் சீரகத்தூள் – 2 டீஸ்பூன் வரமிளகாய் – 4 இஞ்சி பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன் தயிர் – 3 டீஸ்பூன் தேங்காய்பால் – ஒரு கப் உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை ஒரு கொத்து மல்லித்தழை சிறிதளவு
எண்ணெய் – 3 டீ ஸ்பூன் சிக்கன் கிரேவி

 செய்முறை

சிக்கனை பொடியாக நறுக்கி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி வைக்கவும்.

 அத்துடன் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

தக்காளியை சேர்த்து குழைய வேகவிடவும். இத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும். இதோடு வரமிளகாயை கிள்ளிப்போடவும்.

சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும். சிக்கன் ஊறவைத்ததால் வேகமாக வெந்துவிடும்.

சிக்கன் வெந்த உடன் அத்துடன் தேங்காய்பால் சேர்க்கவும். ஸ்டவ்வை மிதமாக எரியவிடவும். சிக்கன் கிரேவி பதத்திற்கு வந்த உடன் மல்லித் தழை தூவி இறக்கவும். மிளகு தேங்காய்பால் கிரேவி தயார்.

 சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள ஏற்றது. காரம் குறைவாக இருப்பதால் குழந்தைகளும் நன்றாக சாப்பிடுவார்கள்.


Offline kanmani

 தக்காளி சிக்கன்

கிரேவி சிக்கன் நன்கு புளிப்புடனும், வித்தியாசமான சுவையுடனும் இருக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு தக்காளி சிக்கன் கிரேவி சிறந்ததாக இருக்கும். இந்த முறையில் தக்காளி அதிகம் தேவைப்படும்.

தேவையான பொருட்கள்:

 சிக்கன் அரை கிலோ
பெரிய வெங்காயம் கால் கிலோ
பழுத்த தக்காளி கால் கிலோ ( ஆப்பிள் நாடு, )
மிளகாய்த் தூள் அரை டீ ஸ்பூன்
மிளகு அரை டீ ஸ்பூன்
சீரகம் அரை டீஸ்பூன்
பூண்டு 10 பல்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

 அரைக்க:

 சீரகம்,
மிளகு,
மிளகாய்த்தூள்,
பூண்டு,
தக்காளி,
ஆகியவற்றை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும்.

 நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். சிக்கனை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும். சிறிதளவு உப்பு போட்டு நன்றாக கிளறவும்.

 இதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை போட்டு நன்றாக வதக்கவேண்டும். அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிக்கனை சிம்மில் வேக வைக்கவும்.

சிக்கன் வெந்து எண்ணெய் மேலே மிதந்து வரும் போது ஸ்டவ்வை நிறுத்தி விடவும். மல்லித்தழை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

இது சாதத்தில் போட்டு சாப்பிடலாம், சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சூப்பர் தக்காளி சிக்கன் கிரேவி.


Offline kanmani

நாட்டுக் கோழி குழம்பு

 நாட்டுக்கோழியின் ருசியே அலாதியானது. அதன் சுவையும், மணமும் மதுரை மாவட்டத்தில் உள்ள பிரியாணி கடைகளில் தயாராகும் ஸ்பெஷல் குழம்பிலேயே தெரிந்துவிடும். அதிலும் நாட்டுக் கோழி உடலுக்கு மிகவும் சத்தானது. அதே சமயம், இதனை குழம்பு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

 செய்முறை

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி - 1 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 3 தேங்காய் பால் - 1 கப்
 மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன்
 குழம்பு மசாலா தூள் – 3 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி
சோம்பு - 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1கொத்து
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

மசாலா செய்முறை

சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

தக்காளியை நறுக்கி வைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

 இத்துடன் பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து நன்றாக வதக்கவும்.

 ஆறவைத்து மிக்ஸிசியில் மசாலாவாக நைசாக அரைக்கவும்.

குழம்பு செய்முறை

நாட்டுக்கோழியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். மஞ்சள் தூள், குழம்பு மசாலா சேர்த்து வதக்கவும். இதில் கோழியை சேர்த்து நன்றாக கிளறவும்.

அப்போது தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும். சிறிது நேரம் விசில் போடாமல் மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கிளறவும்.

 இதனுடன் தேங்காய்பால் சேர்த்து குக்கரை மூடி போட்டு விசில் விடவும். நாட்டு கோழி என்பதால் 5 விசில் வரை விடலாம், அப்பொழுதுதான் நன்றாக வெந்து சாப்பிட சுவையாக இருக்கும். விசில் இறங்கின உடன் மல்லித்தழை தூவவும். காரசாரமான நாட்டுக்கோழி தயார்.

சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம். பிரியாணிக்கு ஏற்ற சைடு டிஸ் இது.





Offline kanmani

சிக்கன் ஹலீம்

ஹைதராபாத்தில் நோன்பு நேரத்தில் செய்யப்படும் ஒருவித சுவையான டிஷ். அதிலும் ரம்ஜான் அன்று வீட்டில் செய்யப்படும் பிரியாணிக்கு சைடு டிஷ் ஆக சிக்கன் ஹலீம் ரெசிபியை செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். அந்த சிக்கன் ஹலீம் ரெசிபியை செய்வது என்பது மிகவும் ஈஸி. பொதுவாக ஹலீம் செய்ய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும் இந்த ஹலீம் மிக்ஸர் கூட கடைகளில் ரெடிமேட்டாக விற்கப்படுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் வாங்கி சமைப்பதை விட, வீட்லேயே அந்த ஹலீமிற்கான பொருட்களை வைத்து ஈஸியாக குறைந்த நேரத்திலேயே சமைத்துவிடலாம். அப்போது அந்த சிக்கன் ஹலீம் செய்வது எப்படியென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
கோதுமை - 2 கப் (நீரில் 1 மணிநேரம் ஊற வைத்தது)
வெங்காயம் - 3 (நறுக்கியது)
துவரம் பருப்பு - 1/2 கப் (ஊற வைத்து, வேக வைத்தது)
பட்டை - 2
பிரிஜி இலை - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)
புதினா - 1/2 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, வெங்காயத்தை போடடு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்திருக்கும் கோதுமையை போட்டு, அதில் 6 கப் தண்ணீர் விட்டு, 1/2 மணிநேரம் நன்கு கோதுமை மென்மையாக வேகும் வரை கொதிக்க விடவும். பிறகு வேக வைத்திருக்கும் துவரம் பருப்பை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை மற்றும் பிரிஞ்ஜி இலை சேர்த்து தாளித்து, பின்னர் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு, மிளகு தூள், சீரகப் பொடி மற்றும் 1/2 கப் தண்ணீர் விட்டு, 2 நிமிடம் கிளறவும்.

பிறகு அதில் சிக்கனை கழுவி போட்டு, அரைத்த வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து கிளறவும். இப்போது அதில் வேக வைத்துள்ள கோதுமை மற்றும் சிறிது சேர்க்கவும். பின் உப்பை சரி பார்த்து, வேண்டுமென்றால் உப்பை போட்டு, தீயை குறைவில் வைத்து, 1/2 மணிநேரம், கிரேவி கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.

பின்னர் அதனை இறக்கி அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் தூவி, எலுமிச்சை சாற்றை அதில் விட்டு, ஒரு முறை கிளறி, பொன்னிறமாக வதக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை தூவி பரிமாறவும். இப்போது சுவையான சிக்கன் ஹலீம் ரெடி!!!

Offline kanmani

தவா சிக்கன்

தவா சிக்கன் என்றால் வேறு ஒன்றும் இல்லை. சிக்கனை தவாவில் செய்து சாப்பிடுவது தான். பொதுவாக இந்த ரெசிபியை ரெஸ்ட்டாரண்ட்டில் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் அதை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 500 கிராம் (சிறிய துண்டுகளாக வெட்டி, நன்கு கழுவியது)
வெந்தயம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
 ஃப்ரஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்
குடை மிளகாய் - 1 (நறுக்கியது)
 எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம் மற்றும் வர மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

 அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் அதில் சிக்கன் துண்டுகளை போட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் கிளற வேண்டும். பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை சுமார் 3-4 நிமிடம் கிளற வேண்டும்.

இந்த நேரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து, கலந்து 1 கப் தண்ணீரை விட்டு மூடி வைக்க வேண்டும். ஒரு 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து, வேக வைக்க வேண்டும். பின்னர் மற்றொரு கப் தண்ணீர் விட்டு, மீண்டும் 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

 இப்போது தண்ணீர் சுண்டி, சிக்கன் நன்கு வெந்திருக்கும். இந்த சமயம் மூடியைத் திறந்து, அதில் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கொத்தமல்லியை தூவி, மற்றொரு 5 நிமிடம் தீயை குறைத்து வேக வைத்து, பின்பு இறக்க வேண்டும்.

 இதோ தவா சிக்கன் தயாராகிவிட்டது. இதனை சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.


Offline kanmani

கோரி ரொட்டி கிரேவி

தென்னிந்திய உணவுகளில் மங்லோரியன் ரெசிபி மிகவும் பிரபலமானது. அதிலும் அசைவ உணவுகள் தான் மிகவும் சுவையாக இருக்கும். அந்த மங்லோரியன் ஸ்டைலில் செய்யப்படும் சிக்கனில், கோரி ரொட்டி கிரேவி அருமையாக இருக்கும்.

செய்முறை

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ (சுத்தமாக கழுவியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப் (கெட்டியானது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
வரமிளகாய் - 4
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
புளி தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

 முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.

 பின்னர் வதக்கி இறக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயப் பேஸ்ட், மஞ்சள் தூள், மல்லி தூள், புளி தண்ணீர், தேங்காய் பால் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து, கொதிக்க விட வேண்டும்.

மசாலா கொதித்ததும், அதில் சிக்கன் துண்டுகளை போட்டு, சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, மூடி போட்டு சிக்கன் வேகும் வரை கொதிக்க விட்டு, மசாலா ஓரளவு கெட்டியான பின் இறக்க வேண்டும்.

இப்போது சுவையான கோரி ரோட்டி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி, ரொட்டி என்னும் சப்பாத்தியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.


Offline kanmani

சிக்கன் மொகலாய்

சிக்கன் வாங்கினால் பொதுவாக வறுவல், ப்ரை, சிக்கன் 65 என்று தான் வித்தியாசமாக செய்வோம். இப்போது அதை விட முற்றிலும் வித்தியாசமாக வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுக்க விரும்பினால், அதற்கு சிக்கன் மொகலாய் சரியாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
தயிர் - 1/2 கப்
தேங்காய் - 1/4 மூடி
பட்டை - 2
லவங்கம் - 2
முந்தரி - 8
கசகசா - 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
ஃப்ரஷ் கிரீம் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காயை துருவிக் கொள்ளவும் பிறகு சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.

 பின் மிக்ஸியில் துருவிய தேங்காய், கசகசா, முந்திரியை ஒன்றாக போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

 பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய வைத்து பட்டை, லவங்கம் போட்டுத் தாளிக்கவும்.

பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் இஞ்சிபூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் அதில் தனியாத்தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, பிறகு கழுவிய சிக்கனைப் போட்டு தண்ணீர் விட்டு நன்கு வேக வைக்கவும்.

சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் அரைத்த மசாலாவை சேர்த்து உப்பை சரிபார்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு அதில் ஃப்ரஸ் கிரீம் சேர்த்து கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான சிக்கன் மொகலாய் ரெடி!!! இதனை சாப்பாடு, சப்பாத்தி போன்றவற்றோடு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.





Offline kanmani

கடாய் சிக்கன்

குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் எலும்பு இல்லாமல் சிக்கனை சமைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் கடாயில் செய்யப்படும் சிக்கன் சத்துக்களை அப்படியே தக்க வைத்திருக்கும்.

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 3
மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்
மல்லிதூள் – 2 டீ ஸ்பூன்
சீரகத்தூள் – 2 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன்

 பட்டை, கிராம்பு, அன்னாசி பூ தாளிக்க

நெய் – 2 டீ ஸ்பூன்
எண்ணெய் – 2 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
மல்லித்தழை – சிறிதளவு

கடாய் சிக்கன் செய்முறை

 எலும்பில்லாத சிக்கனை நன்கு கழுவி உப்பு போட்டு ஊறவைக்கவும். கடாயில் நெய், எண்ணெய் சேர்த்து சூடு செய்யவும்.

அதில் பட்டை, கிராம்பு, அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.

இதனுடன் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பாதிஅளவு மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வரை வதக்கிக் கொள்ளவும். பின் தக்காளி சேர்த்து நன்கு குழைவாக வதக்கிக் கொள்ளவும்.

தக்காளி நன்கு வதங்கியவுடன், சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மீதமுள்ள பொடி வகைகளை சேர்த்து , அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் மூடி போட்டு வேக வைக்கவும்.சிக்கன் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு மல்லித்தழை தூவவும். கடாய் சிக்கன் ரெடி.

 குக்கரில் செய்வதை விட எலும்பில்லாத சிக்கனை கடாயில் சமைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும். முழு சத்துக்களும் அப்படியே கிடைக்கும்.