Author Topic: காஃபி போட வேண்டுமா  (Read 896 times)

Offline kanmani

காஃபி போட வேண்டுமா
« on: January 23, 2013, 11:28:28 AM »
காஃபி போட வேண்டுமென நினைப்பவர்களுக்கும் சொல்லித் தர வேண்டுமல்லவா? ஆனால் காஃபியை விட டீ தான் உடம்புக்கு நல்லது. காஃபியை அதிகம் குடிப்பது கெடுதலை உண்டாக்கும்.

காஃபி போடுவதில் 2 வகைகள் உள்ளன.

1. இன்ஸ்டன்ட் தூள் சேர்த்து காஃபி போடுவது,
2. சாதாரண காஃபித்தூளில் டிக்காஷன் போட்டு காஃபி போடுவது.

டிக்காஷன் போட்டு காஃபி போடுவதிலும் 2 வகைகள் உண்டு.

1. ஃபில்டர் காஃபி,
2. சாதாரண வகையில் போடுவது.

இன்ஸ்டன்ட் காஃபிக்கு பாலை நன்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும். பால் சூடாக இருக்க வேண்டும், பாலில் அதிக தண்ணீர் இருந்தாலும் காஃபி நன்றாக இருக்காது. 1 டம்ளர் காஃபிக்கு 2 1/2 தேக்கரண்டி சர்க்கரையும், ஒரு தேக்கரண்டி இன்ஸ்டன்ட் காஃபித்தூளும் தேவைப்படும். காஃபித்தூளின் அளவு அதனதன் கம்பெனி ப்ராண்டை பொறுத்து மாறுபடும். மிகவும் நைசாக இருக்கும் காஃபித்தூளும் குறைவாகவும், குருணைகாளாக (granules) இருக்கும் காஃபித்தூள் அதிகமாகவும் தேவைப்படும். நல்ல உலர்ந்த தம்ளரில் சர்க்கரையையும் காஃபித்தூளையும் போட்டு சூடான ஆடையின்றி வடிகட்டிய பாலை அதில் ஊற்றி, உடனே ஆற்றவும். நுரை பொங்க ஆற்றி, கோப்பைகளில் ஊற்றி தர வேண்டியது தான்.
எப்போதுமே காஃபியானாலும் டீயானாலும் சூடாக கொடுப்பதுதான் நல்லது. சூடு குறைவாக குடிப்பவர்கள் சிறிது நேரம் ஆற விட்டு குடிக்க முடியும். நாமே சூடின்றி கொடுத்தால் சூடாக குடிப்பவர்களுக்கு குடித்தது போலவே இருக்காது. அதேபோல் பாலாடையும் நிறைய பேருக்கு பிடிக்காது. அதனால் எப்போதும் விருந்தினர்களுக்கு கொடுக்கும் போது சூடாக, பாலாடையின்றி, நுரை பொங்க கொடுத்தால் பார்க்கும் போதே குடிக்க வேண்டுமென தோன்றும்.

இன்ஸ்டன்ட் காஃபியை அடுத்து ஃபில்டர் காஃபி போடுவது எப்படியென பார்ப்போம்.


4 பேருக்கு போடுவதென்றால் ஃபில்டரில் மேலேயுள்ள அடுக்கில் ஒன்றரை மேசைக்கரண்டியளவு காஃபித்தூள் போட்டு லேசாக அழுத்தி விடவும். ஒரு டம்ளர் நன்கு கொதிக்கும் நீரை காஃபித்தூள் உள்ள அடுக்கில் ஊற்றி, கலக்குவதற்காக உள்ள தகட்டால் லேசாக கலக்கி மூடி வைக்கவும்.

Filter coffee1/2 மணி நேரத்திற்குள் டிக்காஷன் கீழேயுள்ள அடுக்கில் இறங்கி இருக்கும். (ரொம்ப ஸ்ட்ராங்காக வேண்டுமென்றால் 2 மேசைக்கரண்டியளவு காஃபித்தூள் போடலாம்). 1/4 டம்ளர் டிக்காஷனுடன் 3/4 டம்ளர் கொதிக்கும் பாலும், 2 தேக்கரண்டி சர்க்கரையும் சேர்த்து, சர்க்கரை கரையும்வரை மட்டும் ஆற்றி, நுரை பொங்க கோப்பையில் ஊற்றி கொடுக்கவும். ஃபில்டர் காஃபிக்கு பால் எப்போதும் திக்காக இருக்க வேண்டும், தண்ணியாக இருந்தால் காஃபி ருசிக்காது.

இரண்டாவது காஃபி சுமாராக இருந்தால் பரவாயில்லையென்றால் எல்லா டிக்காஷனும் எடுத்த பிறகு இன்னுமொரு 1/2 டம்ளர் கொதிக்கும் நீரை காஃபித்தூளின் மேல் ஊற்றினால் சிறிதுநேரத்தில் டிக்காஷன் கிடைக்கும். இதில் சுமாரான காஃபி கலக்கலாம். (விளம்பரத்தில் வரும் மாமியார் போல் இல்லாமல் நம் வீட்டு ஆட்கள் சுலபமாக கண்டுபிடித்து விடுவார்கள்.)

ஃபில்டரை கழுவும் போது துளைகளில் காஃபித்தூள் இல்லாமல் கழுவி வைத்தால் தான், அடுத்த முறை டிக்காஷன் சுலபமாக இறங்கும்.

எப்போதும் டிக்காஷனை நேரடியாக அடுப்பில் வைத்து சூடு பண்ண கூடாது. அவ்வாறு செய்தால் காஃபியின் சுவை மாறி விடும். காஃபி கலந்த பிறகும் அடுப்பில் வைத்து சூடு செய்தால் காஃபியின் சுவை மாறி விடும். அதனால் கலக்கும் பால் எப்போதும் கொதிக்க கொதிக்க இருக்க வேண்டும். அப்படியும் டிக்காஷனை சூடு செய்தே ஆக வேண்டுமென்றிருந்தால் கொதிக்கும் தண்ணீரில் டிக்காஷன் உள்ள டம்ளரை சிறிது நேரம் வைத்திருந்து எடுக்கவும்.

சாதா காஃபி:


2 டம்ளர் காஃபிக்கு ஒரு மேசைக்கரண்டி தேவைப்படும். ஒரு பாத்திரத்தில் காஃபித்தூளை போட்டு, ஒரு டம்ளர் கொதிக்கும் தண்ணீரை அதில் ஊற்றி, ஒரு ஸ்பூனால் நன்கு கலக்கி, மேலாக சிறிது தண்ணீரை தெளித்து மூடி வைக்க வேண்டும்.

5 நிமிடத்தில் தூள் கீழே இறங்கி விடும். கலக்காமல் மேலாக டிக்காஷனை வடித்து, (வடிகட்டியால் ஒரு முறை வடிப்பது நல்லது) ஒரு டம்ளர் பால், 4 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கினால் காஃபி ரெடி.

கொடுத்துள்ள அளவுக்கும் குறைவாக காஃபித்தூள் போட்டால், காஃபி தண்ணீரைப் போல் ருசியே இருக்காது. இது எல்லாமே சிக்கிரி கலந்த காஃபித்தூளுக்கு தான். சிக்கிரி கலக்காத காஃபித்தூளில் காஃபி போட்டால் ருசி இருக்கும், திக்னெஸ் கிடைக்காது. சிக்கிரி கலந்த காஃபித்தூளில் தான் மணமும் ருசியும் அதிகமிருக்கும். 30 % சிக்கிரி, 70 % காஃபித்தூள் ஓரளவுக்கு சரியான காம்பினேஷன். அதற்கும் குறைவாக சிக்கிரி கலந்தால் காஃபியின் திக்னெஸ் குறைந்து கொண்டே போகும்.

பால் பவுடரில் காஃபி போடும் முறை:

ஏற்கனவே நான் கூறியது போல் பவுடரை கரைத்து பால் காய்ச்சி வைத்துக்கொண்டு மேலே சொன்ன முறைகளில் அந்தந்த காஃபியை போடலாம்.

கொத்தமல்லி காஃபி

ஒரு டம்ளர் காஃபிக்கு ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். ஒரு மேசைக்கரண்டி அளவு கொத்தமல்லி (தனியா) எடுத்து ஒன்றிரண்டாக நசுக்கி கொதிக்கும் தண்ணீரில் போடவும். கால் தேக்கரண்டி அளவு காஃபித்தூள் சேர்க்கவும். கொத்தமல்லி காஃபிக்கு வெல்லம் தான் நன்றாக இருக்கும். ஒரு எலுமிச்சை அளவு வெல்லத்தை தட்டிப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டினால், கொத்தமல்லி காஃபி ரெடி.

விரும்பினால் சிறிதளவு இஞ்சியோ, சுக்கோ தட்டிப் போடலாம். தலைவலிக்கு, பித்தத்திற்கு இந்தக் காஃபி நல்லது. இந்தக் காஃபி குடித்தால் சுறுசுறுப்பாக இருக்கும். பால் சேர்க்கத் தேவையில்லை. பால் வேண்டும் என நினைப்பவர்கள் சிறிதளவு சேர்க்கலாம். அதிகம் பால் தேவையில்லை.

கடுங்காப்பி

Black coffeeகிராமத்துப் பக்கம் கடுங்காப்பி என்பார்கள். புதியதாக ஒன்றும் இல்லை. பால் சேர்க்காத கருப்பு காஃபி தான் கடுங்காப்பி!

ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து, ஒரு தேக்கரண்டி சாதாரண காஃபித்தூளைப் போட்டு நன்கு கொதிக்க விடவும். ஒரு எலுமிச்சை அளவு வெல்லம் சேர்த்து கரைந்ததும் இறக்கி, வடிகட்டினால் கடுங்காப்பி தயார்.

வெல்லம் சேர்த்தால் தான் சுவை அதிகம். சர்க்கரையும் சேர்க்கலாம். காஃபித்தூள் குறைவாகப் போட்டால் தான் காஃபி நன்றாக இருக்கும். இதுவும் தலைவலிக்கு நல்ல மருந்து தான்.
« Last Edit: January 23, 2013, 11:34:08 AM by kanmani »

Offline kanmani

Re: காஃபி போட வேண்டுமா
« Reply #1 on: March 15, 2013, 12:35:18 AM »
கருப்பட்டி காபி


    கருப்பட்டி- 50கிராம்
    பால்- தேவையான அளவு

 

    கருப்பட்டியை ஒன்றிரண்டாக உடைத்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
    கொதி வந்து கருப்பட்டி கரைந்ததும் அடுப்பை அணைத்து அப்படியே மூடி வைக்கவும்.
    5நிமிடம் கழித்து கருப்பட்டி நீரை வடிகட்டவும்.
    பாலில் தண்ணீர் சேர்த்து காய்ச்சி இனிப்புக்கு தேவையான அளவு கருப்பட்டி நீர் கலந்து பருகவும்.

Note:

தயாரித்து வைத்த கருப்பட்டி நீரை ஃப்ரிட்ஜில் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருக்கலாம். குழந்தைகள் காஃபி வேண்டும் என்று அடம்பிடிக்கும் போது இதை கொடுக்கலாம். பெரியவர்களுக்கும் இது உடலுக்கு நல்லது.