தமிழகத்தில் திரைப்படத்தில் காட்டுவதை அப்படியே நம்பும் பழக்கம் உள்ளது (இன்னும் இருக்காங்க ). இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கறீங்களா ? தமிழில் சிவாஜி கணேசனின் ஓவர் அலட்டல் நடிப்புடன் கர்ணன் கதை வந்தது. ஒரிஜினல் கர்ணனை மாற்றி ஒரு ஹீரோவாக உருவாக்கம் செஞ்சிருப்பாங்க. அதுவும் கர்ணன் அம்பு பட்டு துடிக்கும் காட்சி. எப்ப அந்த பாட்டு டிவியில் போட்டாலும் ஹாலில் இருந்து சென்றுவிடுவேன். கண்ணதாசன் வரிகளுக்காய் அந்த பாட்டு மட்டும் பிடிக்கும்.
எங்கையோ தொடங்கி எங்கையோ போகுது பாருங்க.. அதாவது அந்தப் படத்தின் அடிநாதம் இதுதான். கர்ணன் நல்லவன் ஆனால் துரியோதனன் உடன் சேர்ந்ததால் மட்டுமே அவன் கெட்டவனாக சித்தரிக்கப்பட்டான். இதுதான் அடிப்படை. இதை அடிப்படையாகக் கொண்டு சில புத்தங்கங்களும் வந்துள்ளது. ஆனால் உண்மை என்ன ? கர்ணன் வஞ்சகமாகக் கொல்லப்பட்டானா ? கண்ணன் வஞ்சகனா ? இரண்டு சம்பவங்களை மட்டும் இங்குப் பார்ப்போம் .
போர் நடக்கக் காரணமான நிகழ்வு தர்மன் சூதாட்டம் ஆடியது .சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து தன் தம்பிகளையும் வைத்து ஆடி இறுதியில் தன் மனைவியையும் வைத்து ஆடி தோற்கிறார்.பின் துச்சாதனன் திரௌபதியை அவைக்கு இழுத்து வருகிறான். அந்த கட்டத்தில் நல்லவனாக சித்தரிக்கப்படும் கர்ணன் என்ன செய்திருக்கவேண்டும் . தன் ஆருயிர் நண்பனிடம் இது தவறு என்று கண்டித்திருக்க வேண்டாமா ? அந்த அவையில் நிகழ்ந்த அந்த சம்பவத்தை எதிர்த்திருக்க வேண்டாமா ? எதிர்த்தானா கர்ணன் ?? பிறகு எப்படி அவன் நல்லவன் ஆவான் ?
போருக்கு வருவோம் . அர்ஜுனனின் மகன் அபிமன்யு பத்ம வியூகத்தை உடைத்துவிட்டான். மகாரதர்களை அனாவசியமாக வீழ்த்தினான். ஒரு கட்டத்தில் அவனை சமாளிக்க முடியாமல் அனைவரும் ஒரே சமயத்தில் அவனை சுற்றி நின்று போர் புரிகிறார்கள். அன்றைய போர் விதிகளின் படி இது தவறு. நல்லவனான கர்ணன், அபிமன்யுவின் முதுகுப் பக்கத்தில் இருந்து தாக்கி அபிமன்யுவின் கவசத்தை உடைத்தான். மிக நல்லவனான கர்ணன் செய்த மிக நல்லக் காரியம்.அபிமன்யுவின் வீழ்ச்சிக்கு பிறகே மஹாபாரதப் போரில் விதிகள் மீறப்படுவது துவங்கியது. அவ்வகையில் இதற்கு வித்திட்டதும் கர்ணனே. இப்படி இருக்கையில் கர்ணன் எங்கனம் நல்லவன் ஆவான் ?
ஒருவன் கொடையாளியாக இருப்பது மட்டுமே அவனை நல்லவனாக்கிவிடாது. அப்படிப் பார்த்தால் பெண்ணாசையை தவிர்த்துப் பார்த்தால் இராவணனும் நல்லவனே. மண்ணாசையை தவிர்த்தால் துரியோதனனும் நல்லவனே. படம் எடுப்பவர்கள் முடிந்த வரையில் மூலக் கதையை மாற்றாமல் எடுத்தல் நலம். ஆனால் இங்கு அப்படியே மாற்றி எடுத்தார்கள். அதை யாரும் கேட்டார்களா எனத் தெரியவில்லை. இப்ப சொல்லுங்கள் கர்ணன் நல்லவனா கெட்டவனா ??