Author Topic: அலெக்ஸ் பாண்டியன் - விமர்சனம்  (Read 2822 times)

Offline kanmani

நடிகர் : கார்த்தி
நடிகை : அனுஷ்கா
இயக்குனர் : சுராஜ்
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
ஓளிப்பதிவு : எஸ்.சரவணன்
அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட மருந்தை தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல் சென்னை துறைமுகத்துக்கு 1000 கோடி மதிப்பிலான போலி மருந்துகள் அடங்கிய ஒரு கப்பலுடன் வருகிறது.

இதை விற்பனை செய்ய முதலமைச்சரின் உத்தரவுக்காக காத்திருக்கிறது. முதலமைச்சர் விசு இந்த மருந்தின் பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்கும் எனக்கூறி அந்த மருந்தை விற்க தடை செய்கிறார்.

உடனே, அந்த வெளிநாட்டுக் கும்பல் சென்னையில் பிரபல டாக்டரான சுமனின் உதவியுடன் சாமியாரான மகாதேவன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண எண்ணுகிறது. அதன்படி, முதலமைச்சரிடம் மூன்று பேரும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் போகவே முதலமைச்சரின் மகளான அனுஷ்காவை கடத்தி தங்களது திட்டத்தை சாதிக்க நினைக்கின்றனர்.

அவரை கடத்துவதற்காக கார்த்தி 10 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் நியமிக்கப்படுகிறார். திட்டமிட்டு அனுஷ்காவை கடத்திக் கொண்டுபோய் அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்று பணயக் கைதியாக வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கார்த்தியிடமிருந்து தப்பித்துப் போகும்போது மலையடிவாரத்தில் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கிக் கொள்கிறார். அப்போது அவரைக் காப்பாற்றும் கார்த்தியை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் அனுஷ்கா.

மூன்று நாளுக்குப் பிறகு தங்களது திட்டத்தை சாதித்துவிடும் வில்லன்கள், அனுஷ்காவை திரும்ப ஒப்படைக்குமாறு கார்த்தியிடம் சொல்கின்றனர். வரும் வழியில் என்னை அந்த ரவுடி கும்பலிடம் ஒப்படைக்காமல் என்னுடைய அப்பாவிடம் ஒப்படைத்தால் ரூ.50 லட்சம் தருகிறேன் என்று கூறுகிறார்.

கார்த்தி மனம்மாறி அனுஷ்காவின் அப்பாவிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார். இதனால் ரவுடி கும்பலுக்கும் இவருக்கும் பிரச்சினை வருகிறது. இதிலிருந்து கார்த்தியும் - அனுஷ்காவும் தப்பித்தார்களா? போலி மருந்து கும்பலிடமிருந்து நாட்டை காப்பாற்றினார்களா? அனுஷ்காவும் - கார்த்தியும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா?  என்பதே மீதிக்கதை.

படத்தின் ஆரம்பக்காட்சியே கார்த்தி-அனுஷ்காவை ஒரு 20 பேர் கொண்ட கும்பல் துரத்துவது போல் காட்சியமைக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து தப்பிக்க இருவரும் ரெயிலில் ஏறுகிறார்கள். தொடர்ந்து துரத்தும் ரவுடி கும்பலை அடித்து நையப் புடைக்கிறார் கார்த்தி. இறுதியில் கும்பல் தலைவன் ஹெலிகாப்டரிலிருந்து வந்து துப்பாகியால் சுட இருவரும் ஆற்றில் குதித்து தப்பிக்கிறார்கள். விழித்துப் பார்த்தால், சந்தானத்தின் கிராமத்திற்குள் கதை நுழைகிறது.

முதல் பாதி முழுவதுமே கார்த்தி-சந்தானம் மற்றும் அவரது 3 தங்கைகளும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளே கதையாக நகர்கிறது. இடைவேளைக்கு முன்பாக அனுஷ்கா வருகிறார். அடுத்த பாதியில் ஆக்ஷன், காதல், கொஞ்சம் காமெடி என எடுத்திருக்கிறார்கள்.

கார்த்தி முதல்பாதியில் கலாட்டாவுடன் ஆரம்பித்து, பின்பாதியில் ஆக்ஷன் கலந்து பின்னியெடுத்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் வில்லன்களை அடித்து துவம்சம் செய்வதில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

அனுஷ்கா அழகாக இருக்கிறார். இந்த படத்தில் இவர் வரும் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் நடிப்பதற்கும் வாய்ப்பு கம்மியாக இருந்திருக்கிறது. இவரை இன்னும் கொஞ்சும் கூடுதலாக உபயோகப்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

கார்த்தியுடன், சிறுத்தை, சகுனி ஆகிய படங்களுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார் சந்தானம். படத்தின் முதல்பாதி முழுக்க இவர்தான் நிரம்பியிருக்கிறார். தனது தங்கைகளின் கற்பை கார்த்தியிடமிருந்து காப்பாற்ற நினைக்கும் அண்ணன் கதாபாத்திரம். படத்தில் இவர் அடிக்கும் டைமிங் காமெடிகள் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு காட்சிகளில் ஒரேவித அலுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காமெடியில் தொடர்ந்து இதே முறையை பின்பற்றும் சந்தானம் இந்த படத்திற்கு பிறகாவது தனது காமெடி டிரெண்டை மாற்றிக் கொண்டால் ரசிகர்களை இழக்காமல் இருப்பார் என்று தோன்றுகிறது.

சந்தானத்தின் தங்கைகளாக வரும் சனுஜா, நிகிதா, புதுமுகம் அகன்ஷ்கா பூரி ஆகியோர் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்கள். கதைக்கும், அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை.

படத்தில் வில்லன்களாக மிலிந்த் சோமன், சுமன், மகாதேவன் ஆகியோர் மிரட்டியிருக்கிறார்கள். முதலமைச்சராக விசு தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடன் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பிரதாப் போத்தனை பின்னர் வில்லன் கோஷ்டிகளுக்கு துணை போகிறார் என்பது கதையின் டிவிஸ்ட்.

படத்தில் முதல்காட்சியிலேயே கார்த்தி அனுஷ்காவை வில்லன் கோஷ்டி எதற்காக துரத்துகிறார்கள் என்பதில் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் இயக்குனர் சுராஜ். அதற்காக அவருக்கு பாராட்டுக்கள். சண்டைக் காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம். கார்த்திக்கு ஏற்ற மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்தான்.

இருந்தாலும், நிறைய இடங்களில் பழைய படங்களின் வசனங்கள்தான் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. குறிப்பாக, இறுதிகாட்சியில் வில்லன்கள் இருவரும் கார்த்தியை புட்பால் உதைத்து அடிப்பது, அப்போது அனுஷ்கா தைரியமிருந்தா அவர் கட்டை அவிழ்த்துவிட்டுட்டு அடிங்கடா என்று சொல்வதெல்லாம் அபத்தத்தின் உச்சக்கட்டம்.

தொடர்ந்து மசாலா படங்களையே எடுத்து வரும் சுராஜ் இந்த முறை மசாலாவை கொஞ்சம் கம்மியாக சேர்த்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் எல்லாம் அருமை. குறிப்பாக ‘ரையா ரையா’ பாடல் உண்மையிலேயே தியேட்டரில் விசில் அடிக்க வைக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சரவணன் ஒளிப்பதிவு படத்திற்கு வேகம் கூட்டியிருக்கிறது. சேஷிங் காட்சிகளில் இவருடைய கைவண்ணம் பளிச்சிடுகிறது. பிரபாகரன் கலை வண்ணத்தில் அருவி ஒரத்தில் அமைக்கப்பட்டிருந்த வீடு அருமையாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘அலெக்ஸ்பாண்டியன்’ தடுமாற்றம்.