குளிர் காலங்களில் கிழங்கு வகைகள் நிறைய கிடைக்கும். அத்தகைய கிழங்குகளில் ஒன்றான சிறுகிழங்கை வைத்து அசத்தலான முறையில் பொரியல் செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது அந்த சிறுகிழங்கு பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சிறுகிழங்கு - 250 கிராம்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் குக்கரை வைத்து, அதில் சிறுகிழங்கை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் அந்த கிழங்கை வெளியே எடுத்து, அதனை சிறு துண்டுகளாக வெட்டி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, மென்மையாக பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பிரட்டி வைத்துள்ள சிறுகிழங்கையும் போட்டு, 5 நிமிடம் கிளற வேண்டும்.
கிழங்கை இறக்கும் போது, அதில் துருவிய தேங்காயை தூவி கிளறி விட வேண்டும்.
இப்போது சுவையான சிறுகிழங்கு பொரியல் ரெடி!!