பவர் ஸ்டார் !!!
‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ படம் பார்த்து வெளியே வந்தவுடன் தோன்றியவற்றை அப்படியே எழுதுகிறேன். பவர் ஸ்டார் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் சீனிவாசனை உங்களைப் போலவே சிலபல போஸ்டர்கள் மூலமும் நெட்டில் உலவும் பல நகைச்சுவைகள் மூலமும்தான் எனக்குத் தெரியும். பல நேரங்களில் விலா நோக சிரிக்க வைத்த ஸ்டில்களுக்கும் காட்சிகளுக்கும் சொந்தக்காரர். எல்லாரையும் இப்படி சிரிக்க வைத்த பவர் ஸ்டார் உண்மையில் எதற்காக தன்னைப் பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள் என்பதையும் தெரிந்தே வைத்திருக்கிறார். சொல்லப்போனால் அவரது மிகப்பெரிய பலமே அதுதான். இடையில் ஒருநாள் நீயா நானாவில் கோபிநாத் தன்னை ஒரு counter comedian என்று நிரூபிக்க பவர் ஸ்டாரைக் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அத்தனை அழகாக பதிலளித்து மூக்குடைத்த போது தான் அவர் மேல் முதல்முதலாக மரியாதை வந்தது. அதன் பின் தொடர்ந்து அவரது பல ஓப்பன் ஸ்டேட்மெண்ட்கள் அவரை ரசிக்கவே வைத்தன. எப்போதும் பொய்யாய் நல்லவனாய் இருப்பதை விட, உண்மையான கெட்டவனாய் இருப்பதே மேல். அதே போல் இவரும் தான் லத்திகா படத்தை ஓட்ட வைத்தது ஒப்புக்கொண்டது உட்பட பல விஷயங்களை சொன்னபோது ‘பரவாயில்லையே, இவ்வளவு ஓப்பனா இருக்காரே’ என்றுதான் தோன்றியது. அதன்பிறகு அவரைப் பார்க்கும்போதெல்லாம் முழுக்க முழுக்க கிண்டல் தொணி காணாமல் போய் சிறிது ரசிப்பும் வந்தது உண்மை.
இந்த நிலையில்தான் இரண்டு பெரிய படங்களில் பவர் ஸ்டார் கமிட் ஆகியிருப்பதாக தகவல்கள் வந்தது. ஒன்று, சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, மற்றொன்று ஷங்கரின் ‘ஐ’. இது எனக்கு உண்மையில் அவர் மேல் மேலும் ஒரு நல்லெண்ணத்தை தந்தது. அவர் ஆசைப்பட்டது இதற்குத்தான். தன்னை எதற்காக அந்த படங்களில் ஒப்பந்தம் செய்தார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். என்னவாக தன்னை காட்டப் போகிறார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். சொல்லப்போனால் அவரே அதை அறிந்து ஒப்புக்கொண்டுதான் வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு அது முக்கியமல்ல. தான் காட்டப்பட வேண்டும். ரசிக்கப்பட வேண்டும். கைத்தட்டல் பெற வேண்டும். இது மட்டும்தான் முக்கியம். இதனை கனக்கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது கண்ணா லட்டு தின்ன ஆசையா. படம் எப்படி என்று நீங்கள் பார்த்து சொல்லுங்கள். ஆனால், இதுவரை ஒரு படத்தில் கூட பார்த்திராத கிட்டத்தட்ட ஒரு அறிமுக நடிகரின் (லத்திகாவை யார் பாத்துருப்பா???) அறிமுகக் காட்சியில் தியேட்டர் இப்படி அதிர்ந்தது இதுவே முதல் முறை. ரஜினி முதல் விஜய் அஜீத் வரை யாருக்கு அப்படியொரு கைதட்டல், கத்தல் முதல் படத்தில் கிடைத்திருக்கிறது? மிரள வைத்தது. அதைத் தொடர்ந்து வந்த அனைத்து காட்சிகளிலும் பவர் ஸ்டாரை அவர் அனுமதியோடே காமெடியாக பயன்படுத்தியிருப்பதால், தியேட்டரில் அவரது ஒவ்வொரு அசைவிற்கும் கைத்தட்டல்களும் விசில்களும் பறந்துகொண்டே வந்தன. இதுதான் பவர் ஸ்டாரின் வெற்றி. இதற்காகத்தான் அவர் இது அத்தனையையும் செய்தார்.
இப்போது கூட எதற்காக தன்னைப் பார்த்து மக்கள் கைதட்டுகிறார்கள், விசிலடிக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியும். ஆனால் அவருக்கு கைட்டல்களும் விசில்களும்தான் முக்கியம். வேறொன்றுமல்லவே. அந்த வகையில் பவர் ஸ்டார் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் என்று அடித்துக் கூற முடியும். எத்தனை எகத்தாளங்கள், நக்கல்கள் இருந்தாலும், எல்லாவற்றையும் சிரித்தபடியே தாண்டிச் சென்று, தான் நினைத்த இடத்தில், சினிமாவின் மிகக் கடினமான விஷயமாகிய மக்கள் வரவேற்பை தனது இரண்டாவது மூன்றாவது படத்திலேயே பெற்று விட்ட பவர் ஸ்டார் உண்மையில் பாராட்டுக்குரியவர்தான். நம்மில் யார் நினைத்தாலும் இப்படியொரு நிலைக்கு (மத்தவங்க ஓட்டி ஓட்டி சிரிச்சாலும்) வந்து விடமுடியுமா என்ன? இனிமேல் பவர் ஸ்டார் பல பெரிய படங்களில் கமிட் செய்யப்படுவார் என்பது என் அனுமானம். அத்தோடு மிக முக்கியமாக, அவரது அடுத்த படத்திற்கு முதல் நாள் முதல் காட்சியை பார்க்க சில நூறு பேர் நிச்சயம் இனி வருவார்கள். இதுவும் அவரது தளராத தன்னம்பிக்கைக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றிதான்.
படத்தின் இறுதியில் சந்தானம் ஒன்று சொல்வார். ‘நானாச்சும் காமெடியன்னு தெரிஞ்சு வாழ்ந்துட்டு இருக்கேன். ஆனா நீ காமெடியன்னு தெரியாமலேயே வாழ்ந்துட்டு இருக்கியேடா’ என்று. ஆனால் உண்மையில் தானும் ஒரு காமெடியன்தான் என்று தெரிந்துதான் அவர் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். சந்தானம் போன்றவர்கள் நகைச்சுவையாக நடித்தால் சிரிப்பார்கள், ஆனால் சீரியசாக நடித்தால் அவ்வளவாக வேலைக்காகாது என்று அவர்களுக்குத் தெரியும். அதேபோல் பவர் ஸ்டார் சீரியசாக நடித்தால்தான் சிரிப்பார்கள் என்பது அவருக்கும் தெரியும். ரித்தீஷ், சாம் ஆன்டர்சன் போல் சீரியசாக நடித்து சீரியஸ் ஹீரோவாக ஆக நினைக்காமல், சீரியசாக நடித்து காமெடியாக நிற்கப் பார்க்கிறார் பவர் ஸ்டார். நிஜத்தில் இது இதுவரையில் யாரும் போகாத வழி. பவர் ஸ்டார் வழி தனி வழி. மேலே போடப்பட்டிருக்கும் படத்தை பார்த்து முதலில் உங்களுக்கு சிரிப்பு வந்திருக்கலாம். ஆனால் அதுதான் பவர் ஸ்டாரின் வெற்றி !!!
Jeyachandra Hashmi