வழி வழியாய் வரும் கதைகள்...
-----------------------------------
என்ன இருக்கிறது படிக்கவும் பார்வையிடவும்
வெள்ளைத்தாள் முழுவதும்
சிவப்பை மட்டுமே சிந்திக் கொண்டிருக்கும்
கருப்பு எழுத்துக்கள்..
பாட்டி தன் தாயிடம் கதை கேட்டாள்
புராணங்களும் இதிகாசங்களும்
பாட்டியிடம் என் தாய் கதை கேட்டாள்
கம்பராமாயணமும் கட்டபொம்பனும்
என் தாயிடம் நான் கேட்டேன்
திருக்குறளும் திருவிளையாடலும்
என் மகள் என்னிடம் கேட்டாள்
சிங்க ராஜாவையும் சின்ட்ரெல்லாவையும்
தன் மகளுக்கு அவள் என்ன சொல்வாள்
வன்முறையையும் வன்புனர்வையுமா?

..
-ஹேமா பாலாஜி
டெல்லியில் நிகழ்ந்த கொடுமையான நிகழ்வுக்கு பிறகு ஹேமாபாலஜியால் எழுதப்பட்ட கவிதை இது, மிக சாதாரணமான வார்த்தைகளால் சமூகத்தின் அதிமுக்கியமான பிரச்சனையை பெண்கள் நாளும் சந்திக்கும் இன்னலை எளிமையாய் அதே வேளையில் அழுத்தமாகவும், நுட்பமாகவும் சொல்லியிருக்கிறார்
வாசகன் கடைசி வரியை வாசிக்கும் போது உண்டாகிற பதட்டம் அளவில் அடங்காதது, அந்த வார்த்தைகள் வலி மிகுந்ததாகவும், நாளை சமூகம் எப்படி இருக்கும் என்னும் பேரச்சமும் பீதியும் கவலையும் நிறைந்ததாகவும் இருக்கிறது, குழந்தைக்கு சொல்லப்படும் கதைகளில் கூட வன்முறையும் வன்புணர்வும் இருக்குமாயின் அந்த சமூகம் எவ்வளவு குரூரம் நிறைந்ததாக மாறி போயிருக்கும்
குழந்தைக்கு சொல்லப்படும் கதைகள் நீதிகள் உடையதாக, நல்லதை போதிப்பதாக இருந்தது போய், விழிப்புணர்வையும், வக்கிரமான மனிதர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்ட தெரிநிலையையும் போதிப்பதாக இருக்கும் எனும் ஹேமாவின் கணிப்பில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை எனினும், அப்படி ஒரு நிலை எதிர்கால சந்ததிக்கு நிகழ்ந்துவிட கூடாதெனும் எண்ணம் மேலிடாமல் இல்லை
வக்கிர ஆண்களும், வக்கிர ஆண்களுக்கு குடை பிடிக்கிற பெண்களும் இருக்கிற வரை இந்த சமூகத்தின் நிலை இன்னும் அவலம் மிகுந்ததாக மாறும் என்பதை வருத்ததுடன் ஏற்றுக் கொள்ளவே வேண்டி இருக்கிறது