கீமா வறுவல் என்பது மட்டன் உணவிலேயே மிகவும் சுவையானது. இதை உலகம் முழுவதும் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடுவர். அதிலும் அசைவ உணவுகள் என்றாலே காரம் தான். அந்த காரம் ஆந்திரா உணவுகளில் சொல்ல முடியாத அளவில் இருக்கும். இப்போது அந்த வகையான ஆந்திரா ஸ்டைலில் கீமா வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! andhra style kheema fry தேவையான பொருட்கள்: மட்டன் கீமா (கொத்துக்கறி) - 800 கிராம் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - 10 வெங்காயம் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது செய்முறை: முதலில் கீமாவை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 1 கப் தண்ணீரை சேர்த்து, குக்கரில் போட்டு 2 விசில் விட்டு இறக்க வேண்டும். அதே சமயம், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, 3-4 நிமிடம் வதக்கி, பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மற்றொரு 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு தக்காளி, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, வதக்க வேண்டும். பின்பு வேக வைத்து இறக்கி வைத்துள்ள கீமாவை நீரை வடித்துவிட்டு, இதோடு சேர்த்து கிளற வேண்டும். கீமாவை சேர்த்த பின்பு நன்கு கிளறி, 3-4 நிமிடம் அடுப்பில் வைத்து, பின் கரம் மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, மூடி போட்டு ஒரு 5-7 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் கீமா வறுவல் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்து பரிமாறவும்.