(இது நான் எழுதிய விமர்சனம்)
----------------------------------------
இதைவிட இப்படத்திற்கு சிறந்த தலைப்பு இருக்க முடியாது. இந்நேரம் இந்த படத்தோட கதை எல்லோருக்குமே தெரிஞ்சிருக்கும்.
கல்யாணத்திற்கு இருநாள் இருக்கும் போது விளையாட சென்ற மணமகன் தலையில் அடிபட கடந்த ஒருவருட நினைவை இழக்கிறான். இதை எப்படி மறைத்து அவன்திருமணத்தை அவன் நண்பர்கள் நடத்துகிறார்கள் என்பது தான் கதையே..
கதையை வெளிப்படையாக சொல்வதில் தவறில்லை.. ஏனென்றால் திரைக்கதை அவ்வளவு கனகச்சிதம். ஆரம்பத்திலிருந்தே ஏதோ பக்கத்துவீட்டை எட்டிப்பார்ப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறார். இதற்கு காமிரா கோணங்களும் ஒத்துழைக்கிறது. படத்தில் நாமும் ஒன்றி விடுகிறோம். படம் முழுக்கஹீரோவின் நண்பர்கள் வியர்க்க நமக்கோ சிரிப்பலை கொப்பளிக்கிறது. படம் முழுக்க தியேட்டரில் சிரிப்பலை. ஒரு இடத்தில் கூட சலிப்பும் தட்டவில்லை.
ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் திரைக்கதையில் எந்த இடைச்சொருகலும் இல்லை. காதல் கல்யாணம் என்றால் ஏகத்திற்கும் சொருகியிருக்கலாம்.ப்ளாஷ்பேக்.. டூயட்.. கல்யாணபாடல்.. நட்பு பாடல்னு.. ம்ஹூம். ஒன்னுமில்லை. நம் கவனத்தை சிதறவிடாது அதே சமயம் சலிப்பும் தட்டாமல் படத்தை கொண்டுசென்றதற்கு இயக்குநரை பாராட்டியே தீர வேண்டும்.
அதுவுமில்லாமல்.. நாலு ஆண்கள் மட்டுமே வைத்து படத்தை இவ்வளவு சுவாரஸ்யமாக எடுக்க முடியுமா என ஆச்சர்யப்பட வைக்கின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் படத்தின் காஸ்டிங். ஆட்களை எப்படியெல்லாம் தேர்வுசெய்திருக்கிறார்கள்.. நண்பர்களாக வரும் சரஸ், பக்ஸ், பச்சி.. எல்லோரும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேர்க்கும் போது நமக்குள் சிரிப்பு கொப்பளிக்கிறது.
அடுத்து நாயகன் விஜய்சேதுபதி. மனுசனுக்கு சுக்ர திசை போலும். முதலில் பீட்சா.. தொடர்ந்து ந.கொ.ப.கா. மனிதர் அசத்தியிருக்கிறார். 'என்னாச்சி' என திரும்பத்திரும்ப கேட்கும் போதும் எதையோ தொலைத்த பார்வையும்.. 'நீ சொன்னா நான் பில்டிங் மேல இருந்துகூட குதிப்பேன்டா' என சொல்லும் இடங்களிலும் மனிதர் அசத்தியிருக்கிறார். மனம் பிறழ்ந்த மாதிரி கதாபாத்திரங்களை நிறைய பேர் செய்திருந்தாலும் நிஜத்துடன் ஒத்துப்போகும் அளவிற்கு இருந்தது அவர் நடிப்பு. கண்டிப்பாக இவருக்கு விருதுகள் கிடைக்கவேண்டும். விரலில் சொடக்குபோடறவங்களுக்கு பதில் இந்த மாதிரி நடிகர்களை ஊக்கப்படுத்துங்கப்பா..
முக்கிய பங்களிப்பு இசை.. கதைக்கு அவ்வளவு பொருத்தம். பாடல்கள் தனியாக இல்லாமல் வருவதே தெரியவில்லை. ஒருவேளை பிண்ணனியில் வந்திருக்கலாம். அந்தளவு கவனத்தை திசைத்திருப்பாத அதே சமயம் ஒன்ற வைக்கும் இசை படத்திற்கு மிகப்பெரியபலம். வேத் சங்கர் புதுமுக இசையமைப்பாளர் இன்னும் நிறைய தூரம் பயணிப்பார்.
படத்தில் ஒளிப்பதிவு உறுத்தாத வண்ணங்களில் நன்றாக இருக்கிறது. தன் சொந்தக்கதை என்பதாலோ என்னவோ ஒளிப்பதிவாளர் ப்ரேம்குமார் நன்றாகவே வேலை செய்திருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள்.
இறுதியாக இயக்குநர். பாராட்ட வார்த்தையில்லை. நினைவுத்தப்பிப் போகும் சீரியஸானவிஷயத்தை இந்தளவுக்கு காமெடியா சொல்லமுடியுமா என வியக்குமளவிற்கு இருந்தது அவரி திரைக்கதை. உண்மைச் சம்பவத்தை ஒட்டி எடுக்கப்பட்டிருந்தாலும் அங்கங்க்க விழும் முடிச்சுக்களும் அவிழ்க்கும்டஇடங்களும் தான் நம்மை படத்தில் அடுத்து என்ன எனஎதிர்பார்த்து ஒன்றவைத்தது. படம்முழுதும் திரையரங்கில் சிரிப்பொலி. யாரும் தம்மடிக்க வெளியே போனதாய் தெரியவில்லை. படம் பார்த்து வெளியில் வந்த அனைவர் முகத்திலும் திருப்தி. இதைவிட நல்ல படமென்பதெற்கு என்ன வேண்டும்.
குறிப்பா என் அம்மாவும் அப்பாவும் இந்தளவு சிரிச்சு ரசிச்சு படம் பார்த்ததாய் நினைவில்லை. இதற்கே இயக்குநருக்கு நன்றி..
இந்த மாதிரி படங்களை ஊக்குவிக்க தயவுசெய்து திரையரங்கில் படம் பாருங்கள் ப்ளீஸ்..