பட்டர்பீன்ஸ் புரதச்சத்து நிறைந்த உணவு. மட்டன், சிக்கன் சாப்பிடாதவர்கள் அதிக அளவில் பட்டர்பீன்ஸ் சேர்த்துக்கொள்வதன் மூலம் தேவையான அளவு புரதச்சத்து கிடைக்கும். சத்தான பட்டர் பீன்ஸ் மூலம் குருமா செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
உரித்த பட்டர் பீன்ஸ் - ¼ கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளிப்பழம் - 2
உருளைக் கிழங்கு சிறியது - 1
காரட் - 2
பீன்ஸ் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு - 2 டீ ஸ்பூன்
கடுகு, உளுந்து - ¼ டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருஞ் சீரகம் - ¼ டீ ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால் -1 டேபிள் ஸ்பூன்
ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
குருமா செய்முறை
பட்டர்பீன்ஸை சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக வைத்துக்கொள்ளவும் பீன்சை நார் நீக்கி சிறு நீள துண்டுகளாக வெட்டவும், உருளைக்கிழங்கு,காரட் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் ஆகியவற்றை தனியாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு வதக்கவும். வாசனை போன உடன் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் வதக்குங்கள். நன்றாக வதங்கிய பின்னர் பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கை கொட்டி நன்றாக வதக்கவும். இதனுடன் தக்காளிப் பழம் போட்டு வதக்கி சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் போட்டு மூடிபோட்டு சிம்மில் வேகவைக்கவும்.
இதனுடன் பெருஞ்சீரகம், சிறிதளவு கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வேகவைக்கவும் நன்றாக வெந்த உடன், அதனுடன் வேகவைத்துள்ள பட்டர்பீன்ஸ்சை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
அனைத்து காய்கறிகளும் பட்டர் பீன்ஸ் உடன் நன்றாக கலந்த உடன் தேங்காய் பால் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். கிரேவி பதம் வந்த உடன் ஸ்டவ்வை நிறுத்திவிடவும். சத்தான பட்டர் பீன்ஸ் குருமா தயார்.
சப்பாத்தி, பூரி, சாதத்திற்கு போட்டு சாப்பிடலாம்