'என்னைத் தவிர மற்ற எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே எப்படி'? குருவிடம் சீடன் கேட்டான்.
குரு சொன்னார். 'அவர்கள் எதிலும் நல்லதை மட்டுமே காண்கிறார்கள்.அதனால் தான் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்'.
' நான் ஏன் நல்லதை பார்க்கமுடியவில்லை?' சீடன் கேட்டான்.
குரு சொன்னார்.'உன் உள்ளே இருப்பதையே நீ வெளியில் காண்கிறாய். உன் உள்ளே நல்லது இருந்தால் வெளியில் நீ நல்லதையே காண்பாய். உன் உள்ளே தீயது இருந்தால், வெளியிலும் நீ தீயதையே காண்பாய்.'
உலகம் இன்பமானது என ஒருவன் சொல்கிறான். உலகம் துன்பமானது என இன்னொருவன் சொல்கிறான்.
இருப்பது ஒரு உலகம் தான். அது எப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமாக இருக்க முடியும்?
உலகில் நல்லது தீயது இரண்டும் இருக்கிறது.
நல்லதை பார்ப்பவன் உலகம் நல்லது என்கிறான். தீயதை பார்ப்பவன் உலகம் தீயது என்கிறான்.
துரோணர் தருமரை அழைத்தார். 'இந்த ஊரில் கெட்டவர் யாராவது இருக்கிறார்களா? பார்த்து விட்டு வா' என்று அனுப்பினார்.அவனும் புறப்பட்டு போனான்.
துரோணர் துரியோதனை அழைத்தார். 'இந்த ஊரில் நல்லவர்கள் யாராவது இருக்கிறார்களா? பார்த்து விட்டு வா' என்று அனுப்பினார்.அவனும் புறப்பட்டு போனான்.
இருவரும் ஊரெல்லாம் சுற்றிவிட்டு திரும்பி வந்தார்கள்.
'ஊரில் எல்லோரையும் பார்த்தேன். கெட்டவன் ஒருவன் கூட இல்லை. எல்லோரும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்' என்றான் தருமன்.
ஊரில் ஒரு நல்லவன் கூட இல்லை. எல்லோரும் கெட்டவர்களாகவே இருக்கிறார்கள்' என்றான் துரியோதனன்.
இருவரும் அதே மனிதர்களைத் தான் பார்த்தார்கள்.ஒவ்வொரு மனிதரிடமும் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு.
தருமன் நல்லவன்.அவன் நல்லதை மட்டுமே பார்த்தான். அவனால் அப்படிதான் பார்க்க முடியும். அதனால் எல்லோரும் நல்லவர்களாகவே அவன் கண்ணுக்கு தெரிந்தார்கள்.
துரியோதனன் கெட்டவன். அவன் கெட்டதை மட்டுமே பார்த்தான். அவனால் அப்படித்தான் பார்க்க முடியும். அதனால் எல்லோரும் கெட்டவர்களாக அவன் கண்ணுக்கு தெரிந்தார்கள்.
உலகம் நம் பார்வையை பொருத்தது. நமக்குள் அழகு இரு ந்தால் உலகம் அழகாகவே தெரியும். நமக்குள் அசிங்கம் இரு ந்தால் உலகமும் அசிங்கமாகவே தெரியும்.
நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது நமது வாழ்க்கையும் மகிழ்ச்சியானதாகத் தோன்றுகிறது. நாம் துன்பமாக இருக்கும் போது வாழ்க்கையும் துன்பமானதாக தோன்றுகிறது.
உலகத்தை அழகானதாக, நல்லதாக, இன்பமானதாக மாற்றுவது நம் கையில் தான் இருக்கிறது.
நமக்குள் நன்மையை, அழகை, இன்பத்தை நிரப்பிக் கொண்டால் உலகமும் அது போல ஆகிவிடும்.
நமக்குள் தீயதை நிரப்பிக் கொண்டால், உலகமும் தீயதாகி விடும்.
சுயநலம், பேராசை, பொறாமை இவை தீமையின் விதைகள். நம் இதயத்தில் இவற்றை விதைத்தால் உலகம் துன்பமானதாகி விடும்.
சுயநலமும் பேராசையும் உடையவன் மற்றவரை பொறாமையோடு பார்க்கிறான். இதனால் பகைமை உண்டாகுகிறது. பகைமை அழிவுக்கு பாதை வகுக்குகிறது,
மனிதன் தன்னிடம் இல்லதை நினைத்து கவலைப்படுகிறான். அதனால் தன்னிடம் இருப்பதை காணத் தவறுகிரான்.
தன்னிடம் இருப்பத காண்பவன் மகிழ்ச்சியடைகிறான்.
'செருப்பில்லையே என நான் கவலைப்பட்டேன். காலில்லாதவனை பார்த்த போது எனக்கு கால்கள் இருக்கிறதே என மகிழ்ச்சியடைந்தேன். அதற்காக இறைவனுக்கு நன்றி கூறினேன்.' என்கிறார் பாரசீக கவிஞானி சஅதி.
பார்வையே இன்பத்தையும் துன்பத்தையும் உண்டாக்குகிறது. விமர்சகர்ளில் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் எதிலும் குறை காண்பவர்கள்.எதிலும் ஏதாவது குறை சொல்வது அவர்கள் குணம். அது அவர்கள் எண்ணத்தில் பார்வையில் வருவது.
வண்டுகளில் இரண்டு வகை உண்டு. ஒரு வண்டு கமலத்தை தேடிப் போகிறது.இன்னொரு வண்டு மலத்தை தேடிப் போகிறது. மனிதர்களிலும் இந்த இரண்டு வகை உண்டு.
ஒரு நாய் தெருவில் செத்துக் கிடந்தது. அதை சுற்றி ஒரு கூட்டம் கூடியிருந்தது.
'திருட்டு நாய். எங்காவது திருடியிருக்கும். அடித்துக் கொன்றிருப்பர்கள்' என்றான் ஒருவன்.
'நாசமாய் போகிற நாய். இங்கே செத்துக்கிடப்பதால் தெருவெல்லாம் நாறுகிறது'என்று திட்டினான் இன்னொருவன்.
'அதன் உடம்பை பாருங்கள். எத்தனை அசிங்கமாக இருக்கிறது' என்றான் இன்னொருவன்.
அப்போது 'அதன் பற்களைப் பாருங்கள். முத்துக்கள் போல எத்தனை அழகாக இருக்கின்றன' என ஒரு குரல் கேட்டது.
எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே இயேசு பெருமான் நின்றிருந்தார்.
இயேசு பெருமானின் மனம் அழகானது.அதனால் அவர் அழகையே கண்டார்.
உயர்ந்தவர்கள் அருவருப்பானதில் கூட அழகை காண்பார்கள்.
பழம் கனிந்திருக்கும் போது நறுமணம் வீசுகிறது. அதே பழம் அழுகி இருக்கும் போது துர்மணம் வீசுகிறது.
அழகிய மனம் படைத்தவன் உலகையும் அழகாக மாற்றுகிறான்.