Author Topic: பெண்ணின் குரல் !  (Read 52 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1132
  • Total likes: 3809
  • Total likes: 3809
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
பெண்ணின் குரல் !
« on: August 12, 2025, 05:42:18 PM »
நடுநிசி இரவில்
கருமைச் சுவற்றின் அமைதியில்
நிழலாய் நின்றாள் அவள்…
சாபமாய் காலம் செதுக்கிய
ஒரு பெண் உருவம்

அவள் பார்வை
சூரியன் ஒருபோதும் தழுவாத கண்கள்
மரணத்தின் மங்கிய ஒளி;
புன்னகை என்ற சொல் கூட பயப்படத்தக்க,
கருமைத் துண்டாய் உறைந்த உதடுகள்

நகரின் கழிவு நீரில்,
மலர்ந்த மலராக அல்ல
எரிந்து கரிந்த பனித்துளிபோல்,
வாடிய மணம் மட்டும் சுமந்து நிற்கும் அவள்..

பசி எனும் பேயின்
கோரப்பிடியில் சிக்குண்டு
நிற்கிறாள் திராணியின்றி
அனாதை என்ற பெயரும் சுமந்து
உடலும் உயிரும் நடுங்கி உறைகின்றன

இந்த நரகச் சந்தையில்
அவளுக்கு இடமில்லை;
தெய்வங்கள்கூட கண்களால் அவளை காண
தவிர்த்து விட்டனவோ என்னவோ

மனித மரபின் மரணச் சுவட்டின் விளிம்பில்,
அவளின் சிரிப்பு கேட்கப்படாமல் விடப்படும்;
அவளின் குரலே,
நிழலாய் தொலைந்து போகும்.

உதவிக்காய் கைநீட்டினாள் - காற்றே பதிலளித்தது.
உலகம் வீசியது கற்களையே;
வலி மட்டுமே விளைந்தது பலனாய்.

ஒரு காலத்தில்
அவளுக்கும் கனவுகள் இருந்தனோ தெரியவில்லை;
வர்ணங்களால் நிரம்பிய சிறுவயது கனவு
அன்பின் வெப்பம் நிரம்பிய நினைவுகள்…
ஆனால் இன்று
அழுகிப் போன நினைவுகள் மட்டும்
முடிவில்லா துயரத்தின் தடம் பதித்த பாதைகளே
நினைவுகளாய்

ஒவ்வொரு நட்சத்திரமும்
அவளை நோக்கி கேலியாய்
சிரிப்பதாய்
உணர்கிறாள்

அவளை தொட்டு செல்லும்
ஒவ்வொரு காற்றும்
அவளின் வேதனையை
பகிர்ந்துகொள்ள எத்தனிக்கிறதோ ?

அவள் வெறும் பெண் குழந்தையில்லை
அவள் ஒரு கேள்வி
இந்த நாகரிகத்தின்
இதயத்தில் பாய்ந்த
கூர்மையான அம்பு

மரணம் கூட
அவளிடம் கருணை காட்டாமல்
கடந்து செல்கிறது

நீங்களும்
கடந்திருக்க கூடும் அவளை,
அவளின் குரல்
நீங்கள் கேட்டிருக்கீர்களா ?
மனிதம்  புதைக்கப்பட்டிருக்கும்
இந்த மௌனச் சுடுகாட்டில்.

நாகரீகம் வளர்ந்த இந்த
நகரம் என்னும் நரகத்தில்
அப் பெண்ணின் குரல்
கேட்டிருக்கீர்களா ?


****JOKER***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "