Author Topic: பிள்ளையாருக்கு ஏன் தோப்புக்கரணம் போடறோம்றங்கிற ரகசியம் தெரியுமா? 🛐🛐🛐  (Read 74 times)

Offline MysteRy


"பிள்ளையாரப்பா எனக்கு நல்ல புத்தியை கொடுப்பா.." என்று தலையில் குட்டிக் கொள்வார்கள். இரண்டு பக்கமும் கைகளால் காதுகளை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவார்கள். இப்படி செய்வது பிள்ளையாருக்கு ரொம்ப பிடிக்கும். தன் முன்னால் பய பக்தியோடு தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடுபவர்களுக்கு புத்திசாலித்தனத்தை அதிகரிக்கச் செய்வதோடு நிதியும் அதிகரிக்கச் செய்வேன் என்று அந்த விநாயகரை அருளியிருக்கிறார்.
விநாயகர் செல்லப் பிள்ளையார். புத்திசாலித்தனம் கொண்டவர் கூடவே விளையாட்டுத்தனமும் கொண்டவர். மாமாவின் சங்கை எடுத்து வைத்துக்கொண்டு விளையாடிவர். அதேபோல குறுமுனி அகத்தியரிடமும் விளையாடி தலையில் குட்டு வாங்கியவர். அவருக்கு தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டியவர். இந்த இருவரிடமும் விளையாடியதால் தான் நமக்கு தலையில் குட்டுவதும் தோப்புக்கரணம் போடுவதும் தெரியவந்தது. இன்றைக்கு அது மிகப்பெரிய உடற்பயிற்சியாகவும், யோகாவும் உருமாறி நிற்கிறது.

அது சரி தலையில் குட்டி தோப்புக்கரணம் போட்டால் மதி அதிகரிக்கும் சரி நிதி எப்படி அதிகரிக்கும் என்று கேட்கிறீர்களா? புத்திசாலித்தனத்தோடு செய்யும் செயல் வெற்றியடைந்து அதற்கேற்ப வருமானமும் கூடத்தானே செய்யும். சரி புராண கதைக்கு வருவோம்.

..
பகவான் விஷ்ணு சொன்ன கதை..
துவாபரயுகத்தில் பாண்டவர்கள் பதினெட்டு நாள் யுத்தம் முடிந்தவுடன், போரால் ஏற்பட்ட பாவங்கள் நீங்க கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை வழிபட்டனர். அப்போது கிருஷ்ண பரமாத்மா, பாண்டவர்களிடம் தருமரே! நீங்கள் கங்கையில் குளித்தால் மட்டும் போதாது. இந்த கங்கையே தன் பாவங்களைப் போக்கிக் கொள்ளும் பொன்னி நதியில் நீராடினால்தான் உங்கள் பாவம் முழுவதும் விலகும்!' என்றார். உடனே தருமர், 'அந்த நதி எங்கு உள்ளது?' என்று கேட்டார். 'மேற்கே குடகு மலையில் அகத்தியருடைய கமண்டலத்தில் அடைபட்டுக் கிடக்கிறது' என்று கூறி அதற்கான காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒருசமயம் கயிலாய மலையில் சிவபெருமானை தரிசித்துவிட்டு அகத்திய முனிவர் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் உருவத்தைப் பார்த்து பொன்னி நதி, அதோ குள்ளமுனி போகிறார்' என்று கூறி, எள்ளி நகையாடியது. கோபம் கொண்ட அகத்தியர், பொன்னி நதியை கமண்டலத்தில் அடைத்து, கடகு மலைக்குச் சென்று பலகாலம் தவத்தில் ஆழ்ந்துவிட்டார். அப்படியென்றால் நாங்கள் எப்படி பொன்னி நதியில் நீராடுவது? அதற்கு நீங்கள்தான் ஏதாவது நல்வழி கூறவேண்டும்!' என்றனர் பாண்டவர்கள். அந்த நதியை கமண்டலத்திலிருந்து விடுவிக்க விநாயகப் பெருமானால் மட்டும்தான் முடியும். அவரைப் போய்ப் பாருங்கள்' என்றார். காவிரித் தங்கையை காண வேண்டும் என்ற ஆசை அந்த மகாவிஷ்ணுவிற்கும் இருக்காதா? பாண்டவர்கள் மூலமாக பிள்ளையாரை தூண்டினார்.

அதைக் கேட்ட பாண்டவர்கள், ஆனைமுகனை பூஜித்து விவரத்தைத் தெரிவித்தனர். இதெல்லாம் தன் மாமன் கிருஷ்ணபகவான் லீலை' என்பதை உணர்ந்து கொண்ட விநாயகர், காக உருவம் கொண்டு, குடகு மலைக்குச் சென்று கமண்டலத்தை தன் அலகால் தென்திசை நோக்கி தள்ளிவிட்டு பறக்கத் தொடங்கினார். கவிழ்ந்த கமண்டலத்திலிருந்து புறப்பட்ட பொன்னி நதி, காகம் சென்ற இடமெல்லாம் பயணத்தைத் தொடர்ந்தது. அச்சமயம், உலக மக்களை மீண்டும் உருவாக்க, இன்றைய ஒகேன்கல்லில் அஸ்வமேத யாகம் செய்து கொண்டிருந்தார், பிரம்மதேவர். பொன்னி நதியானது மிகுந்த ஆக்ரோஷத்துடன் அவரது யாககுண்டத்தில் துள்ளிக்குதிக்க, பிரம்மதேவர் கடுங்கோபம் கொண்டார். உடனே அங்கு காட்சிதந்த மகாவிஷ்ணு 'இது, தென்னாடு செழிக்க அழைத்து வரப்பட்ட நதி. அதில் படைப்பிற்கான ஓலைச்சுவடிகள் உள்ளன. அதை எடுத்துக் கொண்டு உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள் என்று கூறி, அவரை சாந்தப்படுத்தியதாக சொல்கிறது புராணம்.

அதே நேரம் சீர்காழியில் இந்திரன் அமைத்திருந்த நந்தவனம் தண்ணீரின்றி வாடியது. பிள்ளையாரிடம் இந்திரன் முறையிடவே காகம் வடிவெடுத்த பிள்ளையார் குடகுமலைக்கு சென்று அங்கே கமண்டலத்தில் அடைபட்டிருந்த பொன்னியை தட்டி விட்டு பொங்கி பிரவாகம் எடுக்க வைத்தார் என்றும் மற்றொரு புராண கதை சொல்கின்றனர்.

தான் அடைத்து வைத்திருந்த பொன்னியை தட்டி விட்டால் முனிவர் சும்மா இருப்பாரா? விரட்டினார் அதைப்பார்த்து விளையாட்டு காட்ட ஓடினார் பிள்ளையார். அப்படியும் விடாமல் குட்டினார் முனிவர். உடனே பிள்ளையார் தனது உண்மை ரூபாத்தை காட்டியதோடு தண்ணீரை தட்டி விட்ட காரணத்தை சொன்னார். உடனே நல்ல காரியத்திற்காகத் தான் விநாயகர் செய்தார் என்று கூறி உன்னைப் போய் தலையில் குட்டினேனே என்று தனது தலையில் தானே குட்டிக்கொண்டார் அகத்தியர்.

அதைப்பார்த்த பிள்ளையார் சந்தோசத்தில் சிரித்தார். தன் முன்னாள் இப்படி விளையாட்டுத்தனமாக பயபக்தியோடு குட்டிக்கொள்பவர்களுக்கு நல்ல மதி நுட்பதோடு நிதியையும் அள்ளித்தருவேன் என்று கூறினார் பிள்ளையார். இப்படித்தான் தலையில் குட்டிக்கொள்ளும் பழக்கம் உருவானது. ஆனைமுகன் முன்பு தலையில் குட்டிக் கொண்டு வணங்குவதால் நெற்றியின் இரு பொட்டுகளிலும் குட்டிக்கொள்வதால் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்கு சுரக்கும் என்பதை இன்றைய விஞ்ஞானம் உறுதிபடுத்தியுள்ளது.

....
தோப்புக்கரணம் புராண கதை:

கஜமுகாசுரன் என்ற அசுரன் சிவனிடம் பெற்ற வரத்தால் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினான், தேவர்களை பிடித்து வைத்து தோப்புக்கரணம் போட வைத்து ரசித்தான். அவனது தொல்லையை அடக்கி அழிக்க பிள்ளையாரை அனுப்பினார் சிவன். வரம் கொடுத்தவரே அழிக்கவும் ஆள் அனுப்பினார். கஜமுகாசுரனை தனது கொம்பினால் அழித்து தேவர்களையும் மக்களையும் ரட்சித்தார் பிள்ளையார். தங்களைக் காத்த முழுமுதற்கடவுளை மகிழ்விக்க தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டனர் தேவர்கள். இதைப்பார்த்து விநாயகர் மகிழ்ச்சியடைந்தாராம்.

தோப்புக்கரணம் போடுவதால் உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. தோப்புக்கரணம் போது ஓம் கணேசாய நம என்று உச்சரித்தல் சிறப்பு. மந்தநிலை நீங்கி உற்சாகமும் சுறுசுறுப்பும் கூடும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீரடைவதோடு புத்திசாலித்தனம் கூடும். மாணவர்களின் மதிப்பெண்கள் கூடும். இதை அறிந்துதான் அந்த காலத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் காதுகளை பிடித்து திருகுவதோடு தோப்புக்கரணம் போடுவதை தண்டனையாக கொடுத்தனர். அது தண்டனையல்ல வரம் என்பதை பல மாணவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.