அம்மா வயிற்றில் கருவாக இருந்தபோது,
அவள் சுவாசம்எனது சுவாசமாக மாறியது
அவள் உணவு எனது ரத்தமாக மாறியது
அவள் இதயத் துடிப்பு எனக்கு
முதலாவது இசையாக ஒலித்தது.
அவள் இல்லாமல்
நான் பிறந்திருக்க முடியாதெனில்
இன்று நான் எப்படி நானாக ?
அப்பா தோள் மேல் தூக்கி வைத்து
எனக்கு உலகை காட்டாவிடில்
அவர் தன் அனுபவத்தை கதையாய் பகிராவிடில்
இன்று நான் எப்படி நானாக ?
என் ஆசிரியர் கற்றுத்தந்த எழுத்துக்கள்,
என் நண்பர்கள் கொடுத்த சிரிப்பு,
என் எதிரிகள் தந்த காயங்கள்,
என் காதலி காட்டிய மௌனம்
இவை எல்லாம் சேர்ந்து
எனக்கு கிடைக்கா விடில்
இன்று நான் எப்படி நானாக ?
இந்த மண்ணின் வாசனை,
இந்த மொழியின் இசை,
இந்த மழையின் அரவணைப்பு,
இந்த கடலின் பேரிரைச்சல்
இவைகள் இல்லாமல்
இன்று நான் எப்படி நானாக ?
என் கவிதைகள் கூட என் சொந்தமல்ல
புத்தகங்களில் வாசித்த வார்த்தைகள்
பாடல்களில் கேட்ட இசைகள்
சாலைகளில் கண்ட காட்சிகள்
மக்களின் துயரம்,
அவர்களின் உற்சாகம்
இவையெல்லாம் என் சிந்தனையில்
ஓடிய ஓட்டத்தின் வெளிப்பாடு எனில்
இன்று நான் எப்படி நானாக ?
என் உடல் கூட என் சொந்தம் அல்ல.
இன்று வலிமை, நாளை சோர்வு.
இன்று இளமை, நாளை முதுமை,
இடைப்பட்ட காலத்தில்
இன்று நான் எப்படி நானாக ?
யாரையும் காயப்படுத்த
விரும்பியதில்லை
நான் யார் என்பதை கண்டறியும்
முயற்சியில்
இன்று நான் எப்படி நானாக ?
நான் விரும்பிய வாழ்க்கையும்
என்னை வழிநடத்தும் வாழ்க்கையும்
ஒன்றை மட்டுமே புரிய வைக்கிறது
என்றும் இன்றும் நான் நானாக இல்லை
****JOKER***