எவ்வளவு விலகியிருந்தும்
மறுபடியும் என்னை
தன் வட்டத்துக்குள் இழுத்துவிட்டது
இந்த மணித்துளி
இதன் பின் புலத்தில்
ஒளிந்திருப்பது இன்னதென
என்னால் ஊகிக்க இயலவில்லை
கைகுலுக்கல்
கை உதறல்
உதட்டு பிதுக்கல்
பெருமௌனத்தின் முடிவிலி
ஒரு திறப்பு
ஒரு சிகரம்
அனுபவம்
இனிய துவக்கம்
நிரந்தர முடிவு
எது எது அதனுள்
எனக்காக காத்திருக்கிறதென்று
முன்னுணர இயலவில்லை
இந்த மணித்துளி
சூன்யத்தின் நிலமாய்
என்னை பேதமைக்கும்
அச்சத்துக்கும் இழுத்து செல்கிறது
அதனுள் இருந்து
திமிறி எகிறி வெளிகுதித்துவிட இயலாதபடிக்கு
அதன் பிடி இறுக்கமானதாய் உள்ளது
தேவ கரங்களா
நரக கரங்களா
எது என்னை பற்றியுள்ளன ?
இது நடந்து போகிற ஓடையா
அடித்து போகிற நதியா
உடைந்து போகிற அணையா
அமிழ்க போகிற சமுதிரமா
எது எது எது இதுவென்று யோசித்தவாறு
இதனுடன் இயந்து சுழல துவங்குகிறேன்
தப்பித்து வெளியேற வழியறியாத இயலாமையோடு