3
« Last post by Ninja on Today at 12:06:41 AM »
‘கொல்லக் காட்டை வித்துட்டோம்ப்பா’
அம்மாவின் குறுஞ்செய்தி
மனதை அறுத்துக்கொண்டே இருந்தது.
சித்தப்பா சீர் செதுக்கி,
தூக்கி விட்ட
கழனிக் காடு
“எவ்வளவு கஷ்டம்னாலும் விவசாயத்த விட்டுராதய்யா”
பாட்டனின் சொல்லில்
வேர் பிடித்த சித்தப்பனின் வீராப்பு
நினைவுகளில் மின்னிச் சென்றது.
“சவுக்கு போடலாம் ம்மா,
அது பாட்டுக்கு கெடக்கும்… "
"ஆர்.எஸ். பதிய போட்டு விடுவோம் ம்மா,
அது பாட்டுக்கு கிடக்கும்”
“வேணாம்மா, வித்துறாத,
நான் வேலையை விட்டுட்டு
கொய்யா தோட்டம் போடுவேன்…”
என் ஒவ்வொரு
வாய் சவடாலுக்கும்
கழனி மாடு மேயும் களை காடாகி கொண்டிருந்தது.
அவ்வளவுதான்.
முடிந்தது.
ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும்போதும்
சித்தப்பாவின் தலையிலும் தோளிலும்
சுமந்த வரப்பட்ட
உளுந்து மூட்டைகள், வாழைத் தார்கள்,
எள் ஆடி எடுத்த எண்ணெய்கள்,
கடலை சாக்குகள்
மண மணக்க நிறைந்திருந்த வீடது.
இனி உலுக்கிய புளிகள் எங்கே போகும்?
ராய முனீஸ்வரனுக்கு
உளுந்து அறுத்து ஆடி பட்ட சாகுபடிய
படையல் இட
ஆளுமில்லை.
ஊருமில்லை.
பேருமில்லை.
நட்ட மரமெல்லாம் இனி பட்டுப் போகும்.
“களையும் கருவேலமும் முளைச்சுக் கிடக்குற காட்டுக்கு
யாரோ பாசனம் பண்ணி பயிர் வைப்பாங்களா?”
அம்மாவின் நியாயங்கள்,
நியாயங்கள்தான்.
சித்தப்பாவின் மெலிந்த கால்கள்
நினைவுக்கு வந்தது
உழைத்தே உழைத்தே தேய்ந்து போன கால்கள்,
சேற்றுப் புண்ணின் காய்ந்த தழும்புகள் நிறைந்த கால்கள்.
பாட்டனின் கால்களும்
முப்பாட்டனின் கால்களும்
நினைவுக்கு வந்தது.
எந்த நிலத்து சேற்றையும் அறியாத
என் கால்களை மெதுவாக தடவிக் கொண்டேன்.
மனக்குடையான் ராய முனீஸ்வரா
நெலத்த மட்டும்
எப்பவும் தழைக்க வச்சிருய்யா.