காற்றுக்காக ஜன்னல் திறந்து
உட்காரும்போது
தாழ்வாரத்து விட்டத்து கூண்டில்
தொங்கி விளையாடும்
ஊடல் குருவிகள்......
தென்றலின் பாடலுக்கு
தப்பாமல் தலையாட்டும்
பூந்தொட்டி மலர்கள்....
வாசல்வரை வந்து
வாலாட்டி வழியனுப்பும்
எதிர் வீட்டு நாய்க்குட்டி...........
கட்டுமான இறுக்கங்களை பிளந்து
வேர்விட்டு முளைத்திருக்கும்
அரசமரக் கன்று...........
தட்டில் விழுந்த ஒற்றை நாணயத்தை
திரும்பத் திரும்ப
தடவிப் பார்க்கும்
கண்ணற்ற பிச்சைக்காரன்.....
எல்லாப் பரப்பிலும்
சிதறிக் கிடக்கின்றன
காலம் ஏற்கெனவே எழுதிய
கவிதைகள்....