எரிந்து போன மேய்ச்சல்
நிலமாய் - நான்..
நண்பர்களின் கணிப்பு
எட்ட விலகியே போனது
அவர்களின் உறவு
எரிந்து போன நிலத்திலும்
புற்கள் துளிர்க்கும்..
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் நான்..
நான் கட்டும் கோட்டைகள்..
நிலம் தொட்டுத்தான்
வானளாவ உயர்ந்தது..
இனியும் உயரப்போகிறது..
என் வெற்றிக் கோட்டைகளை
தகர்த்தவர்கள்
இன்று ஆடலாம்..
ஆடிப்பாடலாம்....
ஆனாலும்
களைத்துப் போவார்கள்
ஒருநாள்..
புதிய சகாப்தமொன்றை
எழுதுவதற்காய்
நான் காத்திருக்கிறேன்
முனைப்புடன்..
முன்னிலும் கூர்மையாய்..
சுயவிமர்சனங்கள்
என்னைப் புடம்போட..
உறவுகள் எனக்காய்
பரிந்து வர..
புதிய மனிதனாகி விட்டேன்
நான்
எரிக்கப்பட்ட நிலத்தின்
எஞ்சிய வேர்களிலிருந்து..
மீண்டும் துளிர்க்கும்
ஆசையில்....
எல்லோரும் தம்மிஷ்டம்போல
கலைத்துப் போட..
நானொன்றும்
மணல் கோட்டையில்லை..
தீப்பட்ட இரும்பென..
விடியலின் செந்நிறமாய்
எனக்குள்ளும் தகிக்கும்
இலட்சிய வேட்கை
நாளைய பொழுதில்
அது வெல்லும்
நிச்சயமாய்...
காட்டுத்தீயாய் ..
என்வாழ்வின் துயரங்கள்
அணைந்து போகும்
ஒருநாள்..
பூத்துக்குலுங்கும்
புல்வெளியாய்..
புதுவாழ்வு காண்பேன்
அந்நாள்...
காத்திருக்கிறேன்
எதிர்பார்ப்புகளோடு...