பெண் யாருக்காக பிறந்தாளோ
கண்ணீர் மட்டும்
பெண்ணுக்காகவே பிறந்திருக்கிறது
பெண்களை பொறுத்தவகையில்
திருமணங்கள் கூட
அவர்களுக்கு நேரும்
விபத்தாகவே மாறிவிடுகின்றன
இன்றைய திருமணங்கள்
சொர்க்கதிலா நிச்சயிக்கப்படுகிறது
தரகர்களாலும் தாய்தந்தையாலும்
நிச்சயிக்கப்படுகின்றன
மணப்பொருத்தத்தை
துருவித்துருவி பார்ப்பவர்கள்
மனப்பொருத்தத்தை என்றாவது பார்க்கிறார்களா
உடையில் உணவில்
பெண் விரும்பியதை அளிக்கும் பெற்றோர்
அவள் வாழ்க்கையையே தீர்மானிக்கும்
திருமணத்தில் அவள்
விருப்பத்தை கேட்பதில்லையே, ஏன்?
வழிவழியாகா வருகின்ற
கட்டுப்பாடுகளால்
வாயடைத்துப் போயிருக்கும்
அவள் மெளனம்
எப்போதும் சம்மதமாகவே எடுத்துக் கொள்ளப்படுவது
எத்தனை கொடுமை
எந்த நாணம்
பெண்ணை அலங்கரிக்கிறதோ
அதே நாணம் அவள்
ஆசைகளின் உதட்டுக்கு
பூட்டாகி விடுகிறதே
எந்த பொறுமை
பெண்ணுக்கு பொன்மகுடம் சூட்டுகிறதோ
அதே பொறுமை
அவள் கழுத்தில் விலங்கிட்டு
ஆயுள்கைதி ஆக்கி விடுகிறதே
எத்தனை திருமண அழைப்பிதழ்கள்
கண்ணீர் துளிகளால்
அச்சுக் கோர்க்கப்படுகின்றன
எத்தனை தாலிகள்
இதயங்களின் தூக்குக்கயிறுகளாக
தொங்குகின்றன
எத்தனை ஓம நெருப்புகள்
கனவுகளின் ஈம நெருப்புகளாக
கொளுந்து விட்டெரிகின்றன?