Author Topic: அந்தநாள் நியாபகம்  (Read 12 times)

Online Oonjal

  • Newbie
  • *
  • Posts: 49
  • Total likes: 246
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
அந்தநாள் நியாபகம்
« on: July 13, 2026, 01:03:48 PM »
அந்த நாள் நியாபகம்
       நெஞ்சிலே வந்ததே

‎இயற்கை எழில்
‎கொஞ்சும் சிறு கிராமம்
‎அங்கேதான் எனது வீடு
‎வீட்டு முற்றத்தில்
‎பல கிளைகளைப் பரப்பி
‎நிழல் கொடுக்கும்
‎பெரிய வேப்பமரம்
‎அதில் அப்பா கட்டி தந்த
கயிற்றூஞ்சல்
‎நான் நடை பழகிய
‎காலத்தில் இருந்து
‎என் தோழி

‎அப்பா பின்னால்
‎நின்று மெதுவாக ஆட்டிவிட
‎அதனை ரசிக்கும் விழிகளோடு
‎"விழுந்து விடாதே செல்லம்"
‎பதறும் அம்மாவின் குரல்
‎அப்பா "இன்னும் கொஞ்சம்"
‎"இன்னும் உயரமாக" என்று
‎கொஞ்சும் எனது மழலை குரல்

‎குழந்தை சிறுமியாக மாறினேன்
‎பாப் கட் முடி குட்டை பின்னலானது..
பள்ளியிலிருந்து வந்ததும்
‎ஓடி வருவேன்
உன்னிடம்...
‎தேர்வு பயமோ
‎மதிப்பெண் கவலையோ
‎உன்னை கண்டால் மறந்தே போகும்
‎பல நேரங்களில் ஊஞ்சலாடும்
‎பொழுது வானத்தின் நிலவை
‎எட்டி பிடிக்க காற்றுடன்
‎போட்டி போடுவேன்

‎சிறுமி குமரியானேன்
‎குட்டை பின்னல்
‎நீளமான பின்னலானது..
‎பாவாடை தாவணியாக மாறியது
‎பெண்ணாக மலரும் தருணம்
‎யாரிடமும் சொல்ல முடியாத மாற்றங்கள்
‎புதிய உணர்வுகள் அனைத்திலும் 
‎தஞ்சமடைந்தேன் உன்னையே..
‎நான் பேசவில்லை
‎நீயும் பேசவில்லை
‎நம் மௌனம் ஆயிரம் கதைகள்
‎பேசிக்கொண்டது

‎தாவணி சேலையாக மாறியது
‎ஒரு காலத்தில்
‎வானத்தைத் தொட பறந்த கால்கள்
‎இப்போது மெதுவாக
‎மட்டுமே ஆடியது
‎சில மாலைகளில் எதுவும் பேசாமல்
‎அமைதியாக அமர்ந்திருப்பேன்
‎என் சிரிப்பையும்
‎என் மௌனத்தையும்
‎முதலில் கேட்பது
‎நீ மட்டுமே

‎திருமண நாள் வந்தது.
‎பிறந்த வீட்டைவிட்டு
கிளம்பும்போது
‎கண்ணீரோடு
‎நான் திரும்பிப் பார்த்தது
‎அம்மா அப்பாவை மட்டுமல்ல
‎உன்னையும் தான்.
‎என் குழந்தை பருவத்தை
‎பிறந்த வீட்டின் ஊஞ்சலோடு
அங்கேயே விட்டுவிட்டு
‎புது வாழ்க்கையை தொடங்க
‎கிளம்பினேன் புகுந்த வீடு..

‎புகுந்த வீட்டில் கிடைத்ததோ
பிளாஸ்டிக் கூடை ஊஞ்சல்..
‎அதிலும் ஆடினேன்..
‎ஆனால் வேப்பமர காற்றோ
‎அப்பாவின் ஆட்டலோ
‎அம்மாவின் அக்கறையோ
‎இல்லாமல் மகிழ்ச்சி
‎கிட்டவே இல்லை

‎பொறுப்புக்கள் வளர்ந்தது
‎கணவன்
‎குடும்பம்
‎சமையல்
‎குழந்தை என்று
‎ஒவ்வொரு நாளும்
‎எனக்கான நேரத்தை
‎சிறிது சிறிதாக திருடிக் கொண்டது
‎வாழ்க்கை என்னை
‎ஒரு மனைவியாகவும்
‎ஒரு தாயாகவும்
‎ஒரு இல்லத்தரசியாகவும்
‎மாற்றி விட்டது

‎ஆனால்...
‎என் உள்ளத்தின் ஒரத்தில்
‎இன்னும் ஒரு சிறுமி
‎இருக்கிறாள்
‎அவள் இன்னும்
‎அந்த வேப்பமர ஊஞ்சலில்
காற்றோடு போட்டி போட்டு
‎ஆடிக் கொண்டிருக்கிறாள்

‎ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும்
‎உணர்வில் கலந்த மறக்க முடியாத
‎ஒரு தோழி இருப்பாள்
‎அவள் பேச மாட்டாள்....
‎சிரிக்க மாட்டாள்...
‎ஏன் அழவும் மாட்டாள்...
‎என் வாழ்க்கையில்
‎அந்தத் மௌனத்தோழியின் பெயர்
‎                               
                                 ‎ஊஞ்சல்
« Last Edit: July 13, 2026, 01:09:16 PM by Oonjal »