Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 406  (Read 243 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 406

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline Thenmozhi

 "பணம் உன்னை கட்டிப் போடும் சங்கிலி"
     
 வாழ்வின் தேவைகளை
நிறைவேற்றும்  கருவி பணம்!
பணமே வாழ்வின் இலக்கானால் 
அது மனிதனை கட்டி வைக்கும்
சங்கிலியாக மாறிவிடும்!

பணம் என்றால் பொன்னொளி
மின்னும் கனவு பூத்திடும்
பலர் கண்களில்..
அதன் மறுபக்கம் பார்த்தால்
மனதைப் பிணைக்கும்
சங்கிலி தெரியும்..
வாழ்வை வளமாக்க வந்த பணம் வாழ்வையே விழுங்கும்
வலிமை கொண்டது!

பணத்தின் பின்னால் ஓடும் மனிதன்,
இழக்கத் தொடங்குகிறான் ஆரோக்கியம்,சுதந்திரம்,நிம்மதி,உறவுகளை..
தங்கச் சங்கிலி அழகாகத் தோன்றினாலும், அது சங்கிலிதான் அதுபோல் பணமும்
வெளியில் பிரகாசமாகத் தெரிந்தாலும்,
அளவுக்கு மீறிய பற்றுதல்
 மனிதனை அடிமையாக்கும்!

பணம் உன்னை கட்டி வைத்து
முட்டி போட வைக்கும் சங்கிலி!
அதன் ஒவ்வொரு வளையமும்
ஆசை, பேராசை, போட்டி, பொறாமை,அகங்காரம்
என்பவற்றால்  பின்னப்பட்டிருக்கும்!
அந்த சங்கிலியில் சிக்கியவன்
உயர்ந்து நிற்கிறான் என்று
உலகம் நினைத்தாலும்,
அவன் உள்ளம் மண்ணில்
முட்டி போட்டு கிடக்கிறது!

கணக்கில் கோடிகள் சேரலாம்
ஆனால் மனதில் குறையும் அமைதி
வீடுகள் மாடிகள் ஆகலாம்ஆனால்
தூரமாகும் இதய உறவுகள்!

நாணயத்தின் சிதறல் சத்தம்
காதில் விழுகின்ற கணமே
நட்பின் குரல் மங்கிவிடும்!
பேராசை பிடித்துவிட்டால்
பாச பிணைப்புகள் உடைந்துவிடும்!

உழைப்பின் வியர்வையில் பிறந்த பணம் உயர்வின் படிக்கட்டுகளாகும்!
ஏமாற்றத்தின் வழியில் சேர்ந்த பணம் இதயத்தில் காயங்கள் பதிக்கும்!

பணம் பஞ்சமா பாதகங்களான
கொலை, களவு, பொய், கள், காமம்
என்பவற்றை செய்ய வைக்கும்
வல்லமை கொண்டது!

அன்பு, கருணை, நேர்மை போன்ற மனிதநேயத்தில் உள்ளது
உண்மையான செல்வம் !
பகிர்தல்  இல்லாத பணம்
வெறும் எண்ணிக்கை மட்டுமே!
நம் கையில் இருக்கும் பணத்தை
நம் மனதில் வைத்து
பணம் நம்மை ஆள அனுமதிக்கக் கூடாது!
பணத்தை நம் அறிவால் ஆள வேண்டும்!

சுதந்திரம் தேடி ஓடும் கால்கள்
சொத்தின் சுமையில் சோர்கிறது!
பணத்தை வழிநடத்தும் மனிதன்
பாரினில் வெல்வான்!
பணத்தினால் வழிநடத்தப்படுபவன்
மண்டியிட்டு வீழ்வான்!
பணத்தை மதித்து சேமித்துக்கொள்!
பணத்திற்காக உன்னை இழக்காதே!

பணத்தினால் வாழ்க்கை
அதன் எல்லையை மீறும்!
பணம் உன்னை கட்டி
இழுக்கும் சங்கிலி ஆகாமல்,
உன் சிந்தனையே அதன்
பூட்டைத் திறக்கும் சாவி!

சங்கிலியை அணிந்திருப்பவன்
அழகாகத் தோன்றலாம்
ஆனால் சங்கிலியை அறுத்தெறிந்து சுதந்திரமாக நடப்பவனே
உண்மையில் செல்வந்தன்!
பணம் உனக்காக வேலை செய்யட்டும்
நீ பணத்திற்காக முட்டி போடாதே!
அதுதான் உன் வாழ்வின்
உண்மையான வெற்றி!













« Last Edit: Today at 03:35:24 PM by Thenmozhi »

Offline Luminous

தாய்மண் தாகம்
சொந்த மண்ணில் முளைத்த அறிவே,
சொர்க்கம் தேடி சென்றதேன் பிறிவே?

பள்ளி தந்தது பாசமிங்கே,
பட்டம் தந்தது பூமியிங்கே,
பறந்து சென்றாய் பணம் தேடி,
பாச மண்ணை விட்டுப் போயே!

டாலர் டாலராய் குவிந்தாலும்,
தாய்மண் வாசம் வருமோ சொல்லு?
கோடி கோடியாய் சேர்ந்தாலும்,
கூடு தந்த நிம்மதி தருமோ?

சுதந்திரம் சொந்த நாட்டின் சுவாசம்,
சுகவாழ்வு மட்டும் அல்ல வாழ்க்கையின் நேசம்.

அந்நிய மண்ணின் அழகெல்லாம்,
அடிமை வாழ்வின் முகமூடி.
பொன்னால் செய்த சங்கிலியிலும்,
பூட்டப்பட்டதே சுதந்திரம்!

உழைத்த அறிவின் ஒளியெல்லாம்,
உலகம் போற்றும் வலிமையென்றால்,
உன்னை வளர்த்த மண்ணுக்காக,
ஒரு தீபம் ஏற்ற மறப்பதேன்?

மண்ணின் கடனை மறந்துவிட்டு,
மாளிகை கட்டி வாழ்ந்தாலும்,
மனத்தின் ஓரம் எந்நாளும்,
மண்ணின் நினைவே நிற்குமன்றோ?

இன்றைய இளைஞர் உணரட்டும்,
இன்னல் தீர்க்க முனையட்டும்,
கற்ற கல்வி, பெற்ற அறிவை,
காணும் நாட்டில் விதையட்டும்!

மண்ணில் பிறந்து மண்ணை மறந்தால்
மதிப்பு என்ன வாழ்வுக்கு?
மண்ணை உயர்த்தும் மனிதனுக்கே
மகுடம் சூடும் வரலாறு!

பணம் சேர்ப்பது பெருமையல்ல,
பாரதம் சேர்ப்பதே பெருமை.
வெளிநாடு வெல்வது சாதனையல்ல,
சொந்த நாடு உயர்வதே சாதனை!

பிறந்த மண்ணை மறந்த அறிவு முழுமையல்ல,
பிறந்த மண்ணை உயர்த்தும் அறிவே உண்மையான வெற்றி
." 💯😇💜💙💚💛🧡Luminous
« Last Edit: June 22, 2026, 10:58:53 PM by Luminous »

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1973
  • Total likes: 6156
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
"லாட்டரி பணமும் கொள்கையின் விலையும்"


அதிர்ஷ்டம் சிலருக்கு
லாட்டரி அடித்தால் கிடைக்கும்...
ஆனால் சில லாட்டரிகள்
பணத்தை மட்டும் அல்ல
மனிதர்களின் மதிப்பையும்
வாங்கும் அளவுக்கு
செல்வத்தை குவித்து விடும்...

அதிர்ஷ்டத்தில் வந்த செல்வம்
என்று சொன்னாலும்
அது பாயும் இடமெல்லாம்
சில உண்மைகளின் குரல்
மெதுவாக மௌனமாகிறது...

அதிகாரம் என்னும் நாற்காலிக்கு
ஆசைப்பட்டவர்கள்...

சமூக நீதி
சமத்துவம்
கம்யூனிசம் எனும்
பெரிய பெரிய கொள்கை பர்னிச்சர்களை...

பணம் குவிக்கப்பட்ட
ஒரு சிறிய சோபா என்னும் ஆசையால்
அடித்து நொறுக்கி விட்டார்கள்...

நேற்று வரை
மக்களுக்காக பேசிய குரல்கள்
இன்று பணத்தின் முன்
தங்கள் வார்த்தைகளை தொலைக்கின்றன...

கொள்கை இல்லாத கைகளில்
பணம் ஒரு ஆயுதமாகிறது...
அது மனிதர்களை அல்ல
மனசாட்சியையே விலைக்கு கேட்கிறது...

சந்தையில் பொருட்கள்
விற்கப்படுவது போல்
சில நேரம்
மனிதர்களும் விற்கப்படுகிறார்கள்...
விலைக்கு போனது
மனிதர்கள் அல்ல
அவர்களின் கொள்கைகள்...

வாய்களை
மூடலாம் பணத்தால்
குரல்களை
அடக்கலாம் அதிகாரத்தால்...
ஆனால்
உண்மையின் பாதையை
எந்த செல்வத்தாலும்
அழிக்க முடியாது...

ஏனென்றால்...

பணம் வாங்கும் கூட்டம்
பெரிதாக இருக்கலாம்...
ஆனால்
கொள்கையோடு நிற்கும்
ஒரு குரல்
காலம் கடந்தும் வாழும்...

வரலாற்றின் தீர்ப்பை மட்டும்
எந்த லாட்டரி பணத்தாலும்
வாங்க முடியாது...


Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1308
  • Total likes: 1185
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
சின்ன ஆசையாக சிறுசேமிப்பாக பணம் இருந்தால்
நாம் சுதந்திரமாக இருக்கலாம்
பேராசையாக பண ஆசையால் சேர்க்க நினைத்தால்
அது இரும்பு சங்கிலியால் நம்மை கட்டி விடுகிறது

பணம் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றுதான்
 நம் வாழ்வை வளமாக்கும்
செழுமையாக வைத்திருக்கும்
பணமே நம் மனதில் இருந்தால்
நம் வாழ்க்கையை சிதறடிக்கும்

தேவைக்கு அதிகமான பண ஆசை
பேராசையாக பொருளை சேர்க்க நினைப்பது நமது சுதந்திரத்தை கட்டிப்போட்டு மன அமைதியை பறிக்கிறது

கையில் இருக்கும் பணத்திற்கு
அளவே இல்லை
பணத்தின் மேல் இருக்கும் ஆசையும்
தீர போவதில்லை

நாம் நாமாகவே வாழும் வரை
மன அமைதியுடனும்
உறவுகளுடனும் வாழ்கிறோம்
பிறரைப் போல் வாழ நினைக்கும் போது தான் பண ஆசை நம் மனதில் வருகிறது

பணத்தாசை அழிவுக்கு மட்டுமே
வழி வகுக்கும்
போதும் என்ற மனமே வாழ்வை நல்வழிப்படுத்தும்

நேர்மையுடன் உழைத்த பணம் நம்மை தலை நிமிர வைத்து
வாழ்வை‌ வளமாக்கும்

தீய வழியால் சேர்த்த பணம்
 தங்கத்தால் உடல் முழுவதும் அலங்கரித்துக் கொண்டாலும்
தலைகுனி உடன் நிற்பான் என்றாவது
பணம் என்ற போதையில் மாய உலகில் மன அழுத்தத்தால் தன்னைத்தானே கட்டுப்பட்டு இருப்பான்

பணத்திற்காக சொந்தம் பந்தம் உறவுகளை இழப்பவன் இறுதியில் பணம் மட்டுமே அவனிடம் இருக்கும் தனிமைப்படுத்தப்படுவான்

 போதும் என மனம் வராது
சேர்த்த பணத்தை பாதுகாப்பதிலே அவன் மனம் இருக்கும்
நிம்மதி சந்தோசம் இல்லாத வாழ்க்கையுடன் தூக்கம் இருக்காது
பண ஆசையே அவனை சங்கிலி 
மாதிரி இறுக்கிட்டு போகும்

கண்ணை மறைக்கும் பணத்தாசை
விலைமதிப்பற்ற  மனித உறவை
விலக்கி வைக்கும்.
நிலையில்லாத பணத்தாசையை
விட்டு நிலையான
மனித உறவு செல்வம் மதிப்போம்

அளவுக்கு மீறினால்  அமிர்தமும் நஞ்சு ஆசையை குறைப்போம்
ஆனந்தமாய் வாழ்வோம்
இருப்பதைக் கொண்டு
இனிமையாக வாழ்வோம்

போதும் என்ற மனமே
பொன் செய்யும் மருந்து
மனநிறைவே மனிதனின்
மகத்தான செல்வம்

பேராசை இல்லாமல் தன்னிடம் உள்ளதைக் கொண்டு திருப்தி அடைபவர்களின் வாழ்க்கை
மன ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்

பணம் சேமிப்பு பழக்கம்
கெட்டது இல்லை
சேமிப்பு பணத்தை கையாளும்
விதத்தில் தான் உள்ளது
இனிய வாழ்க்கை
பணம் நாம் கையில் இருக்கனும்
நமது மனதில் பேராசையாய்
செல்ல கூடாது

Offline Sethu

சொந்த பந்தங்கள்
ஆயிரம் இருந்தாலும்
பணம் இருந்தால் தான்
அந்த சொந்தம் கூட
நம்மை சொந்தம் என்று
சொல்லும் பணமே !

நீ இல்லை என்றால்
எனக்கு ஏது உணவு
எனக்கு ஏது சொந்தம்
ஒரு மனிதனின் பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக இருப்பது பணமே !
அந்தப் பிரச்சனையின் முடிவில் பிரச்சனைகளை தீர்ப்பது
பணமே நீதான்
இது உலக மக்கள்
அறிந்த ஒன்றல்லவா ?

என்னுடைய சிரிப்பிற்கும் சந்தோசத்திற்கும் பின்னிற்பது பணமே நீ தானே !
இதற்குத்தானே என்  வாழ்நாள் முழுவதும் தேடி திரிகிறேன் உன்னை சில நேரங்களில் அடைவதற்காக எனது தன்மானத்தை இழக்கிறேன் !

பணமே உன்னை பெறுவதற்காக எத்தனை எத்தனை இழப்புகள் ஊரு விட்டு ஊரு வந்து உன்னை பெறுவதற்காக என் அன்னையின் அன்பை இழந்தேன்...
என் தந்தையின்
பாசத்தை இழந்தேன்...
என் சகோதரனின் நேசத்தை இழந்தது  ஏன் உன்னை பெறுவதற்காக மட்டுமே
என் கைகளை என் மனதை கட்டிக்கொண்டு ஒரு தனி மரம் போல் அனாதையாக வாழ்கிறேன
பணமே உனக்காக ...

பணமே விவசாயிகளிடம் நீ வருவது மிக சிறிதளவு
ஆனால் உன்னை பெறுவதற்காக இரவு பகல்பாராமல்
மழை வெயில் பாராமல் விவசாயிகள் படும் பாடு
இவற்றை நான் நன்கு அறிவேன் ஏனென்றால் நானும் ஒரு விவசாயின் மகன் தானே ❤️❤️🌹

Offline Rahmathulla


   உயிர் காட்கும் தோழன்



ஒரு செல்வந்தனின் மகன் நான். ஒரே ஒரு புதல்வனும் நானே.என்னால் எதையும் வாங்க முடியும் எதையும் அழிக்க முடியும் என்ற திமிரு என் கூடவே இருக்கும் மந்திர சொல்லு..

காலை எழுந்ததும் உழைப்பு என்றால் என்னவென்று தெரியாத எனக்கு  வீட்டில் lockerril உள்ள  பணத்தை கட்டு கட்டாக எடுத்துட்டு

வெளியே நண்பர்களுடன் ஊர் சுற்றும்  திமிரு பிடித்த வாலீபனாக வாழ்ந்தேனே..

யாரு பேச்சுக்கும் அடங்காத அரக்கணும் நானே. நானே ராஜா நானே மந்திரி என்ற கர்வம் கொண்ட ஆணவகாரனும். நானே.
வாழ்க்கை வாழ தானே . அந்த வாழ்க்கைக்கு  பணம் தானே முக்கியம் அந்த பணம் என்னிடம் நிறையாக உள்ளது..

பணம் என் கையில் இருக்கும் திமிருல. என்னை படைத்த இறைவன் மேல் பயம் இல்லாமல் ஆடிய ஆட்டம்  கணக்கிட்டு சொல்ல முடியாது..

அம்மா சொன்னாள் தலைக்கு மேல் தண்ணி போகுது மகனே என்று..
 அந்த மௌனத்தைக் கூட என்னால் விலைக்கு வாங்க முடியவில்லை என்பது அப்போது தெரியவில்லை.

நான் சொன்னேன் தண்ணியை விலைக்கு வாங்கிடலாம்மா என்று..
அப்பா மௌனமாகப் பார்த்தார்.. தன் செல்லப்பிள்ளையே   எப்படி சத்தம் போடுவது என்று..

அன்றைய தினம் இரவில் என் ஆட்டம் முடியப்போகுது என்று நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை..

வீடு வந்தேன்.. அம்மா உங்க அப்பா இன்னும் வீட்டுக்கு வரவில்லை..
Call பண்ணி பேசு என்று..
உடனே call செய்தேன் அப்பா call எடுக்கவில்லை...

நான் போறேன் அப்பா எங்க இருக்கார் என்று பார்த்து  கூப்பிட்டு வரேன் அம்மா என்றேன்..

car la போறப்ப ஒரே மண குழப்பம் அப்பாக்கு எதுவும் ஆச்சோ என்று..
சிறிது நேரத்தில் பயம் குடுக்க ஆரம்பித்து  எங்கே தேடியும் அப்பாவை காணவில்லை..

இறைவன் வணங்காமல் இருந்த நான் அன்று டேய் அல்லாஹ் எனக்கு ரொம்ப பயமா இருக்கு..

car ஐ ஓரமாக நிறுத்தி விட்டு ஒரே அழுகை அப்பாவை காணோம் நான் எப்படி என் அம்மாவிடம் சொல்லவேன் என்று..

தூரத்தில் ஒரே கூட்டம் போல் தெரிந்தது.. அந்த நொடி ஓட்டம் பிடித்தேன்.. அந்த இடத்தில் சென்ற போது என் அப்பா தான் car விபத்தாகி  உள்ளார்.

அந்த நிமிடம் என் ஆணவம்  பண திமிரு  என் கர்வம்.. எல்லாம் தூரம் போய்விட்டது..

யாராச்சும் எங்க அப்பாவை தூக்க வாங்களேன் என்றேன்.
ஒரு ஏழை நண்பன் நான் இருக்கேன் வாங்க என்று என் அப்பாவை இருவரும் தோளில் சுமந்து hospital  க்கு போனோம்..

என் நண்பர்களுக்கு call செய்தேன் யாரும் call எடுக்கவில்லை..
 அந்த ஏழை நண்பன் உங்க அப்பாக்கு  ஒன்னும் ஆகாது.. நல்லாயிரும் என்று சொன்ன உடனே. அந்த நண்பனை கட்டி பிடித்து அழுதேன்..
பணம் மட்டும் தான் என் குறிக்கோள் ஆக இருந்தேனே தவிர  இப்படி பாசம் வைக்க ஒரு நல்ல நண்பனை நான்  தேர்ந்தெடுக்கவில்லை என்று என்னும் போது மீளா துயரம் எனக்குள்..

எனக்கு உதவியாக இருந்த அந்த நண்பனுக்கு   நான் என்ன கைமாறு செய்ய போறேன்..
 உடனே அம்மாவுக்கு call பண்ணி அப்பா நன்றாக இருக்கார்  சிறிது காயம் தான் hospital ku vanga என்று சொல்லி வரவழைத்தேன்..

இக்கட்டான சூழ்நிலையில் என் கூட நின்ற அந்த நண்பன் போல் வருமா..

இல்லை என்னிடம் பணம் பறித்து தின்ற   நண்பர்களை  எண்ணி மனம் வருந்தினேன் அன்றே  நண்பர்களை விட்டு தூரம் விலகினேன்..

டேய் நண்பா நீ பாசத்தால இந்த உலகை வென்றுவிட்டாய்..
 ஆனால் நானோ பணம் மிதக்கத்தில்    இருந்து உன் பாசத்தை கண்டு வியப்புடன் தலை கவிழ்ந்து நிற்கிறேன்..

Priyamudan
Rahmathulla

Offline Ninja

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 523
  • Total likes: 1376
  • Karma: +0/-0
  • When u look into the abyss, the abyss looks into u
காசு.. பணம்... துட்டு... money money...

சத்தியம தவறாத உத்தமன் போல
நடிப்பான்
சந்தர்ப்பம் வந்தா சட்டப்பையில
நோட்ட திணிப்பான்.
காசுக்கு ஓட்ட வாங்குவான்
கந்துவட்டிக்கு கொடுத்து புரட்சி பேசுவான்.
ஊழல் ஒழியனும்னு மேடைல கத்துவான்
உண்மைய ஒழிக்க (ஒளிக்க) கரன்சி நோட்ட சுத்துவான்

ஐநூறு ரூவா நோட்டுக்கு எதிர்காலத்த வித்துட்டு
'ஐயோ எங்க போகுது நாடு'ன்னு தத்தளிப்பான்.
நேர்மைய மேடையில பேசுவான்
நேரம் வந்த நேர்மையயும் விலை பேசுவான்.
கொள்கைன்னு முழங்குவான்,
கொஞ்சம் பெரிய சோபா(sofa) கொடுத்தா கூட்டணியும் மாறுவான்.

லஞ்சம் வாங்குறான்னு கத்துவான்,
தன் வேலை ஆகனும்னா
'கொஞ்சம் பார்த்து பன்ணுங்க சார்ன்னு
கால சுத்துவான்.
பாசம் கூட விலைக்கு வரும்,
படியேறி கோர்ட்டுக்கும் போகும்,
காசிருந்தா அந்த நீதி தேவதையும் கண்ண தொறப்பா
கைமேல நோட்ட வச்சா காக்கியும்
பல்ல இளிப்பான்.

உண்மை பேசினா கூடுமா கூட்டம் ?
உண்டியலை உலுக்குனா கூடும் இந்த கூட்டம்.
கனவுக்கும் வேணும் காசு
கல்விக்கும் வேணும் காசு
கல்யாணத்துக்கும் வேணும் காசு
கடைசி பயணத்துக்கும் வேணும் காசு.
காசு இருந்தா நீ 'சார்'
காசு இல்லன்னா நீ 'யாரு'

நல்லது செஞ்சா கூட
நாலு நோட்ட வச்சே
நம்மள அளக்கும் இந்த உலகம்.
போதும்டா சாமி அந்து போச்சு உங்க ரீலுன்னு
கடவுள்கிட்ட போனா கூட
காணிக்கையா கேட்பான் காசு.
கடவுள் எங்கன்னு தேடாத
கையில இருப்பான், பையில இருப்பான்
கண்ண மூடினா கனவுலையும் வருவான்
கலர் கலரான கரன்சி நோட்டா..

Offline Madhurangi

  • Sr. Member
  • *
  • Posts: 260
  • Total likes: 926
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
பணச் சங்கிலி

விளையாடத் துடித்த பால்ய வயதில்,
விளையாட்டுப் பொருட்களைத் தேடி அலைந்தேன்!
"அப்பாவுக்கு அடுத்த சம்பளம் வரட்டும்" என,
அம்மாவின் வார்த்தைகளில் கட்டுண்டேன் பணச் சங்கிலியில்!

படிக்கும் வயதில் உயரப் பறக்க நினைத்தேன்,
விரும்பிய கல்வியை நாடி நின்றேன்!
ஆசைக்கும் இலட்சியத்துக்கும் விலை உண்டாம் அங்கே,
காசில்லாத காரணத்தால் அங்கேயும் கட்டுண்டேன் பணச் சங்கிலியில்!

முட்டி மோதி பள்ளிக் கல்வி முடித்தேன்,
முன்னேற எண்ணி நல்வேலை தேடினேன்!
தகுதியை மிஞ்சி நின்ற சிபாரிசும் இலஞ்சமும்,
தகர்க்க முடியாமல் தொழில் தெருவிலும் கட்டுண்டேன் பணச் சங்கிலியில்!

இளமைப் பருவத்தில் காதலைத் தேடினேன்,
இதயத்திற்குப் பிடித்தவள் கைபிடிக்க ஓடினேன்!
சொந்த வீடும் வங்கிச் சேமிப்பும் வேண்டுமாம் அங்கே,
சொந்தக் காதலின் தேர்வில்கூட கட்டுண்டேன் பணச் சங்கிலியில்!

இதோ நடை தளர்ந்து, வயது முதிர்ந்து,
இறுதி வாயிலை நோக்கி காத்து நிற்கிறேன்!
முதியோர் இல்ல "பேக்கேஜ்" பேரம் பேசுகிறான் மகன்;
பெற்ற பிள்ளையின் அன்பின் அளவுகோலிலும் கட்டுண்டேன் பணச் சங்கிலியில்!

உழைப்பும் நேர்மையும் இங்கே வெறும் காகிதக் கப்பலோ?
உலகை ஆட்டிப்படைக்கும் கரன்சிகளே உண்மைக் கடவுளோ?
விலங்கிடப்பட்ட கைதியாய் இந்த மாயச் சிறையில் நின்று,
விதியென நானும் கட்டுண்டேன் பணச் சங்கிலியில்!

திறமையும் இறைநம்பிக்கையும் வெறும் நிழல் வேஷமோ?
பணத்தின் பலம் மட்டுமே வாழ்வை ஆளும் தராசோ?
பிணமாய் மாறும் வரை தொடரும் இந்த மாய வித்தையைக் கண்டு,
பிறவிப் பெருங்கடலிலும் கட்டுண்டேன் பணச் சங்கிலியில்!

Offline Kavii

  • Jr. Member
  • *
  • Posts: 53
  • Total likes: 281
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
காற்றில்லா தேசத்தில் வாழவும் முடியுமோ?
காசில்லா வாழ்வில் நல் வழியும் கிடைக்குமோ?
வெறும் அன்பை மட்டும் வச்சு வயிறு நிறையாது,
காசில்லா மனிதனை உலகம் அறியாது!

தாய்ப்பாலுக்கு அடுத்தபடி தேவையிங்கு காசு,
அதுதான் தீர்மானிக்கும் நம்முடைய மூச்சு!
மருத்துவ மனை வாசல் மிதிக்க வேண்டும் என்றால்,
பணப்பையின் கனம் தானே உயிரைக் காக்கும் அங்கே?

கௌரவமும் மரியாதையும் காசுக்குத்தான் உண்டு,
பணமிருந்தால் ஊருக்குள் சொல்வாக்கும் உண்டு!
இல்லையென்றால் நிழல்கூட நம்மை விட்டு விலகும்,
வறுமையின் பிடியினில் வாழ்வே நரகமாகும்!

ஆசைகள் யாவையுமே காகிதத்தில் அடங்கும்,
காசில்லை என்றால் நம் கனவுகளும் முடங்கும்!
உறவுகள் நம்மை மதிக்க உழைப்பு மிக வேண்டும்,
நம் தேவையை நாம் முடிக்க நாணயம் தான் வேண்டும்!

காசுக்கும் குணத்துக்கும் எப்போதும் போர்தான்,
இருந்தாலும் வாழ வழி காட்டுவது காசுதான்!
ஆதிக்கத்தை எதிர்த்தாலும் அதன் தேவை குறையாது,
பணத்தின் பலமில்லாமல் ஒரு அடியும் நகர முடியாது!

ஆனாலும்...
காசுக்கு அடிமையாகி கரம் கட்டி நிற்காதே,
சங்கிலிப் பூட்டுகளுக்குள் உன் ஆன்மாவை விற்காதே!
பணம் என்பது வெறும் வாழ்க்கைக்கான துடுப்புத்தான்,
ஆனால் அன்பு ஒன்று  தான் நம்மை வாழ வைக்கும் அச்சாணி!!

விலைமதிப்பில்லா குணமே என்றும் வெல்லும்,
காசின் ஆதிக்கத்தை மனிதநேயம் வென்றே தீரும்!