ஏழை -பணக்காரன்
பாகுபாட்டை ஒழிப்போம் !
ஏழையாக பிறந்தது என் குற்றமா?
ஏழை என்னை கருவில் சுமந்தது அன்னையின் குற்றமா?
ஏழை,பணக்காரன் என்று பாகுபாடு வைத்த பொருளாதாரத்தின் மீது குற்றமா?
வளங்கள் சரிவர பகிரப்படாதது
நாட்டின் குற்றமா?
பூவுலகில் ஒரு மனிதஉறவாக!
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து
கொண்டிருக்கும் நிலையில்...
எங்கள் வாழ்வில் இடி விழுந்தது!
அப்பா அம்மாவுக்கு இடையில் பிரிவினை!
நான் அம்மாவுடன் வளர
வேண்டிய நிர்ப்பந்தம்!
அம்மா, நான், இரு தங்கைகள்
சாப்பிட கூட வழி இன்றி தள்ளாடி
தளர்ந்து நின்ற காலம் அது!
பசி யாரைத்தான் விட்டு வைத்தது?
பசி எடுக்கவில்லை என்று மருத்துவரிடம் மாத்திரை கேட்கும் பணக்கார கும்பல்!
பசி என்ற ஒன்று இந்த உலகில்
இல்லாமல் இருந்திருக்கலாமே என்று
பட்டினியில் வாடும் ஏழை குடும்பங்கள்!
அம்மா தான் கூலி வேலை செய்து மூவரையும் காப்பாற்றி வருகின்ற நிலை!
கூட இருந்த உறவு எல்லாம் விலகிச் சென்றன பணம் இல்லாமல் போனதும்!
எங்கள் மூவரையும் கற்பித்து
அரசாங்க வேலை பண்ண வைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கள் அம்மா மனதில்!
தொடர்ந்து வேலை செய்வதற்கு
அம்மாவின் உடல் ஈடு கொடுக்கவில்லை!
அம்மாவையும் என் சகோதரிகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற மன தைரியம்!
கல்லூரி செல்வதற்கு முன்பும் ,
கல்லூரி முடிந்த பின்பும் வேலைக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டு
கவனம் செலுத்தினேன் என் படிப்பின் மீதும்!
மெலிந்த தோற்றமும் ,உள்குழிந்த கன்னங்களும் ,கறைபடிந்த என்னுடைய உடையும் ,கருமையான என் நிறமும்
கிழிந்த என் புத்தகப்பை தோளில் தொங்க
ஒரு வாட்டி கண்ணாடி பார்த்துட்டு
போகலாம் என்று பார்க்கும்போது
கண்ணாடி போல் ஒரு நிமிடத்தில்
நொறுங்கி நிற்கும் என் மனசு!
என் தோற்றம் கண்டு எனக்கென்று
யாரும் இல்லை நண்பர்கள்!
இதுவும் கடந்து போகும் என்று
என் மனதில் பல எண்ணங்கள்!
சூரிய வெளிச்சத்தில் பகலிலும்
நிலா ஒளியில் இரவிலும்
விடாது கல்வி கற்று, பரீட்சையில்
முதலிடம் பெற்று , இலவச
புலமைப் பரிசில் எனக்கு கிடைத்தது
இனிதே முடித்தேன் என் பட்டப்படிப்பை !
சிறந்த மருத்துவர் ஆனேன் நம்ம ஊரிலேயே!
வேலை செல்வதற்கு தயாராகி
இன்னொரு முறை கண்ணாடி பார்க்கலாம் என்று பார்த்தபோது என் உருவம்
மாறினது மட்டுமல்லாமல் என் முகத்தில்
ஒரு ஆனந்த புன்னகை 😊
அம்மாவின் முகத்தில் புன் சிரிப்பு
சகோதரிகள் கல்வியில் சிறந்த முன்னேற்றம்
அழகான அடுக்கு மாடி வீடு
குடும்பமாக பயணிப்பதற்கு அழகான கார்
அம்மாக்கு உதவியாக ஒரு வேலையாள்
நாங்கள் எந்த வாழ்க்கைக்காக ஏங்கினோமோ அந்த வாழ்க்கை!
ஏழையாகப் பிறந்தவன்
ஏழையாகத்தான் வாழனும்னு இல்லை ஏழையாகத்தான் சாகணும்னு இல்லை
கல்வியும் ,கடின உழைப்பும்
ஏழையைக்கூட பணக்காரனாக்கும்!
வந்த வழி மறக்க கூடாது !
பசி என்று வந்தவனுக்கு
பகிர்ந்து உண்போம்!
உணவை வீண்விரயம்
செய்யாதிருப்போம் !
ஏழை -பணக்காரன் என்ற
பாகுபாட்டை ஒழிப்போம் !