Author Topic: அழியாத நினைவுகள் !  (Read 1033 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1297
  • Total likes: 4514
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அழியாத நினைவுகள் !
« on: May 16, 2026, 07:47:55 PM »
உறவு என்பது
மழை பெய்யும் இரவில்
நினைவின் வாசலில் நின்று
யாரோ ஒருவர் மெதுவாக கதவைத் தட்டுவது
போல
எப்போதாகினும் வரும்

அருகாமை என்பது
எப்போதும் உடன் இருப்பதல்ல
சிலர், ஆயிரம் மைல் தூரத்தில் இருந்தும்
நம் சுவாசத்தின் இடைவெளியில் வாழ்வது

நான் ஒருமுறை
ஒரு உறவை நதியாக நினைத்தேன்.
அதன் கரையில் நின்று
நீரின் மொழியை கற்றுக்கொண்டேன்.
அது ஓடியது
என் கைகளில் தங்காமல்,
என் இதயத்தை மட்டும் நனைத்து

நீ வந்த நாட்களில்
காலையிலான சூரியன் கூட
மென்மையாக உதித்தது.
தேநீரின் நீராவியிலும்
உன் பெயர் தோன்றியது
நான் தனிமையை மறந்திருந்தேன்.

சில மனிதர்கள்
வாழ்க்கைக்குள் வருவது
வசந்தம் வருவது போல.
அவர்கள் வந்த பிறகு தான்
காற்றிலும் ஒரு இசை இருக்கிறது என்று தெரியும்.

அவர்கள் அதிகம் பேச மாட்டார்கள்;
ஆனால் அவர்கள் அருகில் இருந்தால்
மனசு சத்தமில்லாமல் அமைதியாகி விடும்.
ஒரு பழைய வீட்டின் மாடிப்படியில்
மாலை நேரம் அமர்ந்திருப்பது போல.

மனிதன் ஒருவரை நேசிக்கத் தொடங்கும்போது
அவன் உலகத்தின் எடையை
சில நொடிகள் மறந்துவிடுகிறான்.

ஆனால்
விலகுதல் என்பது
அது ஒரு சண்டையாய் வராது எப்போதும்.
மெல்ல மெல்ல
அழைப்புகளின் நீளம் குறையும்.
“சாப்பிட்டாயா?” என்பதிலிருந்து
“busy தான் ல …” வரை
அமைதியாய் ஒரு பாலம் உடைவது போல

முன்பு
ஒரு சொல்லுக்காக முழு இரவும் விழித்த கண்கள்,
பிறகு
முழு இரவும் அமைதியாய் கடந்து செல்ல தவிக்கும்

விலகுதல் என்பது
கை விடுவது அல்ல;
ஒருகாலத்தில் நம்முள் வாழ்ந்த ஒருவருக்காக
இதயத்தில் ஒரு அறையை
அமைதியாக திறந்துவைத்திருப்பது.

அவர்கள் நினைவுகளை
நம்முள் விதையாக விதைத்துவிடுவார்கள்.

பிறகு
ஆண்டுகள் கடந்து போகும்.
நகரங்கள் மாறும்.
முகங்கள் மாறும்.
நம்முடைய குரலும் கூட
அறியாத அளவுக்கு மாறிவிடும்.
ஆனால் சில நினைவுகள் மட்டும்
பழைய பாடல்போல
மனதின் ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

ஒரு தெருவை கடக்கும்போது
திடீரென்று யாரோ நினைவுக்கு வருவது,
ஒரு வாசனை
கடந்த காலத்தை கதவைத்திறப்பது,
ஒரு பாடல்
மறந்துவிட்ட முகங்களை மீண்டும் வரைவது
இதுதான் அவர்கள் விட்டுச் சென்ற மந்திரம்.

வாழ்க்கை முழுவதும்
நாம் மனிதர்களை இழக்கிறோம்,
மீண்டும் கண்டுபிடிக்கிறோம்,
சிலரை மறக்கிறோம்,
சிலர் மறந்துவிட முடியாத நல்ல நினைவுகளை
தந்துவிட்டு செல்கிறார்கள்

அவர்கள் எப்போதும்
நம்முடன் இருப்பதில்லை.
சிலர் பாதியிலேயே பிரிந்து செல்வார்கள்.
சிலர் காரணமின்றி தொலைந்து போவார்கள்.
சிலர் இன்னும் அருகிலேயே இருப்பார்கள்,
ஆனால் பழைய நாட்களைப் போல அல்லாமல்.

ஆனால்
அவர்கள் இல்லாததால்
அவர்கள் கொடுத்த அழகு அழிந்து போகாது.

ஏனென்றால்
நினைவுகள் என்பது
காலத்தால் கிழிக்க முடியாத கடிதங்கள்.

இறுதியில்
உறவுகள் எல்லாம்
ஒரு ரயில் நிலையத்தைப் போன்றவை
யாரோ வருகிறார்கள்,
யாரோ செல்கிறார்கள்,
சிலர் மட்டும்
நம்முள் நிரந்தரமாக தங்கிச் செல்கிறார்கள்.

அந்த ஒளி தருபவர்கள்
அவர்கள்தான்
நம்முடைய வாழ்வின்
மறக்க முடியாத அழகான நினைவுகள்


அழியாத நினைவுகளை தந்தவர்களுக்கு நன்றி


***JOKER***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 173
  • Total likes: 512
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
Re: அழியாத நினைவுகள் !
« Reply #1 on: July 05, 2026, 07:22:15 PM »
சில எழுத்துகள் படித்து முடிந்துவிடும்... சில எழுத்துகள் மனதில் வாழத் தொடங்கும். உங்கள் வரிகள் இரண்டாவது வகை. உறவுகளின் அழகையும், பிரிவின் வலியையும், நினைவுகளின் நிலைத்த தன்மையையும் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். மனதை நெகிழ வைத்த பதிவு. நன்றி joker.