Author Topic: நெஞ்சம் மறப்பதில்லை-003 (பள்ளிவிடுமுறையும் பாட்டி வீடும்)  (Read 270 times)

Offline Forum

நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-003

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

“பள்ளிவிடுமுறையும் பாட்டி வீடும்”

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠 participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.

Offline MaiVizhi


ஸ்கூல் டூர், சொந்தக்காரங்க வீடு, ஃப்ரெண்ட்ஸ் வீடுனு எங்கயும் விடாத எங்க ஸ்ட்ரிக்ட் அப்பாவ பத்தி முன்னாடியே தெரிஞ்சதாலயோ என்னமோ, கடவுள் பாவம் பாத்து எங்க அம்மாவை ஊட்டிலே பொறக்க வெச்சாங்க. அதனால வருஷத்துக்கு ஒரு முறை சம்மர் லீவ்ல அம்மம்மா வீட்டுக்கு போறதுதான் எங்க மிகப்பெரிய சந்தோஷமா இருந்துச்சு.
அம்மா வீட்டுக்கு போறத நெனச்சாலே மனசுக்குள்ள ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கும்.
எப்போடா ஊட்டி போற டேட் வரும்னு நானும் அக்காவும் ஏக்கமா அம்மாவ தொல்லை பண்ணிட்டே இருப்போம்.

 காலையில அலாரம் அடிக்குறப்போ டெய்லி அம்மா கத்துனாலும் எந்திரிக்காத நாங்க, மொத ஆளா எந்திரிச்சு நிப்போம்.
எப்போவும் வேட்டியில சுத்துற அப்பா ஊட்டி போறப்போ மட்டும் பேண்ட் ஷர்ட் போட்டு செம்மையா இருப்பாரு ஹீரோ மாதிரி. அப்புறம் டக் டக்னு கிளம்பி குளிருல பஸ்க்கு வெயிட் பண்ணுவோம். இனி மைண்ட் ஃபுல்லா எப்போடா ஊட்டி போய் சேருவோம்னு இருக்கும்.  பாலக்காட்டுல இருந்து எடுத்த பஸ் கோயம்புத்தூர் ரீச் ஆகுறப்பவே தான் பொறந்த ஊரு காத்தடிச்ச சந்தோஷமும் எங்க அம்மா முகத்துல பாப்பேன்.

மேட்டுப்பாளையம் கடந்து நீலகிரி ஃபர்ஸ்ட் பெண்ட்ல இருந்தே நல்லா வேடிக்கை பாக்க ஸ்டார்ட் பண்ணுவேன். சைடுல மலையில இருந்து பஸ் விழுந்தா என்ன ஆகும்னு பயந்து பயந்து  வேடிக்கை பாப்பேன்.
வாட்டர் ஃபால்ஸ், ஃபாரஸ்ட், குரங்குனு சூப்பரா இருக்கும். ஹேர்பின் பெண்ட்ஸ்ல மட்டும் கண்ண மூடி கடவுள வேண்டிக்கிவேன். கைல எடுத்துட்டு போன ஸ்நாக்ஸ் பாதி சாப்பிட்டு பாதி கைல வெச்சு குரங்குக்கு போடுவேன்.  பார்லியார் வந்தாலே ஒரு சந்தோஷம்தான். போற வரைக்கும் எங்கயும் பஸ் நிக்காது, "என்ன வேணுமோ வாங்கிக்கோங்க"னு அப்பா குரல் கேட்டதும் போதும் நானும் அக்காவும் போட்டி போட்டு வாங்குவோம். அப்பா சூடா போண்டா, டீ வாங்கி தருவாரு.

அதுக்கு மேல நல்ல தூக்கம் போட்டு, அப்புறம் வரும் பாருங்க ஒரு சில்லு காத்து, பிரிட்ஜ் டோர் ஓபன் பண்ண மாதிரி! . குன்னூர் கிட்ட போறப்போ "எஸ்! ஊட்டிக்கு இன்னும் கொஞ்ச நேரத்துலனு துள்ளி குதிப்போம். ஹில்ஸ்னால ரொம்ப ஸ்லோவா ஓல்ட் இளையராஜா சாங்ஸ் போட்டு போகும். ஐயோ அந்த ஃபீல்!

வீடு வந்ததும் ஓடி போய் அம்மம்மா, அச்சச்சாவ பாத்து அவங்க ஹோட்டல்ல ஸ்பெஷலான ஒரு வெஜ் பப்ஸ் சூடா சாப்பிட்டாதான் நிம்மதியாவே இருக்கும்.போன உடனே சுட சுட வெச்ச சாதம், எங்க தோட்டத்துல விளைஞ்ச கேரட் போட்டு வெச்ச பருப்பு, கிழங்கு காய வெச்சு வறுத்த வத்தல்னு அந்த டேஸ்ட் எப்போவும் எச்சில் ஊறும். எங்க வருகைக்கு காத்திருக்குற எங்க பிரண்ட்ஸ்க்கு  குடுக்க கிண்ணத்துல பாட்டி போட்டு தர சிப்ஸ்ஸோட ஓடுவோம். சுத்தி உள்ள எஸ்டேட், தைல ஷெட், ஷூட்டிங் ஸ்பாட், ரோஸ் கார்டன்னு நாங்க பிரண்ட்ஸோட அலைஞ்சு திரியாத காடே இல்ல. நாள் போறதும் தெரியாது.

சந்தோஷத்தோட கடைசி நாட்கள். நாளைக்கு ஃபர்ஸ்ட் பஸ் பாலக்காட்டுக்கு. கண்ணுல கண்ணீர், கோவம், "நான் வரல"னு கத்தி பாட்டிய கட்டி புடிச்சு அழுதத நெனைக்குறப்போ அந்த காலத்துக்கு போயிடுவேன். அதே தூக்கம் இல்லாத ராத்திரி. விடியாம இருக்காதா? வயிறு வலின்னு சொல்லலாமா? பஸ் கேன்சல் ஆகாதா? அப்பா மனசு மாறி ஒரு நாள் கூட கிடக்காதானு நைட் ஃபுல்லா அழுதுட்டே போகும். பாட்டி "நல்லா படிக்கணும், நாங்க வரோம் ஊருக்கு, நெக்ஸ்ட் லீவ்க்கே தாத்தாவ அனுப்பி கூப்ட்டு வரேன்"னு எல்லாம் ஆறுதல் சொன்னாலும் கண்ணீர் நிக்காது. "பஸ்ல ஏதும் வாங்கி சாப்டுக்கோ"னு தாத்தா குடுக்குற 50 ரூபா, அதுக்கு மூல்யம் (மதிப்பு) அதிகம். போறப்போ ரசிச்ச எல்லா விஷயமும் பாக்காமலேயே தான் ரிட்டன் வருவேன்.

அடுத்த வருஷம் லீவ்க்கு போலாமேனு மனச தேத்தி ஸ்கூல் போக ரெடி ஆவேன். இன்னைக்கு எல்லாம் மாறி போச்சு. நான் நெனைச்சா தனியா இன்னைக்கு 3 ஹவர்ஸ்ல ஊட்டிக்கு போலாம், இருந்தும் போக தோணாதப்போ தான் புரிஞ்சது... நான் ஏங்குனது ஒரு பயணமோ சுற்றுலாவோ அல்ல, என் அம்மம்மா அச்சச்சாவோட அளவில்லா பாசத்துக்குனு. அதனாலதான் அவங்க இல்லாத அந்த வீட்டுக்கு போக என் மனம் விரும்பவில்லை.


« Last Edit: February 20, 2026, 12:28:22 AM by MaiVizhi »

Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 837
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
அப்பம்மா வீடு

கிழக்கு இலங்கையின் கரையோர பகுதியில் எங்க அப்பம்மா வீடு. விருந்தோம்பலுக்கு பெயர் போன மீன் பாடும் பூமி அது. அட metaphor ஆஹ் சொல்லலைங்க, நிஜமாவே அந்த கடற்கரை ஓரமா பௌர்ணமில போனோம்னா கடலலைகளோட மீன்கள் எழுப்புற சத்தம் பாடுற மாதிரி இனிமையா தான் இருக்கும்.

கடலுக்கும் எங்க வீட்டுக்கும் 100m தான் தூரம். ஆகஸ்ட் விடுமுறையில பெரியப்பா family சித்தப்பா family நாங்கன்னு எல்லாமே அங்க ஆஜர் ஆகிடணும்கிறது மீற முடியாத எங்க அப்பம்மாவோட அன்பு கட்டளை. சுருள் முடியும் கன்னக்குழியும் முகத்துல எபவுமே தவழும் ஒரு புன்னகையும் தான் எங்க அப்பம்மாவா நினச்சா உடனே mind கு வார எங்க அப்பாம்மாவோட விம்பம்.
சமையல் மட்டும் ,தான்  மட்டும் தான் பண்ணுவன்றது,எங்க அப்பம்மா சமரசமே பண்ண முடியாம அடம் பிடிக்கும் விஷயம்.இருக்கிற அவ்வளவு நாளும் ஒவ்வொரு வேளை சாப்பாட்டுலயும் மருமகள், மகன் மற்றும் பேரப்பிள்ளைங்க favourite dish அவங்க கையாலேயே பார்த்து பார்த்து செஞ்சு வச்சிடுவாங்க.செல்லம், குட்டி, தங்கம் அப்படின்ற வார்த்தைகளைத் தவிர பெயர் கூட சொல்லி கூப்பிட மாட்டாங்க எங்க அப்பம்மா. வீணை முதல் ஆங்கில இலக்கியம் வரை கற்றுத் தேர்ந்த ஆழ்ந்த அறிவும் அன்பும் கொண்ட பெண்மணி.

அம்மா, பெரியம்மா, சித்தி எல்லாம் இருந்து கதை பேசி கொண்டே ,அப்பம்மா சமையலுக்கு காய்கறிகள் வெட்டி கொடுப்பாங்க .

அப்பா, பெரியப்பா, சித்தப்பா இருந்து பூகோள அரசியல்ல இருந்து, cricket ஆன்மீகம் வரைக்கும் அலசி ஆராய்வாங்க.

நம்ம cousin gang ,வெளிநாட்ல இருந்து சித்தப்பா கொண்டு வந்த சின்ன வீடியோ  camera வச்சு அப்பவே short film எடுப்பம் . Battery போடுற guitar toy எங்க BGM source.பனங்கா  பணியாரத்துல இருந்து nestamalt வரைக்கும் advertisement  கூட நாங்க அப்பவே shoot பண்ணிருக்கோம். அதை மணல்ல பாய் விரிச்சு வெற்று சுவர்ல மல்டிமீடியா ப்ரொஜெக்டர்ல ப்ரொஜெக்ட் பண்ணி எல்லோருக்கும் இரவு telecast பன்றது எங்க பெருமிதம்னான பால்ய கால oscar moment .

வருஷத்துக்கு ஒரு தடவ வார மாமங்க திருவிழால விக்கிற மண்ணுல செய்ற சின்ன சட்டி முட்டி அடுப்பு விளையாட்டு பொருளை வைகோல் போட்டு உடையாம pack panni எனக்கு பரிசா தருவாங்க. முதல் பேர பிள்ளை என்றதால எனக்கு கிடைக்கும் சிறப்பு சலுகை அது

அப்பம்மா வீட்டை சுத்தி நிறைய முந்திரி மரம் இருக்கும். இரவின் அமைதியில ஓயாம கேட்கும் கடல் அலை சத்தம் பின்னணியில ,எங்க அப்பம்மா விறகடுப்பு மூட்டி சுடுமணல்ல முந்திரி வறுத்து உடைச்சு தர்ற முந்திரிக்கு எங்க ஸ்கூல்ல அவ்வளவு டிமாண்ட் இருக்கும்.

taunami பேரலையில் எங்க வீடும் முந்திரி தோட்டமும் அழிஞ்சு போயிருந்தாலும் , எங்க வீட்டு கட்டிடத்தின் எச்சங்களும் அந்த வெண்ணிற மணலும்  , கடலலை சத்தமும் இன்னும் எங்க பள்ளி கால விடுமுறை நாட்களின் வாழ்வியலின் அடையாளமாய் இன்னைக்கும் நிலைச்சு நிக்குது.ஏன்னா சில கட்டிடங்கள் கற்களால கட்டப்பட்டதில்லை. நினைவுகளால கட்டப்பட்டது.
« Last Edit: February 19, 2026, 10:54:50 PM by Madhurangi »

Offline Luminous

பள்ளி விடுமுறை என்றாலே என் மனசு நேராக போகும் இடம்  பாட்டி வீடு.
அது ஒரு வீடு இல்லை… ஒரு தனி உலகம்.
விடுமுறை ஆரம்பமான உடனே பள்ளிப் பையை மறந்துவிட்டு பாட்டி வீட்டுக்குப் போய்விடுவேன். அங்கே வாழ்க்கை வேறு நிலை.
தாமதமாகத் தூங்கலாம்… தாமதமாக எழுந்துக்கொள்ளலாம்…
படி, இதைச் செய்யாதே, அப்படி செய்யாதே, என்ற கண்டிப்பு அதிகம் இருக்காது.
அந்த சுதந்திரமே அந்த நாட்களின் பெரிய சந்தோஷம்.
அங்கே எனக்கு நிறைய நண்பர்கள். காலையிலேயே கூட்டமாக விளையாடுவோம். சில நாட்களில் மீன் பிடிக்கச் சென்று மகிழ்ச்சியாக இருப்போம்.
ஆனால் அந்த மகிழ்ச்சிக்காக ஒருநாள் நல்ல அடி கூட வாங்கியிருக்கிறேன்😒
இப்போது நினைத்தாலே சிரிப்பு வருகிறது.
என் பாட்டி கையால் செய்யும் பால் கடும்பு… அது ஒரு இனிப்பு மட்டும் அல்ல அன்பின் வடிவம்.
அதை எனக்காகக் கொடுத்தால், நான் என்ன செய்வேன் தெரியுமா?
வெளியில் விளையாடும் நண்பர்களுக்கெல்லாம் பகிர்ந்து கொடுத்துவிடுவேன்.
அவர்கள் சாப்பிட்டு இன்னும் எடுத்து வா, என்றால், எனக்குத்தான் வேண்டும் என்று சொல்லி மீண்டும் மீண்டும் வாங்கிக்கொண்டு வந்து அவர்களுக்கே கொடுத்து விடுவேன்.
ஒருநாள் அப்படியே “இன்னும் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தேன், திடீரென்று திரும்பிப் பார்த்தால் 🙄 பாட்டி பின்னால் நின்றுக்கொண்டிருக்கிறார்கள்.
எதற்குத்தான் இன்னும் வேண்டும் என்று கேட்டாய்? என்று கேட்டதும்… நல்ல கண்டிப்பு
அந்த நாளிலிருந்து இன்றுவரை பால் கடும்பு என்றாலே எனக்கு பயத்தோடு சேர்ந்த ஒரு நினைவு.
இன்னொரு சம்பவம்  நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது.
பாட்டி வீட்டு பக்கத்தில் இருந்த ஒரு பையன் தேர்வு முடிந்ததற்குப் பிறகு சட்டையில் மை தடவி விளையாடிக்கொண்டிருந்தான்.
நான் வெறும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
திடீரென்று அவன் சட்டையில் இருந்த பேனாவை எடுத்து அதிலிருந்த மையை அவன் முதுகில் ஊற்றிவிட்டேன்🙃
அவன் என்னைத் துரத்தினான். நான் ஓடிவந்து பாட்டி வீட்டில் ஒளிந்துக்கொண்டேன்.
அவன் வந்து அவள் எங்கே? என்று பாட்டியிடம் கேட்டான்.
என் பாட்டி காரணமே கேட்காமல் அதோ அலமாரி பின்னால் என்று சொல்லிவிட்டு அமைதியாகப் போய்விட்டார்கள்😑
அவன் என் ஜடையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டான்🤨
அந்த நேரத்தில் அவன் அம்மா வந்தார்கள்.
நான் உடனே அழுது, 🤕மாமி, இவன் அடிக்கிறான் என்று சொல்லி மாட்டிவிட்டேன்.
அவனுக்கு அங்கேயே நல்ல அடி.
என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டே, அடிவாங்கிக் கொண்டு போனான். 😂
இப்போது அந்த எல்லா சம்பவங்களையும் நினைத்தாலே சிரிப்பு வருகிறது.
அதுதான் பாட்டி வீடு.
தவறு செய்தாலும் சின்னச் சின்ன சண்டைதான்… ஆனால் அன்பு மட்டும் மிகப் பெரியது.
விடுமுறை முடிந்து திரும்ப வர வேண்டிய நாள் மிகவும் கடினம்.
சிறிது கோபம்… சிறிது சோகம்… சில நேரங்களில் கண்ணீரும் கூட.
ஆனால் அந்த சிரிப்பு, அந்த சுதந்திரம், அந்த அன்பு , இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.
பாட்டி வீடு என்பது ஒரு இடம் அல்ல…
ஒரு உணர்வு.
என்றும் மறக்க முடியாத  நினைவுகள்.
எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நினைவுகள்           💜💛💙🧡🧚‍♀️😍🍭 ஒளிமிகு LUMINOUS
« Last Edit: February 20, 2026, 12:10:03 AM by Luminous »

Offline Shreya

எப்போ பள்ளி கோடை விடுமுறை வரும், எப்போ ஆச்சி தாத்தாவ பார்க்க போவோம்னு மனசு ஏங்குன நாட்கள் அதிகம்.. தூக்கம் கூட வராது எப்போ மாலை நேரம் வரும்னு, எப்போ ரயிலில் போவோம்னு.. அந்த ரயில் பயணமே அவ்வளவு அழகா போகும், அந்த மண் வாசனையே தனி.. ஜாலி ஆயிடுவோம், நான் அக்கா அண்ணா எல்லோரும்..

இதுல இன்னுமொரு சந்தோஷம் என்னன்னா அப்பா, அம்மா ஊருக்கு 1 கி.மீ தான் தூரம்.. அதனால 2 இடத்துக்கும் போயிட்டு வந்துடலாம்.. ஆனால் அப்பா ஊர் தான் ரொம்ப பிடிக்கும், ஏன்னா முத்தாச்சியோட அன்பு அப்படி.. தோழிகளும் அங்க தான் அதிகம்..

பெரிய இடம் விளையாட.. போன உடனே ஆச்சி ஊஞ்சல், மரத்துல கட்டி கொடுத்திடுவாங்க அதுல அவ்வளவு உயரமா ஆடுற சுகமே தனி.. வீடு பின்னாடியே தோட்டம், இளநீர் குடிக்க ஸ்டிரா (straw) எல்லாம் கிடையாது.. பப்பாளி மரத்தோட ஸ்டிரா தான்.. பெரிய தொட்டி, 2 முறை குளியல் அதுவும் 2 மணி நேரம் ஆட்டம் போடுவோம்..

​அந்த தேரிக்காடு செம்மணல், ஆச்சி கை பிடிச்சு போகும் அந்த நினைவுகள், கொல்லம்பழம் சுவைய அடிச்சுக்க முடியாது.. வீட்டுக்கு அருகாமையிலேயே சுடலைமாடன் கோவில், திருவிழா வந்துட்டா போதும் ஊரே களைகட்டும்..

​இந்த பக்கம் அம்மா ஊருக்குப் போனா அம்மன் கோவில், சப்பரம், முளைப்பாரி-னு அங்கேயும் நல்லா இருக்கும்.. ஒரே நேரத்துல திருவிழா வரும், காப்பு கட்டிட்டா அங்க போகக் கூடாதுன்னு சொல்லுவாங்க, ஆனாலும் ஆச்சிகிட்ட கேட்டு அங்கேயும் போய் பார்த்திடுவோம்..

​முக்கியமா மாமா பசங்களுக்காகப் போவோம்.. மாலை நேரம் வந்துட்டா போதும், எல்லோருமே வெளிய தான் இருப்போம்.. கபடி ஆடிட்டு இல்ல பள்ளாங்குழி ஆடுவோம்.. இரவாச்சுன்னா தாத்தா கையால நிலாச் சோறு நிச்சயம்.. எப்பவும் அடுப்புல கருப்பட்டி காபி கண்டிப்பா இருக்கும்..

நாங்க ஊருக்கு போனாலே திரையில ஆச்சி கண்டிப்பா படம் போட சொல்லிடுவாங்க, அவங்க மடியில படுத்து படம் பாக்குற சுகம் எதுலயும் இல்ல.. கட்டி பிடிச்சு அவங்க கொடுக்கிற முத்தம் இப்போ நினைச்சாலும் உடம்பு சிலிர்க்குது.. அவங்க காதுல போட்டிருக்க தங்கட்டி எனக்கு தான் வேணும்னு எப்பவும் செல்லமா சண்டை போடுவேன்..

தாத்தாவ(அப்பா ஓட அப்பா) நான் பார்த்ததே இல்லை.. மொத்த அன்பையும் ஆச்சி கொடுத்திருக்காங்க.. அவங்க கையால சமைக்கிற அந்த பருப்பு கூட்டு அவ்வளவு மணம், தொட்டுக்க அப்பளம் போதும்.. வட்டில் நிறைய சாதம் போட்டு அவங்க ஊட்டுற அன்புக்கு ஈடு இணையேது..

மதியம் ஆனா தோட்டத்துக்கு போயிடுவோம்.. அங்க பதநீர் வச்சிருப்பாங்க, நல்ல மாம்பழம் நிறைய போட்ட பதநீர் அமிர்தம்.. அந்த பக்கம், கிடங்கில கருப்பட்டி காய்ச்சிட்டு இருப்பாங்க.. பனை ஓலைய கிழிச்சு கிடங்குல இருந்து ஓரமா எடுத்து தர கூப்பணியும் அம்புட்டு ருசியா இருக்கும்..
​இரவானாலே ஆச்சி கதை சொல்லாம தூங்கின நாட்களே இல்லை..

ஊருக்கு போகும் போது எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ அங்க இருந்து கிளம்பும் போது அவ்வளவு சோகமும் திரும்ப எப்போ வருவோம் என்ற ஏக்கமும் இப்படியே இங்கேயே இருக்கலாமே என்று அப்பாவிடமும் போட்ட சண்டைகள் பல.. எத்தனை வருடங்கள் ஆனாலும் ஆச்சியின் நினைவுகள் நெஞ்சில் நீங்காத நினைவுகளாய்!!!
« Last Edit: February 20, 2026, 02:11:49 AM by Shreya »

Offline Thenmozhi

  • Jr. Member
  • *
  • Posts: 91
  • Total likes: 647
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
  விடுமுறை என்றாலே என்றாலே ஞாபகத்துக்கு வருவது பாட்டி வீடு.எங்களுக்கு பள்ளி பெரிய விடுமுறை வருவது ஆகஸ்ட் மாதம்.ஒவ்வொரு வருடமும் விடுமுறைக்கு இலங்கையில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்வோம்.எங்களை வரவேற்க பாட்டி ,தாத்தா விமான நிலையத்தில் ஆவலோடு காத்திருப்பார்கள்...எங்களை ஆரத்தழுவி முத்தமடுவதில்  என் மனம் காற்றில் பறக்கின்ற சந்தோசம்..
   விமான நிலையத்திலிருந்து பாட்டி வீட்டை சென்றடையும் வரை ,பாட்டி தாத்தாவுடன் பலகதை பேசிட்டு வருவேன்.போகும் வழியில் பல்வேறு உணவுகள் வாங்கி கொடுத்துண்டு மகிழ்வோம்.பாட்டி வீட்டை சென்றடைந்ததும் முதலில் உங்களை வரவேற்பது நாய்க்குட்டி வீமா தான்.எங்கள் வருகையை கண்டு மகிழ பாட்டி வீடு பூராகவும் மாமா, அத்தை, பெரியம்மா பெரியப்பா என உறவுகள் கூடி இருப்பார்கள்.
அவர்களைப் பார்க்கும்போது இனம் புரியாத மகிழ்ச்சி என் மனதில்...எல்லோரும் பேசிட்டு இருக்கும்போது பாட்டி சொல்லுவார் "நான் இல்லாத நேரத்திலும் இப்படி சந்தோசமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் எல்லோரும் "என்று.....
   மறுநாள் காலை சுடச்சுட பால் அப்பத்தில் ஆரம்பிக்கும் பாட்டியின் கைப்பக்குவம். அந்தப் பால் அப்பத்தின் சுவை இன்னும் என்னாக்கினை விட்டு அகலவில்லை.தாத்தா கடற்கரையில் சென்று மீன், நண்டு ,கணவாய் வாங்கிட்டு வருவாங்க.அதனை பாட்டி பக்குவமாய் ஒடியல் கூழாகி ,எல்லா உறவுகளும் சூழ்ந்து இருந்து ,குடித்து மகிழ்வோம்..அப்போது பாட்டியின் குரல் ஓங்கி ஒலிக்கும்" மீன் முள் வரும் பத்திரமா சாப்பிடுங்க" என்று...
  பாட்டி வகைவகையாய் வாய்க்கு வக்கனையாய்  சமைத்து தருவாங்க.பாட்டி சமையல் மண் சட்டி, பானையில் பண்ணுறது தான் தனிச்சுவை.அரிசிமா புட்டு,மீன் பொரியல் ,இடியப்பம்,சம்பல் ,சொதி நண்டு குழம்பு,இட்லி ,தோசை ,வடை என்று பாட்டியின் கைப்பக்குவத்தை யாராலும் அசைக்க முடியாது...பாட்டி தான் எனக்கு சமையல் கற்றுக்  கொடுத்தாங்க...
  பாட்டியின் வீட்டைச் சூழ பல வகையான பழமரங்கள்.வீட்டு முற்றத்தில் இருந்தால் இயற்கையான காற்று...மாம்பழம் வாழைப்பழம், பலாப்பழம் ,கொய்யாப்பழம்,இளநீர் என இயற்கையான பழங்களை பாட்டியும், தாத்தாவும் எங்களுக்கு தருவார்கள்.அந்தப் பழங்களின் சுவை இன்னும் என் நாக்கில் இன்னும் சுவையூகிறது.
   பாட்டி ,தாத்தா கூட தூங்கும் போது பல்வேறு புராணக் கதைகள் ,நீதிக் கதைகள் கூறுவார்கள்.அவர்களின் கதையை கேட்டு அப்படியே நான் தூங்குவேன்.தாத்தா கூத்து பாடல்கள் எனக்கு சொல்லிக் கொடுப்பார்.நான் அந்தப் பாடல்களைப் பாடும் போது "என் பேர்த்தி கெட்டிக்காரி" என்று தாத்தா கூறுவார்.தாத்தா பாடல்கள் தான் இசைமேல் ஆர்வத்தை எனக்கு தூண்டியது.
   பாட்டி பக்கத்தில் இருக்கிற கோவிலுக்கு என்னைக் கூட்டிட்டு போவாங்க.அங்கே பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது.அந்த ஆலமர விழுதுல ஊஞ்சலாடுவோம்.
பாட்டி வீட்டுக்கு வரும் உறவினர்களுடன் கிளித்தட்டு,கபடி என்று விளையாடி மகிழ்வோம்.அங்கே சாளரங்கள் திறந்து வைத்து தூங்குவதால் ,காற்றோட்டம் இதமாக வந்து நிம்மதியான தூக்கத்தை தரும்.
  பாட்டி வீட்டில் ஆடு, மாடு ,கோழி என வளர்த்து வந்தார்.இவற்றிற்கு உணவு கொடுத்து,விளையாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதிகாலையில் எழும்பும்போது சூரிய உதயம்,சேவல் கூவுதல்,காகம் கரைதல்,பட்சிகளின் ரீங்காரம்,கோவில் மணியோசை எல்லா ஒலிகளும் மனதுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
  பாட்டி, தாத்தா உறவுகளுடன் ஊரைச் சுற்றி பார்ப்போம்.என்ன ஊரைச் சுற்றிப் பார்த்தாலும் பாட்டி வீட்டில் இருக்கிற சந்தோசம் போல் வராது.பாட்டி ,தாத்தாவின் பாசம் எல்லையற்றது.பாட்டியின் கைப்பக்குவம் தனித்துவமானது.பள்ளி விடுமுறையை பாட்டி வீட்டில் சந்தோஷமாக கழித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்....
   இப்போ விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு செல்கின்றேன்.ஆனால் அங்கே வரவேகற்க அன்பான பாட்டி ,தாத்தா உயிருடன் இல்லை.அவர்களின் உயிரோட்டமான வீட்டில் எங்கள் பொழுதைக் கழித்துவிட்டு திரும்புகின்றோம். அவர்களின் ஆசீர்வாதம் எப்போதும் எங்க கூட இருக்கும்.தாத்தா ,பாட்டி உங்களை மிஸ் பண்றேன்.....
« Last Edit: February 20, 2026, 04:26:48 AM by Thenmozhi »

Offline Sadham

  • Newbie
  • *
  • Posts: 16
  • Total likes: 51
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


விடுமுறையில்பாட்டி வீடு செல்வது அளவில்லாத சந்தோஷம் தரும். பாட்டியின் அன்பு ,அரவணைப்பும் மறக்க முடியாா நாட்கள் தான் .பேரன் தனது வீட்டிற்கு  வந்த சந்தோஷம் .  எனக்குத் தேவையான உணவு செய்வதில் பாட்டிக்கு ஆர்வம். கேட்ட பொருள் வாங்கி தரும் தாத்தா பாட்டி.
   அப்போ கோழி எனக்கு ரொம்ப பிடிக்கும் .அதை உடனே பாட்டி சமையல் செய்து ஊட்டி விட்ட நியாபகம் இன்னும் மறக்க முடியாத நினைவுகள் .தாத்தா  பாட்டி பேரனை வெளியா கூப்பிட்டு போலாம் சொன்னா உடனே சரி நாளைக்கு போலாம் என்று சொன்னவுடனே எண்ணற்ற  மகிழ்ச்சி. எனக்கு அவ்ளோ ஆனந்தம் ஆ  இருக்கும்.     
   சிறு வயதில் தியேட்டர் கூட்டி போவாங்க. குடும்ப கதை படம் ஒரு இருக்கு படம் பார்த்து மகிழ்ந்த தருணங்கள் .எனக்கு தேவை ஆன ட்ரெஸ் அது first choice ஆ இருக்கும் .உனக்கு என்ன டிரஸ் வேணுமோ எடுத்துக்கோ  னு சொல்லும் தாத்தா பாட்டி.. மறக்க முடியாத நினைவுகள் .விடுமுறையில் சென்ற போது திருமண விழா. நான் தாத்தா ,பாட்டி கூட போறது .அவங்க இது என் மக புள்ள பையன்  சொல்றதும் பள்ளி விடுமுறையில் வந்துருக்கான் சொல்வாங்க .மற்ற சொந்தம் பந்தம் இடம் எப்படி பேசுவது என்பதை தாத்தா பாட்டி இடம் கற்று கொண்ட நினைவுகள்.
 இந்த உலகில் மதிப்பும் மரியாதையுடன் பேச காரணமாக இருந்தாங்க என் தாத்தா பாட்டி தான் .பணம் பெரிது பார்க்காமல்  அன்பு உள்ளங்களை மறக்க முடியாது. விடுமுறை முடிந்து பாட்டி வீட்டில் விட்டுச் செல்லும் மனதில் ஏதோ ஒரு மன கவைலை இருக்கும். இன்றும் சில நாட்கள்  தங்கணும் தோணும். தாத்தா பாட்டி கூட திரும்ப என்னை ஊருக்கு வர மாடேன் னு அப்பா அம்மா தான் கூப்பிடா வருவாங்க ... ஊருக்கு கிளம்பு முன் நல்லா இருந்து இருக்கு மாமா இருப்பார் .அவர்  கூட விளையாடாத நாட்கள் மறக்க முடியாது.  தாத்தா பாட்டி நற்குணங்கள் யாருக்கும் வராது .தாத்தா பாட்டியை விட்டுடு செல்கின்றோம் .இனி அடுத்த எப்போ  விடுமுறை வரும். எப்போடா பாட்டி வீட்டிற்கு வரும் னு மனசு ஏங்கும். இன்று தாத்தா பாட்டி இ‌ல்லை என்பது மனசு ரொம்ப கஸ்டம். என்றும் உங்கள் நினைவில் உங்கள் பேரன் பிரியமுடன் ரஹ்மத்துல்லா

Offline Oonjal

  • Newbie
  • *
  • Posts: 17
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் அம்மா சீக்கிரம் ரெடியாகி வா பஸ்க்கு நேரமாகுது என்று சொல்லவும் நானும் சந்தோசமாக ரெடியாகி வந்தேன். பஸ்சில் ஏறினாலே ஜன்னலோர சீட்டில் இருந்து வெளியே வேடிக்கை பார்ப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதுவும் பாட்டி வீட்டுக்கு போக போறேன் என்றால் நேரம் போவதே தெரியாமல் வேடிக்கை பார்ப்பேன்.   
  மரங்களுடன் காத்தாடியும் பின்னால் ஓடி போறதை பார்க்க கண் கொள்ளா காட்சியாய் இருக்கும்.அம்மா அடுத்து இறங்கனும் என்று சொல்லும் போது தான் அதற்குள் வந்து விட்டோமா என்று எண்ணி கொண்டு இறங்கினேன். அடுத்து டவுண் பஸ்சில் கொஞ்ச நேர பயணம். இதோ இறங்கி விட்டோம்.பஸ் stand ல் மாமா காத்திருந்தார் அவரை பார்த்தவுடன் மாமா..... என்று கத்தி கொண்டு ஓடினேன் என்னை தூக்கி அணைத்து முத்தமிட்டு கொஞ்சினார்.
   பாட்டியும் தாத்தாவும் உன்னை பார்க்க ஆசையாய் காத்திருக்காங்க வாங்க போகலாம் என்று எங்களை அழைத்து சென்றார்.சிறிது தூரம் நடந்ததும் பாட்டி வீடு கண்ணுக்கு தெரிய நான் ஓட்டம் எடுத்தேன்.பாட்டி தாத்தா என்று கத்தி கொண்டே ஓடி போய் கட்டி அணைத்தேன்.வாடி ராசாத்தி என்று என்னை கொஞ்சினர்.அம்மா முதல்ல சாப்பாடு குடுங்க என்று மாமா சொல்ல பாட்டி என்னையும் அம்மாவையும் சாப்பிட அழைத்து சென்றார். எல்லோரும் சேர்ந்து சாப்பிட பாட்டி எனக்கு ஊட்டி விட்டார்.வெகு நேரம் அம்மாவும் பாட்டியும் கதை பேச நான் மாமா கூட விளையாடி கொண்டிருந்தேன்.   
    நேரமாச்சி தூங்க போங்க காலையில் பேசலாம் என்று பாட்டி சொல்லவும் தூங்க போனோம்.பாட்டி காலையில் சாப்பிட எனக்கு பிடித்த புட்டு பயிறு அப்பளம் ஊட்டி விட்டார்.சாப்பிட்டதும் தாத்தா கூட தோட்டத்துக்கு போனேன்.அங்கே மா மரங்களில் மாங்காய் கொத்து கொத்தாக தொங்கி கொண்டிருந்தது. தாத்தாவிடம் எனக்கு மாங்காய் வேண்டுமென சொல்ல கிளிமூக்கு மாங்காய் பறித்து கழுவி என்னிடம் நீட்டினார் .நான் அப்படியே கடித்து சாப்பிட்டு கொண்டே நடந்தேன்.கொய்யா, சக்கைபழம் முந்திரிபழம் எல்லாம் காய்த்து தொங்கி கொண்டிருந்தது.தாத்தாவிடம் எனக்கு எல்லா பழங்களும் வேண்டும் என்று கேட்டேன்.உனக்கு இல்லாத பழமா என்று கைநிறைய கொய்யாப்பழம் பறித்து தந்தார்.பழுத்த சக்கைபழம் வீட்டில் இருக்கு பாட்டி வெட்டி தருவா என்று சொன்னார் .
   கை எட்டும் தூரத்தில் இருந்த தென்னை மரத்தில் இளநீர் வெட்டி கொடுத்தார் .வெயில் ஏறவும் வீட்டுக்கு திரும்பி வந்தோம்.பாட்டி மதிய சமையல் தயார் செய்து கொண்டிருந்தார். என்ன சமையல் என்று பாட்டியிடம் கேட்டேன்.நாட்டு கோழி அடிச்சி கறி வைக்கிறேன் என்று சொல்லும் போதே ஈரல் எனக்கு எனக்கு என்று குதித்தேன்.வாழை இலையில் சாப்பாடு பரிமாறி ஆசையாய் ஊட்டி விட்டார் பாட்டி.பாட்டி கைமணம் அவ்வளவு ருசியாக இருந்தது.
  சாயங்காலம் பாட்டி சக்கையை வெட்டி உரிச்சி தர தர தேனாக இனித்த சக்கையை ருசித்து சாப்பிட்டேன். அப்போது மாமா இளநீர் குலையும் நொங்கு குலையும் கொண்டு வந்தார்.எல்லாம் உனக்கு தான் நல்லா சாப்பிடு செல்லம் சொன்னார். எனக்கு பிடித்த அனைத்தும் பார்த்து பார்த்து சமைத்து கொடுத்தார் பாட்டி. தாத்தா கூட தோப்புக்கு போறதும் நல்லா சாப்பிடவும் என்று பள்ளி விடுமுறை முடியும் வரை சந்தோசமாய் சுற்றி திரிந்தேன்.விடுமுறை முடிந்து வீட்டுக்கு கிளம்பும் போது அடுத்த விடுமுறைக்கும் வரணும் ராசாத்தி என்று சொல்லி வழி அனுப்பி வைத்தனர் பாட்டி தாத்தா. எங்களை கொண்டு விட மாமா வந்தார்.எங்களோடு மா ,சக்கை ,கொய்யா நொங்கு எல்லாம் பயணமாகி எங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தது.விடுமுறை என்றாலே பாட்டி வீடும் அங்கே கிடைக்கும் கவனிப்பும் மறக்க முடியாத நினைவுகள்.
« Last Edit: February 20, 2026, 02:08:53 PM by Oonjal »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1266
  • Total likes: 4341
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அழகான தலைப்பு

பள்ளி விடுமுறையும் பாட்டி வீடும்

பள்ளியில் இறுதி  நாள் தேர்வு எழுதி வீட்டுக்கு வந்ததும் புத்தக பையை
இறக்கி வைக்கும்போது புத்தகப்பையின் சுமை மட்டும் அல்ல,
மனசின் சுமையும் இறங்கும்

பாட்டி வீட்டுக்கு செல்லும் நாளுக்காய் காத்திருக்க துவங்கும் மனம்
ஊரிலோ பாட்டி புத்தாண்டு பிறந்ததும் கேட்க துவங்கிடுவாள் அம்மாவிடம்
எப்போ வரீங்க , பிள்ளைகளையாச்சும் அனுப்பிவிடுங்க என்று

அழகான இரவு ரயில் பயணம் , கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தபின் எப்போ தூங்குவோம் என தெரியாது
சட்டென்று அழகான நறுமணம் , சில்லென்ற காற்று , எழுப்பி விடும் , சன்னலில் பார்க்க அழகான
பச்ச பசேல் என்ற மரங்கள் , ரயிலை விட வேகமாய் கடப்பதாய்  தோன்றும்,

இரயில் நிலையத்தில் இறங்கி , பேருந்தில் பாட்டியை காண ஆவலாய் ஒரு பேருந்து பயணம் , சன்னல் இருக்கைக்கு அண்ணனிடம் கெஞ்சி அமர்ந்து , இயற்கையை ரசித்து , நிறுத்தத்தில் இறங்கி , வீடு நோக்கி வயல்வெளிகளை  கடந்து நடக்க , வரும்வழியில் இன்னாருடைய மகன் தானே நீ என்று பல அப்பத்தாக்கள் ஆசையா கேள்விக்கணைகளை தொடுக்கும், பாட்டியை காணும் ஆவலில் கால்கள் ஓடும் ,
 
வீட்டிலோ சூரியன் உதிக்கும் முன்னே எழுந்து வாசலில் , எங்கள் வருகைக்காக காத்திருப்பாள் பாட்டி , ஓடி சென்று அவளை அணைக்க , ஒரு வருடத்திற்கான அத்தனை சேமிப்பையும் வட்டியுடன் மூச்சு முட்ட முத்தமாய் தந்திடுவாள்

குளிச்ட்டு வாங்க பலகாரம் செய்திருக்கேன் என்பாள் , ஆசையாய் தேடி தேடி எடுத்தி வைத்திருப்பாள் , தோட்டத்தில் இருந்து மாங்காயும் , பலாப்பழமும் , ஆசையாய் ஊட்டி விட இரட்டிப்பு இனிப்பு எங்களுக்கு கிடைப்பதாய் உணர்வோம் ,

கோவிலுக்கு அவள் கையை பிடித்து அழைத்து செல்வாள் , தோட்டத்திலும் அவளோடு நடப்போம் , இயற்கையை ரசிப்போம் ,  வழியில் காண்போரிடமெல்லாம் என் பேரன்  பட்டினத்தில் இருந்து வந்திருக்கான் என்று பெருமையுடன் சொல்லும்போது உடல் சிலிர்க்கும் ,

அவள் மடியில் கிடந்து ,ஏழு மலை ஏழு கடல் கடந்த ராட்சசன் உயிர் இருக்கும் என அவள் சொல்லும் பேய் கதைகளை கேட்டு பயத்தில் அவளை அணைத்திடுவோம், , மழை வரும் நேரம் அர்ஜுனா அர்ஜுனா சொல் என்பாள் , தினமும் அவள் சொல்லும் கதைகள் கேட்டு உறங்குவோம் .

மாலையில் , நேந்திரம் பழம்பொரி, சிப்ஸ் என்று ஆசையாய் அவளே செய்திடுவாள் ,  சித்தி , பெரியப்பா குழந்தைகள் என்று ஓடி ஆடி கழித்திடுவோம்,  கீழ விழுந்த மாங்காய் தின்னாமல் ,தோட்டத்தில் கல் எரிந்து வீழ்த்தும் மாங்காய் சுவை என்றும் அலாதி தான் எங்களுக்கு

இது ஒரு புறம் இருக்க , வீட்டுக்கு மாமன் மகள் வந்து விட்டால், சின்ன ராசாவ  கையில புடிக்க முடியாது என்பது போல மனசுக்குள் பட்டாம்பூச்சி சிறகடிக்கும் , பாட்டியோ அவள் உனக்கு தான் என்று உறவினர் முன் சொல்கையில் எக்ஸ்ட்ரா குதூகலம் தொற்றிக்கொள்ளும் மனதிற்குள் அறியாத வயசில் நாணமும் தொற்றிக்கொள்ளும்.

பழைய சோறாக இருந்தாலும் பாட்டியின் கையில் ஊட்டி விட அமிர்தமாய் இறங்கும், தொலைபேசி தொல்லை தந்ததில்லை , தொலைக்காட்சியும் அத்தியாவசியமில்லாததாகி போயின .

ஒரு வருடத்தில் நடந்த கதைகளை ஒவ்வொன்றாய் ஒப்பித்திடுவோம் , பேசி பேசி தீராத கதைகள் அவை
விடுமுறை கழிந்து விட்டு விலகுகையில் இங்கயே இருந்திடு ராசா என்பாள் , கண்ணீர் எங்களை ஆசுவாச படுத்த ஓடி வரும்,

அவள் சேலையில் முடிந்து வாய்த்த நாணயங்களிலிருந்து எடுத்து ஒவ்வொருவருக்கும் ஒன்று என கொடுப்பாள், இனிப்பு வாங்கி சாப்டுக்கோ என்று

அடுத்த சில நாட்களுக்கு பள்ளியில் அந்த அனுபவ பகிர்தலில் செல்லும் , மீண்டும் மனம் காத்திருக்க துவங்கும் அடுத்த விடுமுறையை நோக்கி

ஒரு மாதம் பல பல காலத்தால் அழியாத பல பல நல்ல நினைவுகளை தந்து விட்டு செல்லும்



நினைவுகளை தட்டி எழுப்ப செய்தமைக்கு  நன்றிகள்  பல FTC க்கு



***JOKER***

« Last Edit: Today at 09:48:50 AM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 497
  • Total likes: 1277
  • Karma: +0/-0
  • When u look into the abyss, the abyss looks into u
எல்லோரும் மாதிரிதான் நாங்களும், எப்போடா ஸ்கூல் லீவு விடுவாங்கன்னு காத்திருக்க gang, ஆனா ஒரே ஒரு வித்தியாசம் நாங்க வேற ஊருக்கு போய் பாட்டிய பாக்க முடியாது. ஏன்னா நாங்க இருந்த அதே ஊர்ல தான் பாட்டி வீடும், அப்புறம் என்ன ஹாப்பினஸ் தனியான்னு கேட்குறீங்களா, அங்க தான் இருக்கு டிவிஸ்ட்டு. ஊர்ல இருந்து என் ரெண்டு மாமாவோட பசங்க, பொண்ணுங்க எல்லாரும் லீவுக்கு பாட்டி வீட்டுக்கு வந்துடுவாங்க. அப்புறம் என்ன, அட்டகாசம் தான்.

காலைலேயே என்னையும் தங்கச்சியயும் டிவிஸ் 50ல ஏத்திக்கிட்டு போயிட்டு பாட்டி வீட்டுல தள்ளிவிட்டுட்டு அம்மா வேலைக்கு போயிருவாங்க. நம்மளவ விட நம்மளோட லீவ அதிகம் எஞ்சாய் பண்ணது அவங்க தான்னு அப்போ புரியல, இப்போ புரியுது. நாங்க 6 பேரு எங்களுக்கு பயம்னா என்னான்னே தெரியாது. பாட்டி வீடு அல்லோலப்படும். ரெண்டு பேர வச்சிக்கிட்டே இந்த அம்மா அப்பாக்கெல்லாம் சமாளிக்க முடியல எங்க 6 பேர வச்சிக்கிட்டு எப்படி தான் எங்க தாத்தா பாட்டி சமாளிச்சாங்களோ தெரியல.

எங்க பாட்டி வீட்டுல வெளியே திண்ணைல ஆரம்பிச்சு, முற்றம் பின்வாசல்ன்னு பெரிய வீடு எங்களுக்குன்னே அமைஞ்ச மாதிரி இருக்கும். இந்த பக்கத்துக்கும் அந்த பக்கத்துக்கும் எங்க ஓட்டத்துல ஜூராசிக் பார்க் படத்துல டயனோசர்ங்க ஓடி வருமே அந்த மாதிரி வீடே அதிரும். பெரிய டார்ஸான்னு நினைப்பு திண்ணை மேல் கூரைல ஒரு சட்டத்துல கயிற மாட்டி இந்த திண்ணைல இருந்து அடுத்த திண்ணைக்கு 'ஏயேஆஆ ஆஏஏஏ' ன்னு கத்திக்கிட்டே தாவுவோம். என்னைக்கு அந்த சட்டம் முறிஞ்சு விழும்ன்னு வீட்டுல எல்லாரும் காத்துக்கிட்டு இருந்த மாதிரியே தோணும்.

ஒருத்தர்கொருத்தர் சளைச்சவங்க இல்ல நாங்க. தக்கிளியூண்டு வண்டு மாதிரி இருந்துகிட்டு பக்கத்துவிட்டுல இருந்த இளந்தாரி பயல, 'டேய் குரங்கு மூஞ்சா'ன்னு கூப்பிட்டு வம்பிழுத்து, அவன் அம்மாவ கூட்டிட்டு வந்துட்டான் பஞ்சாயத்துக்கு. அவங்ககிட்ட தாத்தா பாட்டி சண்டை போட்டு/சமாதானம் பண்ணி அனுப்பி வச்சாலும் எங்களுக்கு தெரியும் ஆஹா நமக்கு இருக்குடின்னு முருங்ககுச்சிய ஒடச்சிட்டு பாட்டி வரும்போதே ஓட்டம் எடுப்போம்.

எங்க அம்மா ஹாஸ்பிடல்ல இருந்து எடுத்துட்டு வர்ர additional syringeலாம் எங்க போகும்னு நினைக்கிறீங்க? எங்க கசின்ஸ் ஊர்ல இருந்து வாங்கிட்டு வர்ர டெடிபியருக்கு தான். Syringeல தண்ணிய fill பண்ணி அந்த டெடிக்கு ஏத்தி ஏத்தி, சொத சொதன்னு ஆக்கி, அந்த பொம்மைக்கு உயிர் இருந்திருந்தா செத்தே போயிருக்கும். செவனேன்னு இருக்கலாம் ஆனா நாங்க இருக்க மாட்டோம், ஆஸ்திரேலியால இருந்து அம்மாக்கு ஆசையா ப்ரண்ட் வாங்கி கொடுத்த கங்காரு பொம்மை கழுத்தறுத்து ஆபிரேஷன் பண்ணி சாகடிச்சிருக்கோம்.

இப்போ புரியுது அப்போலாம் எங்களோட அம்மா அப்பா இந்த குட்டி குளவாரிங்க தொல்ல தாங்க முடியாம தான் தாத்தா பாட்டி வீட்டுல கொண்டு போயிட்டு தள்ளிவிட்டுருக்காங்கன்னு. ஆனா என்ன சேட்டை பண்ணினாலும் தாங்க கூடிய சக்தி தாத்தா பாட்டிக்கு தான் இருந்திருக்கு. காலைலயும் சரி, ராத்திரியிலயும் சரி வீட்டுக்கு வெளியே பெரிய அரசமரத்தடிக்கு கீழ ரெண்டு கயித்து கட்டில போட்டு சுத்தி உட்கார வச்சி கவள சோறு உருட்டிக்கொடுப்பாங்க பாட்டி. அதுவும் சிலசமயம் காலைல பழைய சோற பிழிஞ்சு உருட்டி அதுல சுண்ட வச்ச பழைய குழம்ப ஊத்தி ஊட்டி விடுவாங்க பாருங்க, தேவாமிர்தமா இருக்கும்.

அரசமர இலைல தாத்தா பீப்பீ செஞ்சு கொடுப்பாங்க, தாத்தவோட கதைகளுக்கு நாங்க எல்லாருமே மகுடிக்கு ஆடுற பாம்பா சுருண்டுடுவோம். அதெல்லாம் ஒரு காலம்னு சொன்னாலும், அந்த காலம் திரும்பி வராதுன்னு தெரிஞ்சாலும் மனசு ஏங்குறதை தவிர்க்க முடியல. கசிஸ்குள்ள இப்பவும் நாங்க நெருக்கமா இருக்க காரணம் எப்பவும் எங்கள பிணைப்போட கட்டி போட்ட எங்க பாட்டி வீடுங்கறதை மறுக்கவே முடியாது.
« Last Edit: February 21, 2026, 11:30:27 AM by Ninja »

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 321
  • Total likes: 1289
  • Karma: +0/-0
  • 🔥தீதும் நன்றும் பிறர்தர வாரா 🔥
    • Google
கடகாரங்க பொண்ணு... உனக்கு என்ன பா....கடையில ஆச படுற எல்லாத்தையும் எடுத்து சாப்பிடலாம் என தோழிகள் பல முறை சொல்வார்கள்...

     மளிகை கடகாரங்களுக்குன்னு ஒரு சில தியாகம் இருந்தே ஆகணும். அதுல குடும்பத்துல எல்லோருமே பங்கு பெற தான்செய்யணும். அதுல முக்கியமானது வெளியூர் பிரயாணம் குடும்பமா போக முடியாது... என் நினைவுகளில் வெளியூர்ல இருக்கும் அம்மம்மா பெரியம்மா வீட்டுக்கு போனத விரல் விட்டு எண்ணி விடலாம். இப்போ இந்த நினைவுக்கூட கொஞ்சம் தான் என்னிடம் இருக்கு.
       
        புகை, வாகன சத்தம் நிறைஞ்ச நகரத்தோட ஓட்டத்தில் காணாம போன பச்சை பசேல் ன்னு வயல்கள பார்த்த போது மனசு நிறைய சந்தோஷம் எப்படி வந்து ஒட்டிகிச்சுன்னு தெரியல...
நெல்கதிர முதல் முறை பார்த்தது அப்போ தான். மரம் செடிகளை மட்டுமே பார்த்த எனக்கு அது ஒரு அதிசயம்... 🌾 அம்மாவிடம் " அம்மா பாருங்க குட்டி குட்டி மரம் காச்சிருக்கு" ன்னு சொல்ல அருகே இருந்தவங்க எதுக்கு சிரிக்குறாங்குனு கூட தெரியாம என்னோட உற்சாகத்துல இன்னும் அதிகமா சொல்லிட்டே இருந்தேன். அம்மா கஷ்டப்பட்டு தான் என் வாய்ய அடைச்சாங்க.

       அந்தோணியார் கோவில் முன்னாடி தான் அம்மம்மா வீடு. முதல் முறை அம்மம்மா வீட்டுக்கு போகும் போது கை நடுங்க விறகு அடுப்புல சோறு வடிச்சுட்டு இருந்தாங்க...எங்கள பாத்ததும் "ஏ மக்கா" ன்னு முகத்த தடவி நெட்ட எடுத்து, உச்சி முகர்ந்து நெற்றில முத்தம் கொடுத்தாங்க... சுருக்கம் நிறைஞ்ச அழகிய அன்பான கைகள், கண்கள்ல அவ்வளவு அன்பு. அது இன்னைக்கும் என் நினைவுல இருக்குற என் அம்மம்மாவோட நினைவு.

      பிறகு கருப்பட்டி காபி போட்டு குடிச்சுட்டு அக்கா, பெரியம்மா வழி அண்ணா, நானு மூணு பேரும் கோவில் முன்னாடி மணல்ல செம்ம ஆட்டம்... கால் வலிக்க வலிக்க விளையாட்டு. பாக்குறவங்க கொடுக்கர் பேத்தியா ன்னு கேக்கும் போது தான் தெரிஞ்சுது என் தாத்தாவோட பட்ட பேரு.

      பனங்கிழங்கு, பதனி, ஏணிப்படி மிட்டாய் எல்லாம் ஒரு கட்டு கட்டுனோம்... விடுமுறைய விளையாட்டோட கழிச்சுட்டு கிளம்பும் போது சீலைல முடிஞ்ச பைசா எடுத்து பாசமா கொடுத்து கன்னத்த வருடி வழி அனுப்பி வச்சாங்க...

       ஒரு சில தொடுதல் நம் வாழ்க்கையோடு பினஞ்சு இருக்கும். அத நினைக்கும் போது எல்லாம் பசுமை மாறாமல் நிலைச்சு இருக்கும் ....
பல வருடம் கழித்து தூசிதட்டி இந்த நினைவுகளை எழுப்பிய ' நெஞ்சம் மறப்பதில்லை ' க்கு மிக்க நன்றி ❤️ ❤️
« Last Edit: February 21, 2026, 08:05:11 PM by Yazhini »

Offline TiNu



பள்ளிவிடுமுறையும் பாட்டி வீடும்
==============================

Dear RJ,

மாணவர் விடுதியில் இருந்து.. நாங்கள் காலாண்டு, அரையாண்டு விடுமுறைக்கு எல்லாம் ஊருக்கு போவதில்லை. பள்ளி கோடை விடுமுறையில் மட்டுமே நாங்கள் ஊருக்கு போவோம்.

அந்த 2 மாத கோடை விடுமுறையில் தான் என்னுடைய பாட்டி வீட்டுக்கு செல்வோம். வருடத்துக்கு ஒருமுறைதான்  எல்லா சொந்தங்களையும் பார்ப்பேன்..

எங்களுக்கு லீவு ன்னு சொன்னதும் train க்கு ticket எல்லாம் book பண்ணி, கடைசி பரீட்சை அன்னிக்கு இரவே கிளம்பிவிடுவோம். ஊரில் அங்கே தயாராக இருக்கும் car ல எங்கள் பெட்டிபடுக்கை எல்லாம் ஏற்றி,  பாட்டியின் பண்ணை வீட்டிற்க்கு பறந்து போய்விடுவோம்.

அந்த இடம் சுற்றி ஊர் எல்லாம் இருக்காது.. வயலும் அந்த வயலில் வேலை செய்பவர்கள் மட்டுமே இருப்பர். நமக்கு மனுஷங்களா முக்கியமா... வயல்வெளியும்..  ஆடு மாடுகள் எல்லாம் கட்டி போட்டு வச்சு இருக்கும் அந்த தொழுவம் தான் பொழுது போக்கே..

பாட்டி வீட்டுக்கு போன முதல் நாளில் இருந்தே.. எங்களுக்கு ஜாலி தான்.. ஆனால் பாட்டிக்கு தான் தலைவலி..  summer ல தான் பருத்தி செடி பயிர் செய்து இருப்பாங்க.. நாங்க எல்லோரும் பருத்தி பிஞ்சு இனிப்பாக இருக்கும்ன்னு.. பிஞ்சுகளை எல்லாம் பறிச்சு மடி நிறைய கட்டிக்கிட்டு  வந்திருவோம்.. இது என்னோட ஆச்சிக்கு தெரியாமல்.. பருத்தி பிஞ்சுகளை எல்லாம் பன்றி மேயுது போல.. வேலியா போட்டுவிடுப்பா ன்னு அப்பாவியாக சொல்லும்... நாங்க மனசுக்குள்ளே சிரிச்சுக்குவோம்...

அந்த காட்டில் நிறைய கிணறு இருக்கும்.. பெரிய அண்ணா, மாமன்மாராகள் எல்லாம் எங்களை ஆளுக்கு ஒருவராக தெரிவு செய்து கொண்டு.. கிணற்றின் சுவரில் நின்று கொண்டு, எங்களை கிணற்றின் உள்ளே போடுவாராகள். பின் அவர்களின் எங்களின் பின்னே குதித்து காப்பாற்றி மேலே தூக்கிட்டு வருவாங்க.. செம ஜாலி ஆ இருக்கும்.. நான் நீச்சல் கத்துக்கிட்டதே இப்படி தான்...

ஆலமரங்கள் அங்கே நிறைய உண்டு. அதில் ஊஞ்சல் ஆடுகிறேன் என்று.. வேகமாக நான் முந்தி நீ முந்தின்னு மண்டையெல்லாம் ஒடைச்சு இருக்கோம். அங்கே எங்களுக்கு எதுவும் உடல்நிலை சரி இல்லை என்றால். என்னோட மாமன்மார்கள். ஜீப் எடுத்துட்டு town க்கு போய் doctor nurse எல்லோரையும் கூட்டிட்டு வந்துருவாங்க... ஒரு முறை நானும் கூட  கத்தரிக்காய் பாரவண்டிக்கு கீழே மாட்டி எலும்பை உடைச்சு இருக்கேன்..

ஒரு சமயங்களில் இலந்தை  பழம் பறிக்க போகிறேன் என்று காடுகளில் சுற்றி திரிந்து தொலைந்த போய்.. ஆச்சிக்கு  எதிரி பண்ணைக்காரங்க..   எல்லைக்கே போய்ட்டோம்.. அப்போ அங்கே இருந்த அண்ணா..  எங்களை கூட்டி வந்து  பண்ணையில பத்திரமா விட்டு இருக்காங்க.. ஹீஹீஹீ அப்புறமா  ஆச்சிகிட்டே வாங்கின அடி இன்னும் மறக்கலை..

கடைசியா ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். எங்க gang ல ஒருத்தன் பாம்பு குட்டி போடுது வாங்க பாக்கலாம்ன்ன்னு கூட்டி போனாங்க.. நாங்களும் அவனோட போய்ட்டோம்.. அங்கே பார்த்த.. எவ்ளோ பாம்பு குட்டி.. அல்வா போல சூப்பர் இருந்துச்சு..  ஆள் ஆளுக்கு ஓடி ஓடி போய் குட்டிகளை பிடிச்சுட்டு இருதோம்..

எங்களுக்கு ரொம்ப நேரமா காணுமேன்னு.. எங்களை தேடிவந்த மாமாக்கு அதிர்ச்சி..  எங்க எல்லோரையும் எங்கே கிடந்த காஞ்ச மாறு வச்சு அடிச்சாரு பாருங்க..  பாம்பு பிடிக்கவ வந்தீங்க.. கொன்னுருவேன்.. ஒடுங்க.. ஐயோ அம்மா.. அடி.. செம அடி... நல்லவேளை அந்த பாம்பு குட்டி எல்லாம் தண்ணிப்பாம்பு குட்டியாம்..

இப்போ நான் சொன்னது எல்லாம் ஒரு வருட நினைவுகள் தான்.. அதிலும் நான் ரொம்பவே பார்த்து பார்த்து சொல்லி இருக்கேன்.. எல்லாம் அப்படியே சொன்ன.. Tinu இமேஜ் ரொம்ப damage ஆகிற கூட்டத்துல...  இத்துடன் என் நினைவுகளும் முற்றுப்புள்ளி வைக்கிறேன்..

நன்றி FTC Team 
 

« Last Edit: February 21, 2026, 09:11:15 PM by TiNu »