Author Topic: நினைவுப் பெட்டகம்!!  (Read 8 times)

Offline Shreya

                                       நினைவுப் பெட்டகம்!!

ஜன்னல் ஓரமாய், ஆச்சி தந்த சுக்குமல்லி
காபியின் நறுமணம்..நேற்று பெய்த பனிப்பொழிவில்,
நிலமெல்லாம் வெண் போர்வை!
கவலையறியாது அதில் திளைக்கும் அந்தச் சிறுமி...
எனக்குள் கிளறுகிறாள், நான் ஓடித்திரிந்த
அந்த 'அக்னி' காலத்தை!!

​சுடலைமாடன் கொடைச் சத்தமும், செந்நிறத் தேரி மணலும்..
தாகம் தீர்த்த செக்கச் சிவந்த கொள்ளாமரப் பழங்களும்!
சொர்க்கமாய் விரிந்திட, ஆச்சியின் விரல் பிடித்து நான் நடந்த நாட்கள்!!

​சாணம் மெழுகிய முற்றம், வியர்வை சிந்திய ஆட்டம்,
அரசமரப் பீப்பியின் ஓசையும், அந்த வாழைக்குருத்தின் வாசமும்...
பல்லாங்குழியும், கூட்டாஞ்சோறும்
இன்றும் என் நினைவலைகளில்!!

​"என்ன பிள்ளை இப்படியா சாப்பிடுவாய்?" - ஆச்சியின் அதட்டலில்
வட்டில் நிறைய நெல் சோறு.. பேரன்பின் ருசியோடு!
அவளுக்கு 'சம்பா', எனக்காக 'நெல்' அரிசி,
விக்கிடுமோ எனத் துடித்த அவளின் அந்தப் பாசம்,
இந்தப் பனிக் குளிரை விடவும் இதமான கதகதப்பு!!

​நிழல் தேடும் வெயிலில் நாவூறும் நுங்கும், சுடச்சுடப்
பனங்கிழங்கும்..குச்சி ஐஸும், கிணற்று நீச்சலும்,
பனை ஓலை மாம்பழம் போட்ட பதநீரும்..ஜவ்வு மிட்டாயும்..
கருப்பட்டி கிடங்கில் அவள் கொடுத்த கூப்பணியும்..
அந்தக் கயிற்றுக் கட்டிலில் கிடைக்கும் சுகமான தூக்கம்!!

​சுமைகளற்ற அந்த வசந்த காலம்!
மீண்டும் வாராதா அந்தப் பிள்ளைப்பருவம்??
ஏக்கத்தின் விளிம்பில் நின்று - என்
இதயம் இன்று ஏதிலியாய் அலைகிறது!!
​நாட்கள் நகர்ந்து தொலைந்தாலும் - என்
நினைவுப் பெட்டகத்தில் இன்றும்
பசுமையாய்... உயிர்ப்புடன்!
« Last Edit: Today at 03:59:56 AM by Shreya »