ஒரு காலத்தில்
மனிதன்
தெய்வங்களைத் தேடவில்லை
ஒளியை மட்டுமே
வணங்கி வந்தான்.
இருள்
அவனுக்குப் பயம்,
அந்தப் பயத்தில்
பிறந்தது அவனின்
முதல் தெய்வம்
சூரியன்.
வெளிச்சம் இருந்தால்
பாதை தெரியும்,
வாழ்க்கை நகரும்,
நம்பிக்கை வளரும்.
பிறகு…
மனிதன்
உருவம் தேடி
வழிபாட்டை
நோக்கி நகர்ந்தான்.
கல்லில் மஞ்சள் பூசி,
மரத்தில் சிவப்பு துணி கட்டி,
மண்ணில் சிலை வடித்து,
அங்கே பிறந்தது
மக்களுக்கான தெய்வங்கள்.
பிறகு…
மழைக்கு மாரியம்மன்,
திசைக்கு அய்யனார்,
நோய்க்கு கருப்பசாமி என
மனிதன்
தன் தெய்வங்களுக்கு
மனித உருவம் தந்தான்.
இவை
பயத்தால் வந்த
தெய்வங்கள் அல்ல,
இவை
நம்பிக்கையின் முகங்கள்.
“உருவம் ஏன்?”
என்று கேள்வி எழுந்த போது,
வழிபட
மனிதனுக்கு
ஒரு முகம் தேவைப்பட்டது.
அது தன்னைப் போல
உருவம் இருந்தால்
அன்பு கொள்வதற்கும்,
பயம் குறைவதற்கும்
எளிதாக இருக்கும் என்று
தன் முகத்தை
தெய்வங்களுக்கு தந்தான்.
“நமக்கு மேலே
ஒருவர் இருக்கிறார்”
என்ற எண்ணமே
அவனை
ஒழுக்கத்தின் பாதையில்
நடக்க வைத்தது.
அப்போதெல்லாம்
கோயில் இல்லை,
நன்கொடை இல்லை,
பூசாரி இல்லை.
மனிதனின்
இதயமே கருவறை,
மனிதனின்
பக்தியே பூஜை.
ஆனால் இன்று…
பெரிய கடவுள்களின்
வருகையால்
பக்தி
வணிகமாகிவிட்டது.
பணம் இருந்தால்
வழிபாடு,
இல்லையெனில்
அவமதிப்பு.
பக்திக்குள்
சாதி புகுந்தது,
கடவுள்கள் மனிதனை
பிரிக்கும் ஆயுதமானது.
மறந்துவிட்டோம்
மண்ணின் வாசம் கொண்ட
சிறு தெய்வங்களை.
மக்கள் தெய்வங்கள்
“நீ உயர்ந்தவன்”
“நீ தாழ்ந்தவன்”
என்று சொல்லவில்லை,
அவை சொன்னது
ஒன்றே ஒன்றுதான்
“நல்லவனாய் இரு.”
தெய்வங்களும், கடவுள்களும்
மனிதனால்
உருவாக்கப்பட்டவை,
அதை வைத்து
மனிதனை இழிவுபடுத்த
அவற்றை பயன்படுத்தாதே.
மூடநம்பிக்கை விட்டு
அறநெறி பிடித்து,
சுயஒழுக்கம் வளர்த்து
மனிதனே
மனிதனுக்கான
தெய்வமாக
மாறட்டும்.
நம்பிக்கை
ஒளியானால்
வாழ்வு பிரகாசிக்கும்
அதே நம்பிக்கை
மூடநம்பிக்கையானால்
முன்னேற்றம்
சிறைபடும்.
சூரியன்
தந்தையின் தோள்போல்
உலகம் முழுதும்
வெளிச்சம் சுமக்கும்.
பூமி
தாயின் மடிபோல்
எல்லா விதைகளையும்
அன்பாய் அணைக்கும்.
மழை
கருணையின் குரல்,
வறண்ட நெஞ்சங்களில்
உயிர் ஊற்றும்.
காற்று
உயிரின் மூச்சு,
கண்ணுக்குத் தெரியாமல்
உலகை தாங்கும்.
இந்த இயற்கையே
நமக்கான
உயர்ந்த
மக்கள் தெய்வங்கள்.
இயற்கை சீற்றம் கொண்டால்
உலகம் தாங்காது,
அதன் முன்
எந்த சக்தியும்
நிற்காது.
இயற்கையை வணங்குவோம்,
வாழ்வில் உயர்வு காணுவோம்.