என் ஆருயிர் இசையே!
என் ஆருயிர் இசையே!
எண்ணில் அடங்காது உன் புகழ் சொல்ல!
என் அன்னை கருவில் உன்னை முதல் ரசித்தேன்!
என் அம்மா பாடிய தாலாட்டு என் மனதில் அடி எடுத்து வைத்தது உன்னை நேசிப்பதற்கு!
என் குடும்ப,உறவினர் பரிசளித்த விளையாட்டுப் பொருட்கள் இசை கருவிகளின் இரசனையை என் மனதில் எழுப்பியதே!
பாடசாலையில் இசை கல்வி அறிவினை குருவிடம் கற்றறிந்தேன்!
பாடும் பாடகர் பாடல்களை இடை விடாது இரசித்தேன்!
பாடல்கள் பல பாடும் என் தாத்தா இசையை வியந்து கேட்டேன்!
பாடும் குருவியாய் பட்டாம்பூச்சியாய் குழந்தை பருவத்தில் பறந்து திரிந்தேன்!
என் துன்பத்திலும் ,இன்பத்திலும் கூட இருந்தாய் இசையே!
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு ஆறுதலாய் எப்போதும் இருக்கின்றாய் இசையே!
என் தனிமையை தள்ளிப்போடுவதும் நீ அல்லவா என் ஆருயிர் இசையே!
இசையே உன் மாதா " சுருதி" , பிதா "லயம்" உன்கூட எப்போதும் இருப்பதால் நீ இன்னிசை ஆகின்றாய்!
இசையே நீ இன்னிசை, மெல்லிசை,பண்ணிசை,துள்ளல் இசை,பறை இசை,கானா இசை,ரீமிக் இசை என்ற பெயர்களில் பாடல்களை தாங்கி வருகின்றாய்!
இசையே படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை நீ சந்தோசப்படுத்துகின்றாய்!
கருவில் இருந்து கல்லறை வரை மனித வாழ்வில் நீ முக்கியமானவளே!
கடவுளுக்கு கூட உன்னைப் பிடித்ததனால் ,அவர்கள் கைகளில் இசைக்கருவிகள் இருக்கின்றனவோ!
கல்யாண வீடுகளில் வாசிக்கும் மங்கள வாத்திய இசையில் மயங்கிய நாட்கள் எத்தனையோ!
கருமாரி வீடுகளில் வாசிக்கும் பறை இசை கூட ஆட வைத்து கவலைகளை மறக்க வைக்கின்றனவே!
இன,மத ,மொழி பேதமற்றவள் நீயடி!
இவ்வுலகில் எந்த தேசத்தில் இருந்தாலும் உன்னை ரசிக்கலாம்!
இன்னிசையே உன்னை ரசிக்க மொழி முக்கியம் இல்லையடி!
இசைக் கருவிகளில் பல்வேறு இசைக் கானமாய் காற்றில் தவழ்ந்து வருவாயடி!
இசையால் வசமாகாத இதயம் ஏதடி!
எங்கும் இசை எதிலும் இசை நீயே இருப்பாயடி!
எல்லா இணைச்செயற்பாடுகளிலும்,இயற்கையிலும் நீ தானே இருக்கிறாயடி!
இளம்பருவம் முதல் முதுமைப் பருவம் வரை உன்னை ரசிப்பேனடி!
இன்னிசையாக நான் ரசிப்பதற்காக பண்பலையில் பாடல்களாக நீ வருவாயடி!
எத்தனை உறவுகள் இருந்தாலும்,நான் தேடும் ஆனந்தம் தருவது இசை நீயடி!
என் சோகம்,வலிகளை மறக்க உணர்வளித்தாயடி!
என் தனிமை நேரத்தில் துணை தோழி நீயடி!
என் வெற்றி,புகழில் கூட நீ இருப்பாயடி!
என் மனதின் மாமருந்து இசை நீயடி!
அதிகாலை, அந்திமாலை என்று நேரம் பாராமல் உன்னை ரசிக்கும் ரசிகை நானடி!
அசைந்து ஆடி உன்னை ரசித்தபடி உணவு சமைத்து நான் உணவருந்துவேனடி!
அசந்து நான் தூங்கும் போது என் தாலாட்டு நீயடி!
அயராது நான் வேலை பார்ப்பதற்கு நீ எந்தன் ஊன்றுகோல் நீதானடி இசையே!
தனிமையில் உன்னை ரசித்தேன நான்-அப்போதெல்லாம்
தமிழ் அரட்டை அரங்க நண்பர்களுடன் பண்பலையில் ரசிக்கிறேன் - இப்போதெல்லாம்
தருகின்றனர் பாடகர்கள், இசையமைப்பாளர் கள்,பாடலாசிரியர்கள் சிறந்த பாடல்களாக உன் இசையில்!
தந்தணத்தோம் தாளம் போட்டு என்னை ஆட வைக்கின்றதே இசை உன்னை ரசிக்கும் போதினிலே!
தரணியை விட்டு என்னுயிர் போகும் தருணத்தில் கூட,ஆருயிர் இசையே உன்னை பிரியாத வரம் வேண்டும் எனக்கு!
மங்கையே ஒலிவாங்கியை கரங்களில் ஏந்திவிட்டாய்!
மனதார இசைத்திடு உந்தன் இசைக்கானத்தினை!
மன மகிழ்வோடு ரசிப்பதற்காக காத்திருக்கின்றாள் அன்புத்தோழி தேன்மொழி!
மன நிறைவுடன் வாழ்த்துகின்றேன் என் ஆருயிர் இசையே ,நீ இன்னும் வளர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்று!