கசப்பு மாறும் இரகசியம்
ஒரு சீடன் தன் குருவிடம் மிகுந்த மனவேதனையோடு வந்தான். "குருவே, என் வாழ்க்கையில் கஷ்டங்களும், மற்றவர்கள் எனக்குத் தரும் துன்பங்களும் தாங்க முடியாத அளவிற்குப் பெரியதாக இருக்கின்றன. என் இதயமே பாரமாக இருக்கிறது. இந்தத் துயரத்திலிருந்து எனக்கு என்றுமே விடிவு காலம் இல்லையா?" என்று கண்ணீருடன் கேட்டான்.
குரு அவனைக் கனிவோடு பார்த்து, "மைந்தா, சமையலறைக்குச் சென்று ஒரு பிடி உப்பும், ஒரு குவளை நீரையும் எடுத்து வா," என்றார். சீடனும் அவ்வாறே கொண்டு வந்தான். குரு சொன்னார், "இப்போது இந்த ஒரு பிடி உப்பை அந்தத் தண்ணீரில் கலந்து, அதைக் குடித்துப் பார்."
சீடன் அதைக் குடித்துவிட்டு, முகத்தைச் சுளித்தான். "குருவே! இது பயங்கர உப்பாக இருக்கிறது, குடிக்கவே முடியவில்லை!" என்றான்.
குரு மென்மையாகப் புன்னகைத்தார். "சரி, இப்போது என்னுடன் வா," என்று அவனைக் கூட்டிண்டு, ஆசிரமத்திற்கு அருகில் இருந்த ஒரு பெரிய, அழகான ஏரிக்குச் சென்றார்.
"இப்போது, மீதமிருக்கும் இன்னொரு பிடி உப்பை இந்த ஏரி நீரில் போடு," என்றார் குரு. சீடனும் போட்டான்.
"இப்போது இந்த ஏரித் தண்ணீரை அள்ளிக் குடித்துப் பார். எப்படி இருக்கிறது?" என்று கேட்டார் குரு.
சீடன் தண்ணீரை ஆசையோடு குடித்துவிட்டு, "குருவே, இது மிகவும் சுவையாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கிறது. இதில் உப்பின் சுவையே தெரியவில்லை!" என்றான் மகிழ்ச்சியோடு.
குருவின் உபதேசம்:
குரு சீடனின் தோள் மீது கைவைத்துச் சொன்னார்.
"வாழ்க்கையின் துன்பங்கள் என்பவை இந்த ஒரு பிடி உப்பைப் போன்றதுதான். அது மாறாதது, அதன் அளவு ஒன்றுதான். ஆனால், அதை நீ எதில் கலக்கிறாய் என்பதில் தான் விஷயம் இருக்கிறது.
உன் மனதை நீ ஒரு சிறிய குவளை போல வைத்திருந்தால், சிறிய கஷ்டமும் உனக்குப் பெரிய கசப்பைத் தரும். அதுவே உன் மனதை இந்த ஏரியைப் போலப் பரந்து விரிந்ததாக, எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு மாற்றிக் கொண்டால், எவ்வளவு பெரிய துன்பமும் உன்னைக் காயப்படுத்தாது; அது உனக்குள் கரைந்து மறைந்துவிடும்!"
இந்த கதையின் தத்துவம்:
மனதின் எல்லை: நாம் கஷ்டங்களை மாற்ற முடியாது, ஆனால் நம் மனதின் எல்லையை மாற்ற முடியும்.
ஏற்றுக்கொள்ளுதல்: சித்தர்கள் சொல்வது போல, "எல்லாம் அவன் செயல்" என்று பரம்பொருளின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நம் மனதை ஏரியைப் போலப் பரந்ததாக வைத்துக் கொண்டால், எந்தத் துயரமும் நம்மை அசைக்க முடியாது.....