ஒவ்வொரு முறையும்
தூரத்திலிருந்து ஒலிக்கும்
ஒருவரின் ஏக்க ஓசைகள்
இரைச்சலாய்த் தென்பட்டாலும்
உள்ளூற இன்பமாயிருக்கும்..!!
நீ அழைத்த போதெல்லாம்
செவிமடுத்துப் போனதென்னவோ
நிஜந்தான் என்னுயிர்க்கு..!!
நினைவுகளில் நிறைந்து
விட்டிருக்கிறாய்..!!
பார்த்து விட வேண்டும்,
பேசி விட வேண்டும், கொட்டித்
தீர்த்துப் புலம்பி விட
வேண்டுமென்றெல்லாம்
எளிதாகத் தோன்றிவிடுகிறது..!!
ஏன்..?? ஊருக்கே உரக்கச்
சொல்ல வேண்டும் எந்தன்
நேசத்திற்குரிய ஒருத்தியென்றால்
அது நீ மட்டுமே என்றும் கூட..!!
நிறைய தடவை முயன்றிருக்கிறேன்..!!
நிதானித்து நகர்ந்துமிருக்கிறேன்..!!
என் நேசங்களைத் தொலைக்கப்
போவதுமில்லை, அதிலேயே
திளைத்துக் கிடப்பதும்
நியாமாய் தெரியவில்லை..!!
ஆனால், நேசிப்பேன்..!!
நாளிகையை நாட்களாக்கியோ,
நாட்களை வருடங்களாக்கியோ,
நொடிகளை நிமிடங்களாக்கியோ..!!
நேசித்துக் கொண்டேயிருப்பேன்..!!
நேரத்தை நீட்டித்து வைத்து
நேசித்துக் கொண்டிருப்பேன்..!!
ஓர் காரிருள் அறையின்
சிறு துவார ஒளியாய் உன்
நினைவு மட்டும் என்
தனிமையில் உடனிருக்கும்..!!
இப்போதும் சொல்கிறேன்..!!
நீயில்லை என்றான பின்னான
என் நாட்களில் நம் வனத்தை
சொற்பமாக எரிய விட்டிருக்கிறேன்..!!
சில தீப்பிளம்புகளுடன்..!!
நம் தீவைச் சாம்பலால் முலாம்
பூசிக் கொண்டிருக்கிறேன்..!!
ஆசையாய் கட்டிய கூட்டையும்
கொளுத்தி விடுவேன்..!!
விளைவை எண்ணி பயப்பட
இப்போதைக்கு நான்
அற்ப மனிதனாயில்லை..!!
நீயற்ற நினைவலை நீருற்றில்
நனைந்து அதி ஈரமாகி விட்டேன்..!!
வியர்வையெல்லாம் உறைந்து போய்
நடுங்கச் செய்து விட்டிருக்கிறது..!!
இருளையெல்லாம் போக்கி விடுங்கள்
என்று நான் சொல்லவில்லை..!!
என்னை நானே எரித்துக் கொள்கிறேன்..!!
நான் குளிர் காய சுடர் தேவை.
அவ்வளவே என் மனஆறுதல்...