விலகிச் செல்ல நேர்கையிலும்
வெறுப்புக் கோடொன்றை
வரையாமல் செல்லும்
அழகான மனம் படைத்த
நல்மனிதர்கள் வாய்க்கும் வரை
வாழ்கை அழகானது தான்.
அத்தனை தவிப்புக்களையும் ஏக்கங்களையும் கொன்று புதைத்தாலும்...
**************************************
முன்முடிவுகளோடான தீர்வுகளில் நம்பிக்கையிழந்தப் பின்னரான வாழ்க்கையில்
ஒரு அசாத்திய பொறுமை
குடிகொள்ளத் துவங்குகிறது..
வினைகளேதும் ஆற்றாத
அந்த பொறுமைக்கு
பெயர் சொல்லல் கடினம்.
உங்கள் சௌகரியங்களுக்கு வேண்டியெனில்
அதனை வெறுமை எனவும்
அழைத்துக் கொள்ளுங்கள்...
*****************************************
அடைமழை இரவொன்றின் தூரப்பயணத்தில்
ஆடம்பர கார் சஞ்சாரிகளுக்கும்
அரசுப்பேருந்தின்
ஒழுகும் ஜன்னலோரங்களில்
நிமிர்ந்தமர்ந்து ஈரம் தவிர்க்கும் சாமான்யனுக்குமான
மனநிலை இடைவெளிகளில்
கணக்கிடப்படுகிறது
வாழ்க்கையின் அழகியல்...
*********************************************
பொருத்தமான முகமூடி
தேடியலையும்
இம்மனச்சலனங்களின் முகத்திற்கு
ஒரு வெறுமையின் நிறம்....
*****************************
எங்கோ தொக்கி நிற்க்கும்
அந்த ஒற்றை வரிக்கு
கரைந்து கொண்டிருக்கும் இந்த இரவை பரிச்சயப்படுத்துவது எங்ஙனம்?
*********************************