Author Topic: எங்கள் குலசாமி !  (Read 706 times)

Offline JasHaa

எங்கள் குலசாமி !
« on: October 26, 2018, 07:12:04 PM »
அகிற்புகை வீசும்  கூந்தல்  அல்ல  ...
எண்ணெய் பசையற்ற  அள்ளிமுடித்த கூந்தல் ....

ஸ்னானப்பொடி  மற்றும்  மஞ்சள்  குழைத்து பூசிய  முகம்  அல்ல ...
செயற்கை  பூச்சு  இல்லாத  கருத்த முகம்  தான்....

மை பூசிய நயன  விழிகள்  அல்ல ....
செருக்கும்  திமிரும்  கொண்ட  திராவிட  விழிகள் ...

கொவ்வைப்பழமென  சிவந்த  செவ்வரளி  அதரங்கள்  அல்ல ...
புன்னகையே  தொலைத்த  புண்ணியவாதியின்  அதரங்கள் ....
மென்பட்டுடுத்தி மேனி சிலிர்த்து நிற்பவள்  அல்ல ...
கந்தல்  துணியையும்  மாரப்பாக்கி மானம்  காப்பவள் ....

மலர்  தீண்டி  விளையாடும்  வளைக்கரம் அல்ல...
தினம்  தினம் சுடுகற்களை  சுமக்கும் வைரம்  பாய்ந்த  கைகள் ...

மல்லிகை பூ போன்ற சதங்கை  அணிந்த  பொன்பாதம் அல்ல...
சுட்டெரிக்கும்  சூரியனின்  வியர்வை  துளிகளை  சேகரிக்கும் காய்ப்பு  காய்த்த  பாதங்கள் ...

அரண்மனையில்  அல்லி   ராணியாய் வலம் வருபவள்  அல்ல ...
செங்கதிரோனின்  காதல் பார்வையில்  நித்தமும்  செங்கல் எனும் சுமை தூக்கும் சுமைதாங்கி  அவள்  ...
நோயில்  தவிக்கும் தாயவள்...
போதையில்  தடுமாறும்  தந்தையவன்  ...
தாய்  தந்தைக்கு  தாயுமாகி  ...
கன்னியாக  பிறந்து கன்னியாக மடியும்  வரம்  பெற்ற எங்கள்  குலசாமி  அவள்...