சிதைவதற்கும், சீராவதற்கும்
நொடிக்கும் குறைவான ஒரு கணம்
போதுமானதாய் இருக்கிறது -எனக்கு
ஒரு கணநேர கவனச்சிதைவை
உரையாடல்களுக்கு இடையிலும்
உணர்ந்தறிகிறாய்.
உன்னிடம் எனக்கான எதிர்பார்ப்புகள்
என்னவென்பதை ஒற்றை வரியில்
சொல்லக்கேட்கிறாய்...
என்றோ நடந்து போனதொரு நிகழ்வொன்று
எனக்குள் ஏற்படுத்தி போன தாக்கத்தை
இன்னொரு கோணத்தில் விவரிப்பதாய் துவங்குகிறேன்.
எதிர்பாரா திருப்பங்களுடனான
அந்த பிரளய காலக் கதை
தன் அசுரக்கைகளோடு நீண்டுக்கொள்கிறது...
உன் கேள்வி மறந்துப்போன
ஒரு தருணத்தில் உச்ச்சுக்கொட்டி
தொடர்கிறாய்.
எதை சொல்வதற்காய் இதைத்
தொடங்கினேன் என்பதை நானும்
மறந்திருந்தேன்.
கதையோ தன் அசுரக்கைகளால்
கணங்களை விழுங்கியபடி நீண்டுக்கொண்டே
இருந்தது..
நான் உன்னில் எதிர்ப்பார்ப்பது
உன்னை மட்டுமே என்பதை
எப்படிச்சொல்வது எனத்தெரியாமலே....