மனம் நெகிழ்ந்து கண்ணீர் ததும்பும்
நொடிகளுக்காகவேனும் ஈரம் மாறாத
ஒரு உள்ளம் வேண்டும்.
கசப்புகள் எல்லாம் தாண்டி வாழ்க்கையின்
நிறைவை உணர்வதற்க்காகவேனும்
வெறுமை உணர்த்தும் வலிகள் வேண்டும்.
நம்மில் எதிர்பார்க்கும் பலரிடையில்
நம்மை மட்டும் எதிர்பார்க்கும் அந்த
ஒருசிலரை உணர்வதற்க்காகவேனும்,
வீழ்த்திப்போகாத தோல்விகள் வேண்டும் .
வாழ்தலின் முழுமையை உணர்த்திப்போகும்
அன்பானவர்களை அறிவதர்காகவேனும்
வெறுப்புமிழ்ந்து கீழ்ப்படுத்தும் அவமானங்கள்
அவ்வப்போதாய் வேண்டும்.
ஏன் இத்தனை நேசம் செய்தீரோ? என
கண்ணீரோடு கேட்கத்தோன்றும்
அன்பானவர்களால் சூழச்செய்த இறைவன்
கருணையாளன் .
இத்தனை அன்பாலே திக்குமுக்காடச்செய்யும்
இந்த வாழ்க்கை நிறைவானதில்லையெனில்
வேறெதனை சொல்வது நிறைவென்று?.
அங்கிங்கெனாதபடி காயங்களால் வீழ்த்தி போனாலும்,
அங்கொன்று இங்கொன்றென வெளிப்படும்
அன்பின் ரேகைகளால் ஆனந்தம் பூத்துக்கிடக்கிறது வாழ்க்கை...
வாழ்க்கை அழகானது தான், சந்தேகமேயில்லாமல்.