Author Topic: மகிழ்ச்சியை தருபவர் யார்?  (Read 934 times)

Offline Yousuf

மகிழ்ச்சியைத் தேடி ஒவ்வொருவரும் எங்கெங்கோ செல்கின்றனர். சினிமா, பார்க், பீச், சர்க்கஸ், சுற்றுலா என்று அவர்கள் செல்லாத இடமே இல்லை. உண்மையில் மகிழ்ச்சி எங்கு உள்ளது என்று ஆராய்வோமானால், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, அதைத் தேடி ஊர் முழுக்க அலைந்த கதையாகத் தான் இருக்கிறது.

எப்போதும் மகிழ்ச்சியாக யார் தான் இருக்கிறார்கள்? மகிழ்ச்சியும், துக்கமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. எல்லா செயலையும் அழகுணர்ச்சியுடன் செய்யும் போது தான் அதை நாம் நன்றாக செய்ய முடிகிறது. அப்படி செய்யும் போது தான் அவன் அந்த துறையில் ஒரு உன்னத கலைஞனாகிறான்.

ஒரு கலைஞனுக்கு முக்கியத் தேவை தன்னம்பிக்கை. தன்னால் இந்தக் காரியத்தை எல்லாம் சாதிக்க முடியுமா? என்ற அவநம்பிக்கை ஒருவருக்கு இருந்தால் அவரால் சாதிக்கவே முடியாமல் போய் விடும். தன் ஆற்றல் மீது முழு நம்பிக்கை கொண்டு இடைவிடாமல் உழைப்பவர்களாலேயே நிச்சயம் சாதிக்க முடியும்.

பிறர் தன்னை விமர்சிப்பதற்கு முன் தானே தன்னை விமர்சித்துக் கொள்ள வேண்டும். தனக்குத் திருப்தி ஏற்படுகின்ற வரை எழுதுகிறவன் சிறந்த எழுத்தாளனாகிறான். தன் மனம் நிறைவு பெறும் வரை படம் வரைகிறவன் ஓவியனாகிறான். தானே ஒரு இசையைக் கேட்டு, மெய்மறக்கும் வரை, மனமொன்றி பாடுகிறவன் இசைக்கலைஞனாகிறான்.

எந்த ஒரு கலைஞனுக்கும் தூண்டுகோலாக இருப்பது அவனது சுய திருப்தியே. எந்த ஒரு கலைஞனுக்கும் உன்னதமான பரிசு என்பது ரசிகர்களின் பாராட்டுக்கள் தான். விமர்சனத்தைக் கண்டு அஞ்சாதவனே உண்மையான கலைஞனாகிறான். தொடர் தோல்வியால் துவளும் போது சிலர் கலையை விட்டு விட்டு ஓடி விடுகின்றனர். உலக மக்களின் விருப்பத்தை ஒரு பொருட்டாக கருதாமல், தனது திறமையை திறம்பட வளரப்பவன் காலபோக்கில், உலக மக்களின் விருப்பமாகவே மாறிவிடுகிறான்.

நாம் நம்மை கெட்டிக்காரர் என்று நினைத்துக் கொண்டு பிறரை ஏமாற்ற முயன்றால், வசமாக மாட்டிக் கொள்ள நேரும். நம்மை விடக் கெட்டிக்காரர்கள் உலகில் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.

நாம் ஒருவரிடம் உதவியை பெறும்போது நமது தேவையை மட்டும் கருதிக்கொண்டு உதவியைக் கேட்கக்கூடாது. நமக்கு உதவுபவர் எந்த தகுதியில் இருக்கிறார் என்பதையும் புரிந்து அவரிடம் உதவி பெற வேண்டும். உலகில் வாழும் அனைவரையும் தன் சகோதர, சகோதரிகளாக பாவிக்கிறவரால் தான் மனம் தளராமல் பிறருக்கு உதவி செய்ய முடியும்.

உழைத்து வாழும் போது தான் ஒரு மனிதனுக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்கிறது. உழைப்பை போல சிறந்த நண்பன் உலகில் எவரும் இல்லை என்றே சொல்லலாம். புன்முறுவல், துணிவு, நம்பிக்கை, நாணயம், ஒற்றுமை போன்றவைகளைக் கொண்டு சிறப்பாக தொழில் செய்பவர்களையே உலகம் வியந்து போற்றுகிறது. `எல்லாம் என் தலையெழுத்து’ என்று அழுது கொண்டு எந்த ஒரு தொழிலையும் செய்பவர்களை யாரும் விரும்புவதில்லை. அவர்கள் முன்னேறுவதுமில்லை. எப்படி இருந்தார்களோ, அப்படியே தான் இருப்பார்கள். நம்மிடம் எது இல்லையோ, அதை மற்றவர்களுக்குத் தர முடியாது. அழுது கொண்டே இருப்பவர்களால் மற்றவர்களுக்கு எந்த ஒரு மகிழ்ச்சியையும் தந்து விட முடியாது. அப்படி என்றால், மகிழ்ச்சியை யாரால் தர முடியும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுங்கள். மகிழ்ச்சியானவர்களால் இந்த உலகம் பெரும் மகிழ்ச்சியடைய வேண்டும்.

Offline Global Angel

Re: மகிழ்ச்சியை தருபவர் யார்?
« Reply #1 on: March 07, 2012, 03:47:14 AM »


ஆம் நமிடத்தில் மகிழ்ச்சியை வைத்து கொண்டு அதை தேடி திரியும் நிலையில் இருக்கின்றோம் .. நல்ல பதிவு யோசெப்
                    

Offline Yousuf

Re: மகிழ்ச்சியை தருபவர் யார்?
« Reply #2 on: March 07, 2012, 10:10:28 AM »
நன்றி ஏஞ்செல்!