பெண்ணே
உனக்கு தேவையானது
கண்ணீரைத் துடைக்கும் கரமல்ல
சூனிய நெற்றியில் திலகமிடும்
சிநேகித விரல்களே
உள்ளம் வெள்ளையாக இருக்கட்டும்
உடம்புக்கு எததற்கு
வெள்ளைச் சீலை
உதறி எறி
விழிகள் இருப்பது
கண்ணீர் வடிப்பதற்கல்ல
வாழ்க்கையை ரசிப்பதற்கே
உதிர்ந்து போன பூவுக்காக
நிரந்தரமாய் கிளையொன்று
கண்ணீரில் நனைவது
என்ன நியாயம்
உதிர்ந்து போனது
உனது இறகே
இறக்கை அல்ல
அதோ பார்
அகண்ட ஆகாயம்
பறப்பதற்கு பயப்படாதே
உன்
குங்குமத்தை அழித்து விடலாம்
வளையல்களை உடைத்து எறியலாம்
பூக்களை புறக்கணிக்கலாம்
ஆனால்
இளமை கொஞ்சும் உன்
இதயக் கனவுகளை
என்ன செய்யப் போகிறாய்
நீ இழந்தது
தாலிக் கயிரைத் தான்
கழுத்தை அல்ல
நீ இழந்து போனது
குங்குமத்தைத் தான்
நெற்றியை அல்ல
நீ இழந்து போனது
வளையல்களைத் தான்
கரங்களை அல்ல
இந்த விதவைக் கோலம்
உன் வாழ்க்கைப் பாதையின்
வளைவு மட்டுமே முடிவல்ல
அச்சத்தை விடவும்
வாழ்க்கை அழகானது
தீக்குச்சியை பற்றவை
தீக்குளிப்பதற்கல்ல - ஒரு
தீபத்தை ஏற்ற
பற்ற வைக்கும் தீக்குச்சியாய்
நீ பரிமாணம் எடுத்தால்
வெளிச்சங்கள் ஓடி வந்து
வெற்றி விழா எடுக்கும்
விழி விழித்தெழு