« Reply #24 on: June 03, 2016, 07:45:40 PM »
24] சிலுவைப்போர் தொடக்கம்
முகம்மது நபியின் வழித்தோன்றல்களான முதல் தலைமுறை கலீஃபாக்கள் எத்தனைக்கு எத்தனை மத மோதல்கள் உண்டாகிவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தார்களோ, அதே அளவு தீவிரத்துடன் மோதலில் காதல் கொண்ட சுல்தான்களும் பின்னாளில் தோன்ற ஆரம்பித்தார்கள். கி.பி. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அரேபியப் பாலைவனங்களில் சூடு அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது.
ஒரு புறம் திம்மிகள் என்று வருணிக்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீதான கட்டுப்பாடுகள் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்க, மறுபுறம் ஆட்சியாளர்களின் திறமையின்மை காரணமாக சாம்ராஜ்ஜிய நிர்வாகத்தில் ஏராளமான குளறுபடிகள் தோன்ற ஆரம்பித்தன. பிராந்தியவாரியாக ஆள்வதற்கென்று நியமிக்கப்பட்டிருந்த கவர்னர்களில் பலர், தமது பிராந்தியத்துக்குத் தாமே சுல்தான் என்பதாக நினைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு ஆடத் தொடங்கினார்கள். அவர்களைக் கண்காணிக்கவோ, நடவடிக்கை மேற்கொள்ளவோ செய்யாமல் சுல்தான்கள் எப்போதும் கொலு மண்டபத்தில் நாட்டியம் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. ஒரு வரியில் சொல்வதென்றால் அரசு இயந்திரம் சுத்தமாகப் பழுதாகிக் கிடந்த காலம் அது.
சுமார் முந்நூறு ஆண்டுகளாக எத்தனை தீவிரமுடனும் முனைப்புடனும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பி வந்தார்களோ, அதே வேகத்தில் பிரச்னைகள் அப்போது முளைக்கத் தொடங்கியிருந்தன.
வருடம் 1094. ஆட்சியில் இருந்த முக்ததிர் என்கிற கலீஃபா அப்போது காலமானார். அவரது மகன் அல் முஸ்தஸீர் பிலாஹ் என்பவர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். குணத்தில் பரம சாதுவான இந்த சுல்தானுக்கு அப்போது சாம்ராஜ்ஜியம் எதிர்நோக்கியிருந்த பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றி ஏதும் தெரியாது. ஒட்டுமொத்த அரேபியாவிலும் குறிப்பாக பாலஸ்தீன், சிரியா, ஜோர்டன், ஈரான் போன்ற இடங்களில் எந்தக் கணமும் வாள்கள் மோதும் சூழல் இருந்ததை அவர் அறியமாட்டார். அப்படியே போர் மேகம் சூழ்வதை அவர் ஒருவாறு யூகித்திருக்கலாம் என்றாலும் அதற்கான மூலகாரண புருஷர்கள் யூதர்கள் அல்ல; கிறிஸ்துவர்களாக இருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்த்திருக்கக் கூட முடியாது.
அத்தனை ரகசியமாகத்தான் ஆரம்பித்தது அது.
எப்படி அரேபிய நிலப்பரப்பு முழுவதும் முஸ்லிம்களால் ஆளப்படும் பிராந்தியமாக ஆகிப்போனதோ, அதேபோலத்தான் அன்றைக்கு ஐரோப்பிய நிலப்பரப்பின் பெரும்பான்மையான பகுதிகளைக் கிறிஸ்துவர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள். எந்த இயேசுநாதரின் முதல் தலைமுறைச் சீடர்களை ஓட ஓட விரட்டியும் கழுவில் ஏற்றியும் சிறையில் அடைத்து வாட்டியும் எக்காளம் செய்தார்களோ, அதே இயேசுவின் பரம பக்தர்களாக மாறிப்போயிருந்தார்கள் ஐரோப்பியர்கள்.
முகம்மது நபியைப்போலவே இயேசுவும் ஒரு நபி. இறைத்தூதர். தம் வாழ்நாளெல்லாம் இறைவனின் பெருமையை எடுத்துச் சொல்லி, தாம் பிறந்த யூத குலத்தவரை நல்வழிப்படுத்தப் பார்த்தார்.
ஆனால் ஐரோப்பியர்கள் இயேசுவையே கடவுளாகத் தொழத் தொடங்கியிருந்தார்கள். அவர் கடவுளின் மைந்தர்தான் என்பதில் அவர்களுக்குத் துளி சந்தேகமும் இல்லை. மூட நம்பிக்கைகள், சிறு தெய்வ வழிபாடுகள், மன்னரையே வணங்குதல் போன்ற வழக்கங்கள் மிகுந்திருந்த ஐரோப்பாவில் கிறிஸ்துவம் காலூன்றிய பிறகுதான் இறையச்சம் என்கிற ஒன்று உண்டாகி, மக்களிடையே ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை குறித்த சிந்தனையே தோன்ற ஆரம்பித்திருந்தது. மேலும் போப்பாண்டவர்கள் செல்வாக்குப் பெற்று அமைப்பு ரீதியில் கிறிஸ்துவம் மிகப் பலமானதொரு சக்தியாகவும் உருப்பெற்றிருந்த காலம் அது.
சரியாகப் பத்தாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிகள். ஐரோப்பாவில் கிறிஸ்துவத் திருச்சபைகள் மிகத்தீவிரமாக ஒரு பிரசாரத்தைத் தொடங்கின. "தேவனின் சாம்ராஜ்ஜியம் உலகில் வரப்போகிறது" என்பதுதான் அது.
இந்தப் பிரசாரத்தை இருவிதமாகப் பார்க்கலாம். உலகமெங்கும் இறையுணர்வு மேலோங்கி, பக்தி செழிக்கும்; கிறிஸ்துவம் வாழும் என்கிற சாதுவான அர்த்தம் ஒருபக்கம். உலகெங்கும் உள்ள பிற அரசுகள் மடிந்து, கிறிஸ்துவப் பேரரசொன்று உருவாகும் என்கிற அரசியல் சார்ந்த அர்த்தம் இன்னொரு பக்கம்.
இந்தப் பிரசாரத்தின் உடனடி விளைவு என்னவெனில், பல்லாயிரக்கணக்கான ஐரோப்பியர்கள், தமது தேசங்களிலிருந்து புனித யாத்திரையாக ஜெருசலேமுக்குக் கிளம்பினார்கள். இயேசு நாதர் வாழ்ந்து மரித்த புனித பூமிக்குத் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது பயணம் செய்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களை உந்தித்தள்ள, அலையலையாகக் கிறிஸ்துவர்கள் ஜெருசலேத்தை நோக்கி வரத்தொடங்கினார்கள்.
அப்படித் திருத்தல யாத்திரை நிமித்தம் அரேபிய மண் வழியே பயணம் செய்து பாலஸ்தீனுக்குள் வந்த கிறிஸ்துவர்கள், அரேபியா முழுவதும் கிறித்துவர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகவே நடத்தப்படுவதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாயினர். "திம்மிகள்" என்று அவர்கள் அழைக்கப்படுவது, அவர்களுக்கான சிறப்புச் சட்டதிட்டங்கள், கூடுதல் வரிச்சுமைகள் போன்றவற்றைக் கண்டு உள்ளம் கொதித்துப் போனார்கள். ஊருக்குத் திரும்பியதும் ஜெருசலேத்துக்குப் புனித யாத்திரை மேற்கொண்ட தமது அனுபவங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, கிறிஸ்துவர்கள் அரேபிய மண்ணில் மிகவும் அவதிக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்கிற விஷயத்தை மிகத் தீவிரமாகத் தம் மக்களிடையே தெரியப்படுத்த ஆரம்பித்தார்கள். ஏதாவது செய்து ஜெருசலேமை மீட்டே ஆகவேண்டும்; அரேபிய மண்ணில் கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியத்தின் கிளையை நிறுவியே தீரவேண்டும் என்று பேசத் தொடங்கினார்கள்.
நன்கு கவனிக்க வேண்டிய விஷயம் இது. ஆன்மிகச் சுற்றுலா வந்த ஐரோப்பியர்கள் மொத்தம் சில நூறு பேர்களோ, சில ஆயிரம் பேர்களோ அல்லர். கணக்கு வழக்கே சொல்லமுடியாத அளவுக்கு அவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள் அப்போது. ஒரு பேச்சுக்குப் பல்லாயிரக்கணக்கானோர் என்று சரித்திரம் இதனைக் குறிப்பிட்டாலும் எப்படியும் சுமார் ஐம்பதாண்டுகால இடைவெளியில் பத்திலிருந்து இருபது லட்சம் பேர் வந்திருக்கக் கூடும் என்று சில கிறிஸ்துவ சரித்திர ஆசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள். எந்த அரசியல் உந்துதலும் இல்லாமல் தாமாகவே ஜெருசலேத்துக்கு வந்தவர்கள் இவர்கள். இன்றைக்குப் போல் போக்குவரத்து வசதிகள் வளர்ச்சியடையாத அக்காலத்தில் பல மாதங்கள் தரை மார்க்கமாகப் பிரயாணம் செய்தே இவர்கள் பாலஸ்தீனை அடைந்திருக்க முடியும். வழி முழுக்க கலீஃபாக்களின் ஆட்சிக்குட்பட்ட இடங்கள்தாம். தாம் கண்ட காட்சிகளையும் கிறிஸ்துவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்கிற தகவலையும் இந்த ஐரோப்பிய யாத்ரீகர்கள் ஊர் திரும்பிப் போய் தத்தம் திருச்சபைகளில் தெரியப்படுத்தத் தொடங்கியதன் விளைவாகத்தான் ஒரு யுத்தத்துக்கான ஆயத்தங்கள் அங்கே ஆரம்பமாயின.
எப்படியாவது ஜெருசலேத்தை இஸ்லாமியர்களிடமிருந்து மீட்டே தீரவேண்டும். இயேசுவின் கல்லறை உள்ள பகுதி கிறிஸ்துவர்களின் நிலமாக மட்டுமே இருக்க வேண்டும். எனில், யுத்தத்தைத் தவிர வேறு வழியே இல்லை.
முதலில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்த திருச்சபைகள் கூடி இந்த விஷயத்தை விவாதித்தன. பிறகு அந்தந்த தேசத்து மன்னர்களின் கவனத்துக்கு இது கொண்டுசெல்லப்பட்டது. அதன்பின் அரசுத்தரப்புப் பிரதிநிதிகள் கலந்து விவாதித்தார்கள். யுத்தம் என்று ஆரம்பித்தால் எத்தனை காலம் பிடிக்கும், எத்தனை பொருட்செலவு ஏற்படும் என்பன போன்ற விஷயங்கள் ஆராயப்பட்டன. என்ன ஆனாலும் இதனைச் செய்தே தீரவேண்டும், ஒட்டுமொத்த கிறிஸ்துவ தேசங்களும் இந்தப் புனிதப்பணியில் பங்காற்றியே ஆகவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
ஆட்சியாளர்கள் ஒருபுறம் யோசித்துக்கொண்டிருந்தபோதே மறுபுறம் அன்றைய போப்பாண்டவராக இருந்த அர்பன் 2 என்பவர் (Pope Urban 2) எவ்வித யோசனைக்கும் அவசியமே இல்லை என்று தீர்மானித்து, இஸ்லாமியர்களுக்கு எதிரான யுத்தத்துக்குத் திரளும்படி ஒட்டுமொத்த கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் அழைப்பு விடுத்தார். இது நடந்தது, கி.பி. 1095-ம் ஆண்டு.
போப்பாண்டவரின் இந்தத் தன்னிச்சையான முடிவுக்கு இன்னொரு காரணமும் உண்டு. அவருக்கு ஒரு நிரூபணம் தேவையாக இருந்தது அப்போது. ஆட்சியாளர்கள் அல்ல; போப்பாண்டவர்தான் கிறிஸ்துவர்களின் ஒரே பெரிய தலைவர் என்று சொல்லப்பட்டு வந்தது எத்தனை தூரம் உண்மை என்பதைத் தமக்குத் தாமே நிரூபித்துப் பார்த்துக்கொள்ளவும் இதனை அவர் ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்ள எண்ணினார்.
அந்த ஆண்டு போப் இரண்டு மாபெரும் மாநாடுகளை நடத்தினார். முதல் மாநாடு, பிளாசெண்டியா (Placentia) என்ற இடத்தில் நடைபெற்றது. இரண்டாவது மாநாடு, அதே 1095-ம் ஆண்டு நவம்பரில் க்ளெர்மாண்ட் (Clermont) என்ற இடத்தில் கூடியது.
இந்த இரண்டு மாநாடுகளுக்கும் ஒட்டுமொத்த ஐரோப்பாவிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் வருகை தந்தார்கள். ஒவ்வொரு ஐரோப்பிய தேச அரசும் தமது பிரதிநிதிகள் அடங்கிய பெரிய பெரிய குழுக்களை அனுப்பிவைத்தன.
இந்த மாநாடுகளில் கிறிஸ்துவர்கள் ஜெருசலேத்தை மீட்டாக வேண்டிய அவசியம் குறித்தும் அரேபிய சாம்ராஜ்ஜியத்துடன் போரிடுவதனால் ஏற்படக்கூடிய சிக்கல்கள், இழப்புகள், தேவைகள் பற்றியும் மிக விரிவாக, பல்வேறு அமர்வுகளில் விவாதிக்கப்பட்டன.
ஆயிரம் பேர் வேண்டும், பத்தாயிரம் பேர் வேண்டும் என்று வீரர்களின் தேவையை அத்தனை துல்லியமாகச் சொல்லிவிடமுடியாது. எல்லா கிறிஸ்துவ தேசங்களும் போரிட வீரர்களை அனுப்பியாக வேண்டும். ஆனால் எத்தனை பேரை வலுக்கட்டாயமாக அனுப்பமுடியும்? மக்களே விரும்பி வந்து போரில் பங்குபெற்றால்தான் உண்டு. அப்படி தன் விருப்பமாகக் கிறிஸ்துவர்கள் இந்தப் போரில் பங்கு பெறுவதென்றால் அவர்களுக்குச் சில சலுகைகள் அளித்தாக வேண்டும். இந்த யுத்தத்தை அரசியலாகப் பார்க்காமல் ஒரு மதக்கடமையாகச் செய்கிறோம் என்கிற பெருமிதம் அவர்களுக்கு இருக்கவேண்டும். என்ன செய்யலாம்?
போப்பாண்டவர் சில சலுகைகளை அறிவித்தார். இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராகத் தொடங்கப்படவிருக்கிற இந்த யுத்தத்தில் பங்குபெறும் கிறிஸ்துவர்கள் அனைவரும் திருச்சபையின் நிரந்தரப் பாதுகாப்புக்கு உள்ளாவார்கள். அவர்களது உறவினர்கள், வம்சம், வீடு, நிலம் அனைத்தையும் பாதுகாத்துப் பராமரிக்கும் பொறுப்பு திருச்சபையினுடையது. ஒவ்வொரு வீரரின் குடும்பத்துக்கும் தேவையான பண உதவிகளுக்குத் திருச்சபையே பொறுப்பேற்கும். அதுவரை அவர்கள் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கியிருந்தாலும் பிரச்னையில்லை. அதைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை. வாங்கிய கடனைச் செலுத்தாமலிருப்பதற்காக அவர்கள் மீது யாரும் வழக்குத் தொடரக் கூடாது. அப்படியே தொடர்ந்தாலும் நீதி மன்றங்கள் அவற்றைத் தள்ளுபடி செய்துவிடும். அவர்கள் அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளில் பாக்கி வைத்திருப்பார்களேயானால் அந்த வரிகளும் உடனடியாகத் தள்ளுபடி செய்யப்படும். மதத்துக்காகப் போரிடப் புறப்படும் வீரர்களிடம் அரசாங்கம் வரி கேட்டு இம்சிக்கக் கூடாது.
இப்படிப்பட்ட லௌகீக உத்தரவாதங்கள் அளித்ததுடன் போப் நிறுத்தவில்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சொற்பொழிவை நிகழ்த்தினார். உணர்ச்சிக் கொந்தளிப்புகள் மிக்க அச்சொற்பொழிவில், இறைவன் பெயரால் அவர் அளித்த உத்தரவாதங்கள் இவை:
1. ஜெருசலேத்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த யுத்தத்தில் பங்கெடுக்கும் அத்தனை கிறிஸ்துவர்களின் பாவங்களும் உடனடியாக இறைவனால் மன்னிக்கப்பட்டுவிடும்.
2. இந்தப் போரில் உயிர் துறக்க நேரிடும் ஒவ்வொரு கிறிஸ்துவரும் சொர்க்கத்துக்குச் செல்லுவது உறுதி.
3. உலகில் கிறிஸ்துவம் தழைத்தோங்கும் வரை அவர்களின் பெயர் மாறாத புகழுடன் விளங்கும்.
இந்தச் சொற்பொழிவின் இறுதியில்தான் போப் அர்பன் 2, "கிறிஸ்துவர்களே, யுத்தத்துக்குத் திரண்டு வாருங்கள்" என்கிற அறிவிப்பை வெளியிட்டார். உணர்ச்சிவசப்பட்ட ஒட்டுமொத்த ஐரோப்பாவும் இந்த யுத்தத்தில் பங்கெடுக்க முன்வந்தது.
மத உணர்ச்சி, பொருளாதார லாபங்கள், அரசியல் நோக்கங்கள் என்கிற மூன்று காரணிகளை அடித்தளமாகக் கொண்டு பதினொன்றாம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பமான இந்த யுத்தம்தான் சரித்திரத்தில் சிலுவைப்போர் என்று வருணிக்கப்படுகிறது. சிலுவைப்போர் என்பது ஒரு மாதமோ, ஓர் ஆண்டோ, சில ஆண்டுகளோ நடந்த யுத்தமல்ல. கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகள் ஓயாது தொடர்ந்த பேரழிவு யுத்தம் அது.ஜெருசலேத்தை மையமாக வைத்து கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஆரம்பமான அந்த யுத்தம் மத்தியக் கிழக்கில் உருவாக்கிய பூகம்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
« Last Edit: June 08, 2016, 09:01:38 PM by Maran »
Logged