Author Topic: ~ 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ~  (Read 1793 times)

Offline MysteRy

முருங்கைப்பூ கூட்டு



தேவையானவை:

 முருங்கைப்பூ 1 கப், சின்ன வெங்காயம் 10, பச்சை மிளகாய் 2, பாசிப்பருப்பு கால் கப், மஞ்சள் தூள் 1 சிட்டிகை, உப்பு தேவைக்கேற்ப, சாம்பார்பொடி முக்கால் டீஸ்பூன்.

தாளிக்க:

 எண்ணெய் 2 டீஸ்பூன், நெய் அரை ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 1, கறிவேப்பிலை 1 ஆர்க்கு.

செய்முறை:

 முருங்கைப்பூவை சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் நெய்யை விட்டு, அதில் முருங்கைப்பூவைப் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நான்காக நறுக்கவும். பச்சை மிளகாயை வகுந்து கொள்ளவும். பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலாக வேக வைக்கவும். அதில் நெய்யில் வதக்கிய பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி சேர்த்து வேகவிட்டு, வெந்ததும் உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிப்பவற்றை போட்டு தாளித்து கூட்டில் சேர்க்கவும். அனைவருக்குமே ஆரோக்கியத்தைத் தரும் இந்தக் கூட்டு, பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.

Offline MysteRy

Re: ~ 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ~
« Reply #1 on: April 16, 2016, 10:11:28 PM »
கூழ் வற்றல் பொரியல்



தேவையானவை:

கூழ் வற்றல் 25, சின்ன வெங்காயம் 1 கப், உப்பு தேவைக்கேற்ப, கடுகு அரை டீஸ்பூன். தாளிக்க: உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 3, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, எண்ணெய் 4 டீஸ்பூன்.

செய்முறை:

 வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுடவைத்து, உப்பு சேர்த்து, அதில் கூழ்வற்றலையும் போட்டு வேகவைத்து நீரை வடித்து விடவும். பின் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து தாளிப்பவற்றை போட்டு, அவை பொரிந்து சிவந்ததும், வெங்காயம் கறிவேப்பிலையைப் போட்டு வதக்கி, வற்றலை அத்துடன் சேர்த்து கிளறி இறக்கவும்.

கூழ் வற்றல் செய்யும் முறை:

 5 கப் பச்சரிசியை ஊற வைத்து, கால் கப் உப்பு சேர்த்து, முதல் நாள் மாலை நன்கு நைஸாக ஆட்டி வைக்கவும். மறுநாள் 1 கப் அரிசிக்கு 5 கப் என்ற அளவில் தண்ணீர் வைத்து கொதிக்கும்போது, அரைத்த மாவைக் கலக்கி ஊற்றவும். மாவு நன்கு வெந்ததும், Ôரிப்பன் பக்கோடாÕ அச்சில் வைத்து பிழிந்து விடவும். மறுநாள் உரித்தெடுத்து, நறுக்கிக் காய வைத்து எடுத்து வைக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ~
« Reply #2 on: April 16, 2016, 10:13:03 PM »
கூழ் வற்றல் மசாலா



தேவையானவை:

கூழ் வற்றல் 25, பெரிய வெங்காயம் 2, தக்காளி 1, மிளகாய்தூள் ஒன்றேகால் டேபிள்ஸ்பூன், மல்லித் தூள் அரை டேபிள்ஸ்பூன், தூள் உப்பு தேவைக்கேற்ப, கரம் மசாலா தூள் கால் டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் 1 சிட்டிகை, சோம்பு அரை ஸ்பூன், எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் 1 டீஸ்பூன்.

செய்முறை:

 வெங்காயத்தை மெல்லிசாக நீளவாக்கிலும் தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக்கொள்ளவும். கூழுவற்றலை சுடுதண்ணீரில் வேகவைத்து, பின் உப்பு சேர்த்து 5 நிமிடங்களில் நீரை வடித்துவிடவும். வாணலியில் எண்ணெயைச் சுடவைத்து சோம்பு போட்டு தாளித்து பெரிய வெங்காயம் + தக்காளி சேர்த்து வதக்கியதும், அதில் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும். அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும். பொடிகளின் பச்சை வாடை போனதும் வற்றலை அத்துடன் சேர்த்து கிளறி இறக்கி, 1 ஸ்பூன் தக்காளி சாஸ் விட்டு கிளறி பரிமாறவும். அருமையான சைட் டிஷ் இது.

Offline MysteRy

Re: ~ 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ~
« Reply #3 on: April 16, 2016, 10:15:52 PM »
கூழ் வற்றல் குழம்பு



தேவையானவை:

கூழ் வற்றல் 20, பூண்டு 20 பல், சின்ன வெங்காயம் 15, தக்காளி 1, புளி எலுமிச்சை அளவு, உப்பு தேவைக்கேற்ப, சாம்பார்பொடி இரண்டரை ஸ்பூன்.

தாளிக்க:

 எண்ணெய் 7 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை.

செய்முறை:

 கூழ்வற்றலை கொதிக்கும் நீரில் போட்டு ஊறவைக்கவும் (அரை மணியிலிருந்து முக்கால் மணிநேரம்). வெங்காயம், பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மேலே கூறியுள்ள தாளிக்கும் பொருள்களை போட்டு, பொரிந்ததும் வெங்காயம்+பூண்டு சேர்த்து சற்று வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். புளியையும் உப்பையும் 6 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டி சாம்பார்பொடி சேர்த்து கலக்கி, வதங்கிய வெங்காயம் பூண்டு, தக்காளியுடன் ஊற்றவும். அது நன்கு கொதித்து காயில் உப்பு சார்ந்ததும், ஊறவைத்த வற்றலை அதில் இருக்கும் நீரை வடித்துவிட்டு குழம்பில் சேர்க்கவும். கால் மணிநேரம் கழித்து கெட்டியானதும் இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ~
« Reply #4 on: April 16, 2016, 10:17:48 PM »
முருங்கைப்பூ துவட்டல்



தேவையானவை:

புதிதாகப் பறித்த முருங்கைப்பூ (சுத்தம் செய்தது) 1 கப், தேங்காய் துருவல் 4 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் 10, பச்சைமிளகாய் 2. தாளிக்க: எண்ணெய் 2 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 1.

செய்முறை:

 முருங்கைப்பூவை அலசிப் பிழிந்துவைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாகக் கீறவும். காய்ந்த மிளகாயைக் கிள்ளி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிப்பவற்றை போட்டு, வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பிறகு முருங்கைப்பூவை நன்கு சேர்த்து வதக்கி, லேசாக தண்ணீர் தெளித்து வேகவிடவும். அத்துடன் உப்பு சேர்த்து, சேர்ந்தாற்போல வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். சூடாக சாப்பிட வெகு சுவையாக இருக்கும் இந்த துவட்டல். உடலுக்கு மிகவும் நல்லது.

Offline MysteRy

Re: ~ 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ~
« Reply #5 on: April 16, 2016, 10:20:50 PM »
தயிர் இட்லி



தேவையானவை:

இட்லி 6, தயிர் 2 கப், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2 (இரண்டாகக் கிள்ளியது), பெருங்காயம் 1 சிட்டிகை, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, கேரட் 1, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) 4 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் 3 டீஸ்பூன்.

செய்முறை:

 தயிரை, தண்ணீர் சேர்க்காமல் கடைந்து கொள்ளவும். அதில் உப்பு, மல்லித்தழை சேர்க்கவும். இட்லியை சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கவும். அதை தயிரில் ஊறவைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து தயிர் இட்லியில் விட்டு கலக்கிவிடவும். கேரட்டைத் துருவி மேலே தூவி, மல்லித்தழையையும் தூவி அலங்கரிக்கவும். இட்லி மிஞ்சினால் இனி கவலைப்பட வேண்டாம். தயிர் இட்லி ஆக்கிவிடுங்கள். பஞ்சாகப் பறந்துவிடும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ~
« Reply #6 on: April 16, 2016, 10:23:02 PM »
சேமியா பகளாபாத்



தேவையானவை:

சேமியா கால் கப், தயிர் (கடைந்தது) ஒன்றரை கப், உப்பு தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் 6, பச்சை மிளகாய் 1, இஞ்சி 1 கொட்டைப் பாக்கு அளவு.

தாளிக்க:

 எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் 1, வறுத்த முந்திரி 3, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, மல்லித்தழை (இலைகள் மட்டும் பொடியாக நறுக்கியது) 2 டீஸ்பூன்.

செய்முறை:

 ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, சேமியாவைக் கொட்டி, உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். (தண்ணீரை வடிக்க வேண்டாம்). வெங்காயத்தைப் பொடியாக, பச்சை மிளகாயை சிறு வட்ட வளையங்களாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, துருவிய இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, முந்திரிப் பருப்புடன் சேமியா கஞ்சியில் ஊற்றவும். பின் கடைந்த தயிரை அத்துடன் கலந்து, மல்லித்தழை தூவிப் பரிமாறவும். மாலை நேரத்துக்கான எளிய ஸ்நாக்ஸ் என்பதுடன், விருந்துகளிலும் சுவை கூட்டும் அயிட்டம் இது.

Offline MysteRy

Re: ~ 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ~
« Reply #7 on: April 16, 2016, 10:25:09 PM »
மாதுளை முத்து தயிர்ப்பச்சடி



தேவையானவை:

 மாதுளை முத்துக்கள் 1 கப், தயிர் ஒன்றரை கப், பெரிய வெங்காயம் சிறியதாக 1, பச்சை மிளகாய் 2, உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

 வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து பிசறி வைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து, அதில் தயிரை கலக்கவும். பரிமாறப்போகும் நேரத்தில் மாதுளை முத்துக்களையும் கலந்து பரிமாறவும். கண்ணைக் கவரும் நிறத்தில், பிரமாதமான சுவை கொண்ட தயிர் பச்சடி இது. செட்டிநாட்டுக் கல்யாண விருந்துகளில் பிரபலமானது.

Offline MysteRy

Re: ~ 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ~
« Reply #8 on: April 16, 2016, 10:27:29 PM »
பீட்ரூட் தயிர்பச்சடி



தேவையானவை:

பீட்ரூட் 1, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, தயிர் ஒன்றரை கப், உப்பு தேவைக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் 3 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை.

செய்முறை:

 பீட்ரூட்டை கழுவி, தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாகக் கீறவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைப் போட்டு, பொரிந்து சிவந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கிளறு கிளறவும். சில நிமிஷங்கள் அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, பீட்ரூட் வெந்ததும் உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி, ஆறியதும் தயிர் சேர்த்துக் கலந்து பரிமாறவும். கண்ணைக் கவரும் இந்த கலர்ஃபுல் தயிர்பச்சடி, குழந்தைகளின் ஃபேவரிட். கேரட்டையும் இதே முறையில் செய்யலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ~
« Reply #9 on: April 16, 2016, 10:29:19 PM »
வெண்டைக்காய் தயிர்பச்சடி



தேவையானவை:

வெண்டைக்காய் 6, பெரிய வெங்காயம் 1, தயிர் அரை கப், தேங்காய் துருவல் 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் 2, சீரகம் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 1, பெருங்காயம் 1 சிட்டிகை.

செய்முறை:

 வெண்டைக்காயை மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் லேசாக தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அதில் வெண்டைக்காயைப் போட்டுப் பொன் வறுவலாக வறுத்தெடுக்கவும். பின்னர் எண்ணெயைக் கொஞ்சம் வடித்துவிட்டு, மீதி இருக்கும் 2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதோடு அரைத்த விழுதையும் சேர்த்து, பச்சை வாடை போக வதங்கியதும் இறக்கி, ஆறியதும் தயிரில் கலக்கவும். வறுத்து வைத்திருக்கும் வெண்டைக்காய்களையும் கலந்து பரிமாறுங்கள். பரிமாறுவதற்கு முன், ஏற்கெனவே வறுத்து வைத்திருக்கும் வெண்டைக்காய் வில்லைகளை சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ~
« Reply #10 on: April 16, 2016, 10:30:59 PM »
தேங்காய் கறிவடகத் துவையல்

தேவையானவை:

தேங்காய் 1 மூடி (துருவிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் 4, புளி 1 சுளை, உப்பு தேவைக்கேற்ப, வறுத்த கறிவடகம் (வெங்காய வடகம்) 2, எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை.

செய்முறை:

 தேங்காய், புளி, உப்பு, மிளகாய் ஆகியவற்றை வதக்கி ஒன்றாக சேர்த்து விழுதாக அரைக்கவும். அதில் வறுத்த கறிவடகத்தைச் சேர்த்து அரைக்கவும். எடுப்பதற்கு முன், வாணலியில் எண்ணெயைச் சுடவைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் பொரித்து, அரைத்த விழுதில் கொட்டி இவற்றையும் சேர்த்து சற்று பெருபெருவென அரைத்தெடுக்கவும். வடக வாசனை தூக்கலாக இருக்கும் இந்தத் துவையல், கட்டுச்சாதத்துக்கு ஏற்ற ஜோடி. அம்மியில் அரைக்க, ருசி கூடும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ~
« Reply #11 on: April 16, 2016, 10:33:01 PM »
வெங்காயம், தக்காளி சட்னி



தேவையானவை:

காய்ந்த மிளகாய் 15, புளி 2 சுளை, உப்பு தேவைக்கேற்ப, தக்காளி 5, சின்ன வெங்காயம் 20, பூண்டு 4 பல், எண்ணெய் கால் கப், கடுகு 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை.

செய்முறை:

 வெறும் வாணலியில் மிளகாயை வறுத்து கரகரப்பாக (நைஸாக அரைப்பதற்கும் சற்று முன்னதாக), பொடி செய்து கொள்ளவும். தக்காளி, பூண்டு, சின்ன வெங்காயம் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பின் 2 டீஸ்பூன் எண்ணெயை வாணலியில் விட்டு தக்காளி + புளியை தண்ணீர் சத்தில்லாமல் வதக்கவும். மிக்ஸியில் இதை விழுதாக அடித்துக்கொள்ளவும் (இதுதான் தக்காளி ப்யூரி). பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளித்து, வெங்காயம் + பூண்டை போட்டு வதக்கவும். அத்துடன் பொடித்த மிளகாய் பொடியை தூவி கிளறி, தக்காளி ப்யூரியை ஊற்றி, உப்பு + கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சட்னி சிறிது கெட்டியாகி, எண்ணெய் மேலே மிதந்து வரும்போது இறக்கி பரிமாறவும். இட்லிக்கு எடுப்பான ஜோடி இந்த சட்னி.

Offline MysteRy

Re: ~ 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ~
« Reply #12 on: April 16, 2016, 10:34:41 PM »
உப்புப் புளி



தேவையானவை:

புளி 6 சுளை, உப்பு தேவைக்கேற்ப, காய்ந்த மிளகாய் 3 அல்லது 4, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, சின்ன வெங்காயம் 4, தக்காளி பாதி, சீரகம் அரை டீஸ்பூன்.

செய்முறை:

 தக்காளி, சின்ன வெங்காயம், கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உப்பு + புளியை 2 டம்ளர் நீரில் கரைத்துக்கொள்ளவும். அதில் காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிபோட்டு, அதையும் கரைத்து தோலை எடுத்துவிடவும். பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளியைப் போட்டு கசக்கிவிட்டு கறிவேப்பிலை தூவி, சீரகத்தையும் தேய்த்துப் போட்டு கலக்கி பரிமாறவும். செட்டிநாட்டின் மிக எளிமையான சைட் டிஷ் இது. இரண்டே நிமிஷத்தில் தயாரிக்கலாம். தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள உப்பு, உறைப்பாக நன்றாக இருக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ~
« Reply #13 on: April 16, 2016, 10:37:08 PM »
கோசுமல்லி



தேவையானவை:

பெரிய, விதையுள்ள கத்திரிக்காய் 2, சின்ன வெங்காயம் 15, பச்சை மிளகாய் 2, தக்காளி 1, உப்பு தேவைக்கேற்ப, புளி எலுமிச்சை அளவு, மல்லித்தழை சிறிதளவு,

தாளிக்க:

 கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் 2, எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறவும். தக்காளி பொடியாக நறுக்கவும். உப்பையும் புளியையும் 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். கத்திரிக்காயைக் காம்பை நீக்கி, நான்காக நறுக்கி, வேகவைத்துக் கொள்ளவும். வெந்ததும், தோல் நீக்கவும். கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரில், வெந்த கத்திரிக்காயைப் போட்டு, கையால் நன்கு கரைத்து, சக்கையைப் பிழிந்து எடுத்துவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிப்பவற்றைப் போட்டு சிவந்ததும், தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், கரைத்து வைத்திருக்கும் புளி + கத்திரிக்காய் கலவையை ஊற்றி, கொதித்ததும் மல்லித்தழையைத் தூவி இறக்கவும். விருப்பப்பட்டவர்கள், ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து, அதையும் கத்திரிக்காயோடு சேர்த்துப் பிசைந்துவிடலாம். இட்லி, தோசை, இடியாப்பத்துக்கு, செட்டிநாட்டில் மிகவும் பிரபலமான சைட் டிஷ் இது.

Offline MysteRy

Re: ~ 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ~
« Reply #14 on: April 16, 2016, 10:41:49 PM »
தெரக்கல்



தேவையானவை:

கத்திரிக்காய் 3, உருளைக்கிழங்கு (பெரியதாக) 1, தக்காளி 1, பெரிய வெங்காயம் 1.

அரைக்க:

 பச்சை மிளகாய் 4, காய்ந்த மிளகாய் 6, சோம்பு அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், தேங்காய் 1 மூடி, முந்திரிப்பருப்பு 2, பொட்டுக்கடலை 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

தாளிக்க:

 எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், மிளகு 10, பட்டை 1 சிறிய துண்டு.

செய்முறை:

 கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மூன்றையும் சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை, ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும். ஒரு வாணலியைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிப்பவற்றைப் போட்டுத் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய காய்கள், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின், அரைத்த விழுதையும் போட்டு, பச்சை வாசனை போகக் கிளறி, 4 அல்லது 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். சேர்ந்தாற்போல வந்ததும் இறக்கி பரிமாறவும். இதுதான் செட்டிநாட்டு தெரக்கல். இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டாவுக்கான நல்ல ஜோடி. (கேரட், பட்டாணி, பட்டர் பீன்ஸ் சேர்த்தும் செய்யலாம்).