Author Topic: ~ பேசிக் சர்வீசஸ் டீமேட் அக்கவுன்ட்: பங்குகளை வாங்கி வைக்க இனி பைசா செலவில்லை! ~  (Read 772 times)

Offline MysteRy

பேசிக் சர்வீசஸ் டீமேட் அக்கவுன்ட்: பங்குகளை வாங்கி வைக்க இனி பைசா செலவில்லை!

மு.சா.கெளதமன்நம்மில் பலருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆசைதான். ஆனால், அதற்கு ஒரு டீமேட் கணக்கு தொடங்க வேண்டும். தவிர, ஆண்டுக் கட்டணமாக சில நூறு ரூபாயை தரவேண்டுமே என்று நினைப்பதால், பலரும் டீமேட் கணக்கு தொடங்க தயங்குகிறார்கள். இப்படி தயங்கி நிற்பவர்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம்தான் பி.எஸ்.டி.ஏ என்கிற பேசிக் சர்வீஸ் டீமேட் அக்கவுன்ட் (Basic Services Demat account - BSDA). இந்தியாவில் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு செபியின் வழிகாட்டுதல்படி கொண்டு வரப்பட்டுள்ளது இந்தத் திட்டம். இந்தத் திட்டம் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார் இன்டகிரேட்டட் என்டர்பிரைசஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் வினோத்.



யாருக்கு இந்தக் கணக்கு?

1. முதல் முறை டீமேட் கணக்கை தொடங்குபவர்கள்

2. தங்கள் முதலீடுகளின் மதிப்பு ரூ.2 லட்சத்துக்கு கீழ் வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கை பி.எஸ்.டி.ஏ கணக்காக மாற்றிக் கொள்ளலாம். (தற்போது டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கை பி.எஸ்.டி.ஏ கணக்காக மாற்ற பி.எஸ்.டி.ஏ விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் டிபியிடம் சமர்ப்பிக்க வேண்டும்).

3. ஒருவர் பல டீமேட் கணக்குகள் வைத்திருந்தாலும், ஒரு டீமேட் கணக்கை மட்டுமே பி.எஸ்.டி.ஏ கணக்காக வைத்திருக்கலாம்.

4. டீமேட் கணக்கை ஜாயின்ட் ஹோல்டர்களாக வைத்திருந்தால், ஃபர்ஸ்ட் ஹோல்டர் பிஎஸ்டிஏ கணக்கை தொடங்க தகுதி உள்ளவராவார்.   

5. இந்தியாவில் செயல்படும் ஏதாவது ஒரு டிபியிடம் ஒரே ஒரு பிஎஸ்டிஏ கணக்கை மட்டுமே தொடங்க முடியும்.

6. இந்திய குடிமகன் மற்றும் என்.ஆர்.ஐ-களும் பிஎஸ்டிஏ கணக்கை தொடங்கலாம்.

7. இந்த பிஎஸ்டிஏ கணக்குக்கான தரகுக் கட்டணம் ஒவ்வொரு டிபிக்கும் மாறும். 

எப்படித் தொடங்குவது?

சாதாரண டீமேட் கணக்குகளை தொடங்குவதற்கு செய்யும் அதே நடைமுறைகளைத்தான் இதற்கும் பின்பற்ற வேண்டும். நமக்கு விருப்பமான டெபாசிட்டரி பார்டிசிபென்டிடம் பி.எஸ்.டி.ஏ  கணக்கை தொடங்குவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பான் அட்டையின் நகல், முகவரிச் சான்று நகல் போன்றவைகளை சுயகையொப்பமிட்டு விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் உள்ள காசோலையில் ஒரு ரத்து செய்த காசோலையுடன் (Cancelled Cheque Leaf) கொடுக்க வேண்டும்.



கட்டணங்கள்!

ரூ.50,000 மதிப்புக்கு கீழ் உள்ள பி.எஸ்.டி.ஏ கணக்குகளுக்கு ஆண்டு பராமரிப்புக் கட்டணம் கிடையாது. ரூ.50,001 முதல் ரூ.2,00,000 மதிப்பிலான பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்  உள்ள கணக்குக்கு ஆண்டு பராமரிப்புக் கட்டணம் ரூ.100 மட்டுமே.

நம் பிஎஸ்டிஏ கணக்கில் வைத்திருக்கும் பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களின் மதிப்பு ரூ.2 லட்சத்தைவிட அதிகமாகும்போது டிபிக்கள் சாதாரண டீமேட் கணக்குகளுக்கு வசூலிக்கும் கட்டணங்களை பிஎஸ்டிஏ கணக்குகளுக்கு வசூலிக்கலாம் என்று செபி குறிப்பிட்டிருக்கிறது.

சேவைகள்!

பி.எஸ்.டி.ஏ டீமேட் கணக்குக்கும், சாதாரண டீமேட் கணக்குக்கும் வழங்கப்படும் சேவைகளில் எந்த பெரிய வித்தியாசமும் கிடையாது. உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, பிஎஸ்டிஏ கணக்கில் பங்குகள் அல்லது ஃபண்ட் யூனிட்கள் வாங்கப்பட்டால், அதற்கான எஸ்.எம்.எஸ் அலெர்ட் வரும். பி.எஸ்.டி.ஏ கணக்கில் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருந்தால், மாதாமாதம் ஒரு ஸ்டேட்மென்ட் அனுப்பி வைக்கப்படும். பரிவர்த்தனை ஏதும் நடைபெறவில்லை என்றால் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஸ்டேட்மென்ட் அனுப்பி வைக்கப்படும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஸ்டேட்மென்ட் வேண்டும் என்றால் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஃபிஸிக்கல் ஸ்டேட்மென்ட் வேண்டும் என்றால் டெபாசிட்டரி பார்டிசிபென்ட்களுக்கு தகுந்தாற் போல கட்டணங்களோடு வழங்கப்படும்’’ என்றார் அவர்.

பங்குகளையும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களையும் பைசா செலவில்லாமல் வாங்கி வைக்கலாம் என்பதால், மக்களும் இந்த சேவையை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புரோக்கிங் நிறுவனங்களும் இந்த திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும்!