Author Topic: ~ ஹெல்த்தி ஈஸி சமையல் பேச்சிலர் ரெசிப்பிகள் ~  (Read 1735 times)

Offline MysteRy

சிக்கன் ஃப்ரை



தேவையானவை:

 சிக்கன் - கால் கிலோ, மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், தனியா தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை:

சிக்கனை நன்கு கழுவி, துண்டுகளாக நறுக்கவும். கொடுத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டுப் பிசறிக்கொள்ளவும். கடாயைக் காயவைத்து, பிசறிய கலவையைப் போட்டு, நன்கு கிளறவும். கிளறும்போது, தண்ணீர் விட்டுக்கொண்டு வரவேண்டும். அடுப்பை ‘சிம்’மில்வைத்து, கடாயை மூடிவிட்டால், அந்தத் தண்ணீரிலேயே சிக்கன் வேகும். இடையிடையே மூடியைத் திறந்து நன்கு கிளறவேண்டும். சிக்கன் வெந்துவிட்டதா என்பதை, ஒரு துண்டு சிக்கனை எடுத்து அழுத்திப்பார்த்தால் தெரியும். பஞ்சு போல வெந்திருக்கும்போது, நன்கு கிளறவேண்டும். கறிவேப்பிலையைக் கிள்ளிப்போட்டு இறக்கவேண்டும்.

குறிப்பு:

அடுப்பை ‘சிம்’மிலேயே வைத்துத்தான் இதைச் செய்யவேண்டும் என்பதால், கொஞ்சம் பொறுமையும் கவனமும் தேவை.

பலன்கள்:

 தாது உப்புக்கள், புரதம், கொழுப்பு சத்துக்கள் கிடைக்கும். உடலுக்குத் தேவையான ஆற்றல் உடனே கிடைக்கும். தினமும் சாப்பிட வேண்டாம்.

Offline MysteRy

முட்டைத் தொக்கு



தேவையானவை:

அவித்த முட்டை - 2, பெரிய வெங்காயம் - 2, பூண்டு - 5 பல், காய்ந்த மிளகாய் - 3, உப்பு, மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை:

உரித்த பூண்டு, நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், உப்பு ஆகியவற்றை அரைக்கவும். அவித்த முட்டைகளைக் கீறி எடுத்துக்கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, சூடானதும், அரைத்த விழுதைப் போட்டு, நன்கு சுருள வதக்கி, பச்சை வாசனை போனதும், கீறிய முட்டைகளைப் போட்டு, இரண்டு முறை பிரட்டிவிட்டு, இறக்கிவிடலாம். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் சைடுடிஷ்ஷாக சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

குறிப்பு:

முட்டைகளை வேகப்போடும்போது, லேசாக உப்பு சேர்த்து வேகவிட்டால் ஓடு சுலபமாகக் கழன்று வந்துவிடும்.

பலன்கள்:

முட்டையில் உள்ள புரதம் மற்ற உணவுகளிடமிருந்து கிடைப்பதைவிட சிறந்தது. உடலுக்குத் தேவையான அனைத்து வித அமினோ அமிலங்களையும் தருகிறது. அதிகமாக வேக வைக்காமல், மிதமாக வேகவைத்து சாப்பிட்டால், 100 சதவிகிதம் செரிமானம் ஆகும். புரதம், ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, வைட்டமின் பி12, காப்பர் போன்ற அனைத்து வகைச் சத்துக்களும் இதில் கிடைக்கும். தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.