Author Topic: ~ 30 வகை தக்காளி ரெசிப்பி! ~  (Read 1824 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை தக்காளி ரெசிப்பி! ~
« Reply #15 on: February 06, 2015, 01:29:31 PM »
தக்காளி கொத்சு



தேவையானவை:

தக்காளி-  200 கிராம், பச்சை மிளகாய்-  3, மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, புளி  கொட்டைப்பாக்கு அளவு, அரிசி மாவு  ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம்-  50 கிராம், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு  தலா ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய்  ஒன்று, பெருங்காயத்தூள்  ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை  சிறிதளவு, எண்ணெய்  3 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப,

செய்முறை:

புளியை நீர் விட்டு கரைத்து (இரு டம்ளர் வருமாறு), அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மேலும் வதக்கி, கொதிக்கும் புளிக்கரைசலில் சேர்க்கவும். எல்லாமாக வெந்து சேர்ந்து வரும்போது, அரிசி மாவில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை தக்காளி ரெசிப்பி! ~
« Reply #16 on: February 06, 2015, 01:30:56 PM »
தக்காளி பூரி



தேவையானவை:

கோதுமை மாவு  ஒரு கப், கெட்டியான நாட்டுத் தக்காளி-  3, பச்சை மிளகாய் - 2, ஓமம்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப, எண்ணெய்  பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை:

தக்காளியையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் நீர் விடாமல் அரைத்து உப்பு, ஓமம் சேர்க்கவும். கோதுமை மாவில் நீருக்குப் பதிலாக இதனை ஊற்றிப் பிசையவும். 2 டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெயை இந்த மாவில் ஊற்றிப் பிசைந்து, மாவை பூரிகளாகத் திரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கலர்ஃபுல்லான இந்த பூரி குழந்தைகளை மிகவும் கவரும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை தக்காளி ரெசிப்பி! ~
« Reply #17 on: February 06, 2015, 01:32:24 PM »
தக்காளி பாத்



தேவையானவை:

தக்காளி - 200 கிராம், பெரிய வெங்காயம்-  2, பச்சை மிளகாய்-  3, பூண்டு-  3 பல், இஞ்சி  சிறிய துண்டு (தோல் சீவவும்), மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை,  நறுக்கிய புதினா, நறுக்கிய கொத்தமல்லித்தழை  தலா- 3 டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள்  ஒரு டீஸ்பூன், உதிர் உதிராக வடித்த சாதம்  2 கப், எண்ணெய்  3 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:

அடிகனமான வாணலியில் எண்ணெய் விட்டு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, பூண்டு, இஞ்சியை நசுக்கிச் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்த்து வெந்து வந்ததும் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கி, கரம் மசாலா சேர்த்து இறக்கிவிடவும். உதிராக வடித்த சாதத்தை அதில் சேர்த்துக் கிளறினால்... தக்காளி பாத் தயார்.

Offline MysteRy

Re: ~ 30 வகை தக்காளி ரெசிப்பி! ~
« Reply #18 on: February 06, 2015, 01:33:52 PM »
தக்காளி ஊறுகாய்



தேவையானவை:

நன்கு பழுத்த நாட்டுத் தக்காளி  ஒரு கிலோ, பூண்டு-  100 கிராம், காய்ந்த மிளகாய்-  15, மஞ்சள்தூள்  ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம்-  3 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 150 கிராம், கடுகு-  2 டேபிள்ஸ்பூன், வெந்தயம்  ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள்  ஒரு டீஸ்பூன், கல் உப்பு  தேவைக்கேற்ப,

செய்முறை:

வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய், வெந்தயம், கடுகை தனித்தனியாக வறுத்து, இறுதியில் உப்பையும் வறுக்கவும். மிக்ஸியில் இவற்றைப் பொடியாக்கவும். அடி கனமான வாணலியில் 100 கிராம் எண்ணெய் விட்டு, தோலுரித்த பூண்டை முழுதாக வதக்கி,     பின்னர் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து (நீர் விடாமல்) வதக்கி, மஞ்சள்தூள், வெல்லம் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்த்து சுருண்டு வரும்போது பொடித்த பொடியைத் தூவி, பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் மீதியுள்ள 50 கிராம் நல்லெண்ணெயை  ஊற்றிக் கிளறி இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை தக்காளி ரெசிப்பி! ~
« Reply #19 on: February 06, 2015, 01:35:23 PM »
தக்காளி  பூண்டு ரசம்



தேவையானவை:

தக்காளி - 2, பூண்டு-  4 பல், மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, ரசப்பொடி  ஒரு டேபிள்ஸ்பூன், புளி  சிறிய நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய்  ஒன்று, வேகவைத்த துவரம்பருப்பு  -3 டேபிள்ஸ்பூன், கடுகு  சிறிதளவு,  காய்ந்த மிளகாய்  ஒன்று, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை  சிறிதளவு, எண்ணெய்  2 டீஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:

புளியைக் கரைத்து (ஒன்றரை டம்ளர் வருமாறு), வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு சேர்த்துக் கிளறி, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, ரசப்பொடியை போட்டு ஒரு புரட்டு புரட்டி, கொதிக்கும் புளிக் கரைசலில் ஊற்றவும். இரண்டு கொதி வந்ததும் வேகவைத்த துவரம்பருப்பை அரை டம்ளர் நீர் விட்டுக் கரைத்துச் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து இரண்டு கொதி வந்ததும், மீதியுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும். பின்னர் இறக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை தக்காளி ரெசிப்பி! ~
« Reply #20 on: February 06, 2015, 01:36:53 PM »
தக்காளி தோசை



தேவையானவை:

நன்கு பழுத்த தக்காளி - 3, புழுங்கல் அரிசி  ஒரு கப், பச்சரிசி  கால் கப், உளுத்தம்பருப்பு-  3 டேபிள்ஸ்பூன், சீரகம்  ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை-  2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள்   ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய்  -5 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நீர் விட்டு அரைக்கவும். பாதியளவு அரைபட்டதும் நறுக்கிய தக்காளித் துண்டுகளையும் சேர்த்து எல்லாவற்றையும் நைஸாக அரைத்து, சீரகம், பெருங்காயத்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலக்கவும். மாவை தவாவில் தோசையாக ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
சிவந்த நிறத்தில் புளிப்பும், காரமுமாக வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த தோசைக்குத் தொட்டுக்கொள்ள கொத்தமல்லி சட்னி ஏற்றது.

Offline MysteRy

Re: ~ 30 வகை தக்காளி ரெசிப்பி! ~
« Reply #21 on: February 06, 2015, 01:38:15 PM »
தக்காளி  வெங்காயசட்னி



தேவையானவை:

நாட்டுத் தக்காளி-  200 கிராம், பெரிய வெங்காயம் - 2, காய்ந்த மிளகாய்-  5, கடுகு  ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு, பெருங்காயத்தூள்  அரை டீஸ்பூன், எண்ணெய்  3 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கிளறி, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து  வதக்கி, சிறிது நேரம் ஆறவிட்டு உப்பு சேர்ந்து நைஸாக அரைக்கவும். கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும்.
இது... இட்லி, தோசை, சப்பாதிக்கு தொட்டுச் சாப்பிட ஏற்றது.

Offline MysteRy

Re: ~ 30 வகை தக்காளி ரெசிப்பி! ~
« Reply #22 on: February 06, 2015, 01:40:09 PM »
தக்காளி காரக்குழம்பு



தேவையானவை:

பெங்களூர் தக்காளி - 3, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 5 பல், மணத்தக்காளி வற்றல் - 2 டேபிள்ஸ்பூன், புளி  நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள்  ஒன்றரை டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, துருவிய வெல்லம்  ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.

தாளிக்க:

எண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு  ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  ஒரு ஆர்க்கு, காய்ந்த மிளகாய்  ஒன்று, உதிர்த்த வெங்காய வடகம்-  2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

புளியைக் கரைத்து (2 டம்ளர் வருமாறு), வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் 5 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, கொதிக்கும் புளிக்கரைசலில் சேர்க்கவும். பிறகு நறுக்கிய தக்காளியை வதக்கி, மணத்தக்காளி வற்றல் சேர்த்து வதக்கி, கொதிக்கும் கரைசலில் சேர்க்கவும். வெல்லமும் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்த்து குழம்பு பதம் வந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால், கொத்த மல்லித்தழை சேர்க்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை தக்காளி ரெசிப்பி! ~
« Reply #23 on: February 06, 2015, 01:43:10 PM »
தக்காளிக்காய் கூட்டு



தேவையானவை:

தக்காளிக்காய்  கால் கிலோ, பயத்தம்பருப்பு  6 -டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள்  ஒன்றரை டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, உப்பு  தேவைக்கேற்ப.

அரைத்துக்கொள்ள:

தேங்காய்த் துருவல்  கால் கப், சீரகம்  ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  5 இதழ்கள், நறுக்கிய கொத்தமல்லித்தழை  ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:

தேங்காய் எண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய்  ஒன்று, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு  ஒரு டீஸ்பூன்..

செய்முறை:

பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பை சேர்த்து வேகவைக்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை விழுதாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தக்காளிக்காயை நறுக்கிப் போட்டு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு டம்ளர் நீர் விட்டு வேகவிடவும். பின்னர், வேகவைத்த பருப்புகளை இதனுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்த விழுதை சேர்த்து, தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை தக்காளி ரெசிப்பி! ~
« Reply #24 on: February 06, 2015, 01:44:51 PM »
தக்காளி  பச்சைப் பட்டாணி புலாவ்



தேவையானவை:

பெங்களூர் தக்காளி - 3, ஊறவைத்த பச்சைப் பட்டாணி  கால் கப், பாசுமதி அரிசி - 2 கப், மஞ்சள்தூள்   ஒரு சிட்டிகை, கரம்மசாலாத்தூள்  ஒரு சிட்டிகை, தயிர் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள்  ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி  பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,  தேங்காய்த் துருவல்  அரை கப், புதினா, கொத்தமல்லித்தழை  தலா- 3 டேபிள்ஸ்பூன், ஊறவைத்த முந்திரி-  4, பச்சை மிளகாய் - 3, பெரிய வெங்காயம்  ஒன்று, எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:

வெறும் வாணலியில் பாசுமதி அரிசியை லேசாக வறுக்கவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரி, புதினா, கொத்தமல்லி, தக்காளி ஆகியவற்றை மிக்ஸியில் கெட்டியான விழுதாக அரைக்கவும். குக்கரில் 6 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி... இஞ்சி  பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, அரைத்து வைத்த  விழுதினை சேர்த்து வதக்கவும். இதில் 3 கப் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து, பட்டாணி, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து, மிளகாய்த்தூள், தயிர் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு, குக்கரை மூடி வெயிட் போட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும் குக்கரைத் திறந்து நன்றாகக் கலந்துவிடவும்.
இதற்குத் தக்காளி ராய்த்தா சரியான சைட்டிஷ்.

Offline MysteRy

Re: ~ 30 வகை தக்காளி ரெசிப்பி! ~
« Reply #25 on: February 06, 2015, 01:46:08 PM »
மினிட்ஸ் தக்காளி சட்னி



தேவையானவை:

பெங்களூர் தக்காளி - 4, சாம்பார் பொடி-2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), நறுக்கிய கொத்த மல்லித்தழை-  2 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப, நல்லெண்ணெய்-  3 டேபிள்ஸ்பூன், கடுகு  ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள்  சிட்டிகை, கறிவேப்பிலை  ஒரு ஆர்க்கு.

செய்முறை:

தக்காளியைப் பொடியாக நறுக்கி... உப்பு, சாம்பார் பொடி சேர்த்து, (நீர் விடாமல்) அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலைத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். இதை இட்லி, பொங்கல், உப்புமா போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை தக்காளி ரெசிப்பி! ~
« Reply #26 on: February 06, 2015, 01:48:02 PM »
தக்காளி காய்  கனி சப்ஜி



தேவையானவை:

 தக்காளிக்காய்-  4, நாட்டுத் தக்காளிப் பழம்-  2, பெரிய வெங்காயம்  ஒன்று, ஊற வைத்து, வேகவைத்த கறுப்புக் கொண்டைக்கடலை  கால் கப், பூண்டு-  3 பல், மிளகாய்த்தூள்  ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), கொத்தமல்லித்தழை  சிறிதளவு, கரம்மசாலாத்தூள்  ஒரு டீஸ்பூன், எண்ணெய்-  2 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.

அரைத்துக்கொள்ள:

பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல்  அரை கப், இஞ்சி  ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்), பொட்டுக்கடலை  -2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

அரைக்க கொடுத்த வற்றை விழுதாக அரைக்கவும். வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, நீளவாக்கில் நறுக்கிய தக்காளிக்காய், தக்காளிப் பழம், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு வேகவிடவும். பாதி வெந்ததும், கொண்டைக்கடலையை சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் அரைத்து வைத்த விழுதைச் சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி கரம்மசாலா சேர்த்து கலந்துவிடவும். கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். 
இது சப்பாத்தி, நாண், பரோட்டா முதலியவற்றுக்கு சிறந்த சைட்டிஷ்.

Offline MysteRy

Re: ~ 30 வகை தக்காளி ரெசிப்பி! ~
« Reply #27 on: February 06, 2015, 01:49:33 PM »
தக்காளி ஜாம்



தேவையானவை:

நன்கு பழுத்த பெங்களூர் தக்காளி-  6, சர்க்கரை-  100 கிராம்.

செய்முறை:

வாயகன்ற பாத்திரத்தில் பழங்கள் மூழ்கும் அளவு தண்ணீரைக் கொதிக்கவைத்து, தக்காளிப் பழங்களை முழுதாக அதில் போடவும். தோல் பிரிய ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைத்துவிடவும். ஆறியதும் கைகளால் தோலை உரித்து, சர்க்கரை சேர்த்து நீர் விடாமல் மிக்ஸியில் அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். கெட்டிப்பட ஆரம்பித்ததும் இறக்கவும். ஆறிய தும் ஃப்ரிட்ஜில் வைத்தால் 4, 5 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை தக்காளி ரெசிப்பி! ~
« Reply #28 on: February 06, 2015, 01:52:13 PM »
தக்காளிக்காய் அரைத்து விட்ட சாம்பார்



தேவையானவை:

தக்காளிக்காய் - 150 கிராம், சின்ன வெங்காயம்-  10,  மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, வேகவைத்த துவரம்பருப்பு  கால் கப், புளி  கொட்டைப்பாக்கு அளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை-  2 டேபிள்ஸ்பூன், எண்ணெய்-  2 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.

வறுத்து அரைக்க:

கடலைப் பருப்பு-  2 டேபிள்ஸ்பூன், தனியா - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, தேங்காய்த் துருவல்-  4 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க:

கடுகு  ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள்  அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய்  சிறிதளவு.

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து விழுதாக அரைக்கவும். புளியை நீர் விட்டு கரைத்து (ஒரு டம்ளர் வருமாறு), அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, சின்ன வெங்காயத்தை வதக்கி கொதிக்கும் புளிக்கரைசலில் ஊற்றவும். வெங்காயம் பாதியளவு வெந்ததும், நீளவாக்கில் நறுக்கிய தக்காளிக்காயை வதக்கி சேர்க்கவும். தக்காளிக்காய் விரைவிலேயே வெந்துவிடும். பிறகு, வேகவைத்த துவரம்பருப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து, எல்லாமாகச் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து... கொத்தமல்லித்தழை தூவவும்.

குறிப்பு:

தக்காளிக்காயில் புளிப்பு உள்ளதால் புளியை கொஞ்சமாகச் சேர்த்தால் போதும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை தக்காளி ரெசிப்பி! ~
« Reply #29 on: February 06, 2015, 01:53:57 PM »
தக்காளி சாலட்



தேவையானவை:

பெங்களூர் தக்காளிப்பழம் - 3, பெரிய வெங்காயம் - 2, சிறிய வெள்ளரிக்காய்  ஒன்று, மிளகுப்பொடி - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு  ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2  டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:

வெள்ளரி, தக்காளிப்பழம், வெங்காயம் ஆகியவற்றை வில்லைகளாக நறுக்கி... உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து, நறுக்கிய கொத்த மல்லித்தழை சேர்க்கவும்.