Author Topic: ~ 30 வகை பியூட்டி - ஹெல்த் ரெசிப்பி! ~  (Read 2298 times)

Offline MysteRy

ஆப்பிள்  தக்காளி ஜூஸ்



தேவையானவை:

நன்கு பழுத்த சிவப்பு தக்காளி - 3, ஆப்பிள் - 1 (சிறியது), சர்க்கரை  தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், மிளகுத்தூள், உப்பு  தலா ஒரு சிட்டிகை.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒன்று சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து (விருப்பப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்), வடிகட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும். குளிர்ச்சி தேவையில்லை என்றால், அப்படியே அருந்தலாம்.

பலன்:

விட்டமின் உட்பட பல்வேறு சத்துக்களைத் தரும்.

Offline MysteRy

பீட்ரூட் சப்பாத்தி



தேவையானவை:

கோதுமை மாவு -  2 கப், நெய்  ஒரு டேபிள்ஸ்பூன்,  பீட்ரூட்  ஒன்று (மீடியம் சைஸ்), பெருஞ்சீரகம், மிளகாய்த்தூள்  தலா ஒரு டீஸ்பூன், பூண்டு -  3 பல், எண் ணெய், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

பீட்ரூட், பெருஞ்சீரகம், மிளகாய்த்தூள், பூண்டு, உப்பு ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். கோதுமை மாவுடன் வடிகட்டிய பீட்ரூட் சாறு, நெய், உப்பு சேர்த்து (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து) நன்கு பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக திரட்டவும். அடுப் பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கி, சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

பலன்:

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

Offline MysteRy

ஓட்ஸ்  ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக்



தேவையானவை:

ஓட்ஸ்  அரை கப், ஸ்ட்ராபெர்ரி - 8, பால்  அரை கப், சர்க்கரை  தேவையான அளவு, பொடியாக நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸ் (பாதாம், முந்திரி, பிஸ்தா)  சிறிதளவு.

செய்முறை:

கடாயில் ஓட்ஸை லேசாக வறுக்கவும். மிக்ஸியில் ஓட்ஸ், சர்க்கரை, பால், ஸ்ட்ராபெர்ரி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, டிரை ஃப்ரூட்ஸ் தூவி, ஃப்ரிட்ஜில் வைத்து  எடுத்து, பரிமாறவும். குளிர்ச்சி தேவையில்லை என்றால், அப்படியே அருந்தலாம்.

பலன்:

சருமத்துக்கு பொலிவு தரும்.

Offline MysteRy

ஆரஞ்சு புலாவ்



தேவையானவை:

பாசுமதி அரிசி - 2 கப் ஆரஞ்சு சாறு - 2 கப், பட்டை, லவங்கம்  தலா ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன், வேகவைத்த பச்சைப் பட்டாணி  கால் கப், பச்சை மிளகாய் - 2, முந்திரி - 6, நெய், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

பாசுமதி அரிசியை நன்கு கழுவி ஆரஞ்சு சாறு, ஒன்றரை கப் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் பட்டை, லவங்கம், தேவையான உப்பு சேர்த்து, ஊறவைத்த அரிசியை நீருடன்  சேர்த்துக் கலந்து மூடி, ஒரு விசில் வந்ததும் அடுப்பை 'சிம்’மில் வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் முந்திரி சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், வேகவைத்த பச்சைப் பட்டாணி, சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கி, வெந்த சாதத்துடன் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்:

 உடல் சூட்டைத் தணிக்கும்.

Offline MysteRy

கோங்கூரா தொக்கு



தேவையானவை:

கோங்கூரா (புளிச்சகீரை)  ஒரு கட்டு, புளி  எலுமிச்சை அளவு, வெல்லம்  சிறிய துண்டு, கடுகு (தாளிக்க)  ஒரு டீஸ்பூன், பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கவும்), கடுகு (அரைக்க)  ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம்  ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 10, எண்ணெய், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

 புளிச்சகீரையை இலைகளாக கிள்ளி, கழுவித் துடைத்து துணியில் போட்டு ஒரு மணி நேரம் காயவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்தெடுக்கவும். புளிச்சக்கீரையை எண்ணெயில் வதக்கவும். இவற்றுடன் புளி (புளியை கொஞ்சம் கொதிநீரில் சிறிது நேரம் ஊறவைத்து எடுத்தும் சேர்க்கலாம்), உப்பு, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கி அரைத்து வைத்த கலவையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

பலன்:

உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து இதில் கிடைக்கும்.

Offline MysteRy

கார்ன்ஃப்ளேக்ஸ் பால்ஸ்



தேவையானவை:

கார்ன்ஃப்ளேக்ஸ்  ஒரு கப் (கொரகொரப்பாக பொடிக்கவும்), தேன்  தேவையான அளவு, டிரை ஃப்ரூட்ஸ்  அரை கப் (முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா), வெண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

ஒரு வாணலியில், வெண்ணெய் சேர்த்து, உருகியதும் துண்டுகளாக்கிய டிரை ஃப்ரூட்ஸ், தேன் சேர்க்கவும். அடுப்பை அணத்து, பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கலந்து, உருண்டைகளாக பிடிக்கவும்.

பலன்:

உடல் இளைக்க உதவும்.

Offline MysteRy

மிளகு  சீரக அடை



தேவையானவை:

பச்சரிசி மாவு  ஒரு கப், மிளகு, சீரகம் (சேர்த்து)  ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம்  ஒன்று, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை  சிறிதளவு, எண்ணெய், உப்பு   தேவையான அளவு.

செய்முறை:

மிளகு  சீரகத்தை கொரகொரப்பாக பொடிக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, பொடித்த மிளகு  சீரகம், உப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து, தண்ணீர் தெளித்துக் கலக்கவும். மாவை வாழை இலை (அ) பிளாஸ்டிக் பேப்பரில் மெலிதான அடையாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேகவிடவும்.

பலன்:

உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கும்.

Offline MysteRy

இஞ்சி மெதுபக்கோடா



தேவையானவை:

இஞ்சி  ஒரு துண்டு, பச்சை மிளகாய்  - 2, கடலை மாவு  ஒரு கப், அரிசி மாவு  அரை கப், பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன், ஆப்பசோடா  ஒரு சிட்டிகை, வெங்காயம்  ஒன்று (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை  ஒரு ஆர்க்கு,  எண்ணெய், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த கலவையுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், ஆப்பசோடா, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பலன்:

 ஜீரண சக்தியை அதிகரிக்கும். ரத்த சோகையை கட்டுப்படுத்தும்.

Offline MysteRy

வெஜிடபிள் ஜாம்



தேவையானவை:

கேரட் - 2, பீட்ரூட்  ஒன்று (துருவிக்கொள்ளவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), சர்க்கரை  தேவையான அளவு, சிட்ரிக் ஆசிட்  சிறிதளவு.

செய்முறை:

காய்கறிகளை மிக்ஸியில் போட்டு, கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையில் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் சேர்த்து, அடுப்பில் வைத்து, அல்வா பதத்துக்கு கிண்ட வேண்டும். பிறகு, ஆறவிட்டு பாட்டிலில் போட்டுவைத்து பயன்படுத்தலாம்.

பலன்:

தோல் பளபளவென்று மின்ன துணை புரியும்.

Offline MysteRy

கொள்ளு  மிளகு பொடி



தேவையானவை:

கொள்ளு, மிளகு  தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 5, உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், சீரகம்  தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு, எண்ணெய்  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

கொள்ளை நன்கு கழுவி, சுத்தம் செய்து ஈரம் போக உலர்த்தவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கொள்ளு, மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். ஆறவிட்டு பொடி செய்யவும்.

பலன்:

உடல் இளைக்க உதவும்.

Offline MysteRy

பச்சைப் பயறு  ராகி சாட்



தேவையானவை:

முளைக்கட்டிய ராகி (கேழ்வரகு)  ஒரு கப், முளைகட்டிய பச்சைப் பயறு  ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம், தக்காளி  தலா அரை கப், நறுக்கிய வெள்ளரிக்காய்  கால் கப், எலுமிச்சைச் சாறு, சாட் மசாலா  சிறிதளவு, ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை), பொரி, உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.

பலன்:

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். ஊளைச்சதை போடாமல் தடுக்கும்.

Offline MysteRy

இஞ்சி ரசம்



தேவையானவை:

இஞ்சி - 3 இன்ச் நீள துண்டு, தக்காளி - 3 (விழுதாக அரைக்கவும்), புளிக்கரைசல்  அரை கப், வேகவைத்த துவரம்பருப்பு  கால் கப், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை  சிறிதளவு, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள்  தலா கால் டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 2, மிளகுத்தூள்  அரை டீஸ்பூன், எண்ணெய்  சிறிதளவு, ரசப்பொடி, உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

இஞ்சியை நன்கு தோல் சீவி அரைத்து வடிகட்டி, சாற்றை தனியாக வைக்கவும். பாத்திரத்தில் புளிக்கரைசல், தக்காளி விழுது, வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, மிளகுத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து சேர்த்து, பின்னர் புளிக்கரைசலை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இஞ்சிச் சாறு, ரசப்பொடி சேர்த்துக் கிளறி  இறக்கவும்.

பலன்:

உடல் பொலிவு பெறும். ஜீரணத்துக்கு உதவும். வயிற்றுப் பொருமல் தீரும்.

Offline MysteRy

வாழைப்பூ துவையல்



தேவையானவை:

வாழைப்பூ (ஆய்ந்தது) ஒரு கப், மோர் கலந்த நீர்  தேவையான அளவு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு  தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய்-  4, புளி  சிறு நெல்லிக்காய் அளவு, தேங்காய்த் துருவல்-  2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை  ஒரு ஆர்க்கு, கடுகு  அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

ஆய்ந்த வாழைப்பூவை நன்கு கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்நிறமாக வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் வாழைப்பூவை சேர்த்து சுருள வதக்கி, பின்னர் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும். வதக்கிய கலவையுடன், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலையைத் தாளித்துச் சேர்க்கவும்.

பலன்:

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், சிறுநீரக கல் கரையவும் உதவும்.

Offline MysteRy

பாகற்காய்  பொட்டுக்கடலை பொரியல்



தேவையானவை:

 பாகற்காய்  ஒன்று, மோர் கலந்த நீர்  தேவையான அளவு, பொட்டுக்கடலை  கால் கப், காய்ந்த மிளகாய்-  3, பூண்டு - 4 பல், பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன், பச்சை மிளகாய்  ஒன்று, எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை  தாளிக்கத் தேவையான அளவு, உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

பாகற்காயை பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, மோரில் ஊறவைத்த பாகற்காயை எடுத்து இதனுடன் சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பாகற்காய் பாதி வெந்தவுடன், அரைத்த பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்றாகக் கிளறி பொன்நிறமாக எடுக்கவும்.

பலன்:

இமை முடி நன்கு வளரவும், தேமல் மறையவும் உதவும்.

Offline MysteRy

முருங்கைக்கீரை பருப்பு



தேவையானவை:

 முற்றாத முருங்கைக்கீரை (ஆய்ந்தது) - 2 கப், கடலைப்பருப்பு  அரை கப், காய்ந்த மிளகாய்  -2, கடுகு, பெருஞ்சீரகம்  தலா கால் டீஸ்பூன், பூண்டு - 4 பல் (மிகவும் பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு  தேவையான அளவு, 

செய்முறை:

கடலைப்பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து... மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறவும். அத்துடன் ஆய்ந்த முருங்கைக் கீரை சேர்த்து நன்கு கிளறி எடுத்து, சுடச் சுட பரிமாறவும்.

பலன்:

உடலில் ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும். ரத்தசோகை குணமாகும்