ஓடிக் கொண்டிருப்பவர்களே
எங்கே ஓடுகிறீர்கள்
எதற்காக ஓடுகிறீர்கள்
வாழ்க்கையை பிடிக்க ஓடுகிறோம்
ஆனால் அந்த வாழ்க்கையை
வாழ மறந்து ஓடிக் கொண்டிருக்கிறோம்
சுள்ளிப் பொருக்குகிறவன் கதை தான்
நம் கதையும்
குளிர் காய
சுள்ளிப் பொருக்குகிறவன்
சுள்ளிப் பொறுக்குவதிலேயே
காலத்தைக் செலவிடுகிறான் - அவன்
குளிர் காய்வதே இல்லை
உன்னை சுற்றியே உலகம்
ஆனால் நீயோ
உலகத்தை சுற்றி தேடிக் கொண்டிருக்கிறாய்
உன் மனைவியின் கொலுசில்
உன் குழந்தையின் சிரிப்பில்
உன் அண்டை வீட்டாரின்
கை அசைப்பில்
வாழ்க்கையின் சங்கீதமே அடங்கி இருக்கிறது
உனக்கு அது கேட்பதே இல்லை
கடிகார முள்ளாக
சுற்றி சுழல்பவனே
வட்டமடிப்பது வாழ்க்கை அல்ல
என்று எப்போது
உணரப் போகிறாய்
வயிற்றில் இருந்து தான்
நாம் வந்தோம்- ஆனால்
வாழ்க்கை வயிற்றுடன் மட்டும் இல்லை
வயிற்றை விட்டு
இதயத்துக்கு ஏறு-அங்கே
உனக்காக உனது
ராஜாங்கம் காத்துக்கிடக்கிறது